இலக்கிய வட்டம் - 4-01-09 - சிங்கப்பூர்
அனைவருக்கும்
வணக்கம். இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.
முதலில்
எதைக் குறித்து பேசுவது என்று நிறையவே யோசித்தேன். ‘காலம் தீர்மானிக்கும் நவீன இலக்கியம்’,
‘நவீன இலக்கியம் காட்டும் வெளிகள்’ என்று ஏதேதோ தோன்றியபடியே இருந்தது. குறிப்பிட்ட
காலவரையறுக்குள் பேசிப் பகிர்வதற்கேற்றது எது என்று தெளிவற்ற ஒரு நிலை. முன்னப்பின்ன
பேசிப்பழக்கமும் இல்ல. நவீன புனைவிலக்கியத்தில் பேசுபொருள் எனும் தலைப்பை ஒரு பொதுத்
தன்மையோடு தான் தெரிவு செய்திருக்கிறேன். நவீன இலக்கியத்தில் கருக்கள் என்றெடுத்துக்
கொண்டால் கவிதை, கட்டுரை, நாடகம் என்று எல்லாவற்றையுமே தொட வேண்டியிருக்கும். நேரமோ
போதாது. வெறும் fictional புனைவுகளை, அதில் குறிப்பாக சிறுகதை நாவல்கள் அடங்கிய உரைநடைகளைக்
குறித்து மட்டுமே பகிர நினைக்கிறேன். அதுவே
நிறைய இருக்கும் போலிருக்கிறது. படைப்பின் பின்புல அரசியலுக்குள்ளோ படைப்பு வெளியான
பிறகு கிளம்பிய அரசியலுக்குள்ளோ நான் போக விரும்பவில்லை. அது நமக்கு இங்கு தேவையுமில்லை.
எழுதுவதென்றால்
பக்கம் பக்கமாக எழுதிவிட முடிகிற எனக்கு பேச்சு என்று வரும் போது எப்போதுமே ஒரு தடுமாற்றம்
இருக்கும். வெகு நாட்களாக, ஒரு வருடமாக என்று சொல்லலாம். வெங்கட் என்னிடம், உன்னால்
பேச முடியும் பேசு என்று ஊக்குவித்தும் வற்புறுத்தியும் வந்தார். எனக்குப் பேச வராது
என்று எவ்வளவோ சொல்லிப் பார்த்தேன். ஹ¥ஹ¤ம் அவர் கேட்பதாக இல்லை. சரி, நான் பேசிக்
கேட்ட பிறகு, ‘இவள் பேச லாயக்கற்றவள்’ என்ற முடிவுக்கு அவரே வரட்டுமென்று தான் ஒத்துக்
கொண்டேன். நேற்றிரவு தான் மனதில் துண்டு துண்டாக ஓடிக் கொண்டிருந்தவற்றை முறையாகத்
தொகுத்துக் கொண்டேன்.
நான்
பேசப் போவது நவீன புனைவிலக்கியத்தின் வரலாறு இல்லை. ஆகவே, முறையான ஒரு வரிசையுமில்லை.
வரலாறென்று வரும் போது ஆண்டுகள் மிகத் துல்லியமாக இருக்க வேண்டும். அதற்கு அதிக நாட்கள்
உழைத்து குறிப்பெடுத்து தான் தயாராக முடியும். அவ்வாறான நோக்கில் நான் தயாராகி வரவில்லை.
அப்படிப் பேச நேரமும் அதிகமெடுக்கும். முக்கியமாக, கேட்பவர்களுக்கு அலுப்புத் தட்டும்.
இப்போது நான் ஐம்பதுகளில் தொடங்கி இன்று வரையிலான நவீன புனைவிலக்கியத்தின் பேசுபொருளைக்
குறித்து உங்களுடன் சிலவற்றைப் பகிர்ந்து கொள்ளவிருக்கிறேன். சொல்லவே வேண்டாம். நிச்சயமாக,
என் வாசிப்பைத் தாண்டியும் ஏராளமான நாவல்களும் சிறுகதைகளும் இருக்கும். நான் வாசித்தவற்றிலிருந்தே
கூட முழுமையாக எல்லாவற்றையும் ஓரிரு மணிநேரத்தில் தொட்டுப் பேச முடியுமா என்பது சந்தேகம்
தான். ஆகவே, முடிந்த வரையிலும் நினைவிலிருந்து தொகுத்தவற்றைப் பேசவே நினைக்கிறேன்.
நான் சொல்லப் போவதில் பல விஷயங்கள் உங்களுக்கு ஏற்கனவே கூடத் தெரிந்திருக்கலாம். அவற்றையே
மீண்டும் நான் சொல்லும் போது சலிப்புண்டாகலாம். மன்னியுங்கள். ஆனால், அது தவிர்க்க
முடியாதது.
முதல்
புலம்பெயர் நாவல் என்று சொல்லப்பப்படும் ‘புயலிலே ஒரு தோணி’யைக் குறித்து உங்களில்
பலர் கேள்விப் பட்டிருக்கலாம். நாற்பதாண்டுகளுக்கு முன் எழுதப்பட்ட இந்த நாவல் அக்காலகட்டத்
தமிழ் நாவல்களிலிருந்து மிகவும் வேறுபட்ட சாயலைக் கொண்டதென்பது உணரக் கூடியது. அதற்கு மிகமுக்கிய காரணமுண்டு. ப.
சிங்காரம் மிக இளம் வயதிலேயே இந்தோனேசியாவுக்கு
வேலைக்குச் சென்றவர். அவருக்குத் தமிழ் இலக்கியத்தோடு மிகக் குறைவான அறிமுகமே இருந்திருக்கிறது.
அவரது இலக்கிய அறிவு ஹெமிங்வேயையும் டால்ஸ்டாயையும் வேறு மேற்கத்திய எழுத்தாளர்களையும்
படித்து உருவாகியிருந்தது. புயலிலே ஒரு தோணியின் நாயகன் பாண்டியனும் சிங்காரத்தைப்
போலவே இளம்வயதில் வட்டிக்கடையில் வேலைச் செய்வதற்காக இந்தோனேசியாவுக்குக் கப்பல் ஏறியவன்.
சுபாஷ்சந்திர போசின் ஐ.என்.ஏ படையில் பங்கு கொண்டு தீவிர போராட்டத்தில் பங்கு பெரும்
நாயகன் பாண்டியன் நடத்தும் சாகசங்கள் நம்பமுடியாத வகையில், ஒட்டாமல் இருந்தாலும் நாவலின்
மற்ற பகுதிகள் யதார்த்தமாக இருக்கும். உரையாடல்களிலிருக்கும் வட்டாரவழக்குகள் சுவாரஸியமான
தென்கிழக்காசிய உணர்வை ஏற்படுத்தும். பர்மாவிலும் இந்தோனேஷியாவிலும், மலேயாவிலும்,
சுமத்திரா தீவுகளிலும் வாழ்ந்த தமிழர்களின் சுதந்திரத்திற்கு முன்பான நிலையை உலக யுத்த
போராட்டங்களோடு கற்பனை கலந்து சொல்லப் பட்ட ஒரு நீளமான கதை இது. கதையை முழுக்க சொல்ல
முடியாது. புலம்பெயர்ந்த தமிழர்களின் நினைவுகள் வழியாகச் சித்தரிக்கப்படும் எழுபதாண்டுகளுக்கு
முந்தைய தென் தமிழக கிராம/சிறுநகர வாழ்க்கை, செட்டியார்களின் வாழ்க்கை மற்றும் மொழி குறித்த துல்லியமான விவரிப்புகள், ஜப்பானியர் ஆக்கிரமிப்பு
போன்ற பலவற்றைக் கொண்ட இந்நாவல் தத்துவவிவாதங்களையும் அறம் அறிவு மூடநம்பிக்கை போன்றவற்றின்
மீதான கேள்விகளையும் எழுப்புகிறது.
புதுமைப்பித்தனில்
துவங்கி கா.நா.சு, குபாரா, கு.அழகிரிசாமி, சி.சு.செல்லப்பா போன்ற பலர் போட்ட அடித்தளத்தில்
உருவானதே இன்றைய நவீன தமிழ் இலக்கியம். அதில் மிக மிக முதன்மையானவர் சமூகச் சிக்கல்களை
மிகக் கூர்மையாக கதைகளில் சொன்ன புதுமைப்பித்தன். அவர் தான் நவீன கதையாக்கதுக்கும்
மொழியாட்சியிலும் முன்னோடி என்று தைரியமாகச் சொல்லலாம்.
டூரவாகி
விடுவதாலேயே சூரியன் இல்லாமலாகிவிடுவதில்லை. நாம் அறியாததாலேயே ஒரு விஷயம் இல்லாதிருக்காது.
பல படைப்புகளின் பேசுபொருள் பெரும் சர்ச்சைகளைக் கிளப்பியும், முகம் சுளிக்க வைத்துமிருக்கின்றன.
அதே படைப்புகள் காலப்போக்கில் இலக்கியமாக ஏற்றுக் கொள்ளவும் பட்டன. கரிச்சான் குஞ்சின்
இயற்பெயர் நாராயணசாமி. கும்பகோணம், தஞ்சாவூர் மாவட்டங்களில் வாழ்ந்த குடுமி, பஞ்ச கச்சத்தில்
இருந்த ஒரு தமிழாசிரியர் இவர். இன்றைக்கு தமிழின் முக்கிய நாவல்கள் என்று பட்டியலிடும்
பலரும் ஐம்பதுகளில் கரிச்சான் குஞ்சு எழுதிய ‘பசித்த மானுடம்’ நாவலைச் சேர்க்கிறார்கள்.
அதன் கதையோ அதற்கும் முன்பான காலத்துக்குள் விரிகிறது. இருள் நிறைந்த உலகிற்குள் நம்மை
உலாவக் கூட்டிக் கொண்டு போகும் எழுத்து இவருடையது. பெரும் முகச்சுளிப்பை ஏற்படுத்திய
இந்தக் கதை இரண்டு கதாப்பாத்திரங்களுடையது. ஏராளமான பாத்திரங்களுடனிருக்கும் இந்தக்
கதையில் ஓரினச் சேர்க்கைக் குறித்து அப்போதே எழுதியிருக்கிறார் என்பதை இந்நூலைப் படிக்கும்
ஒவ்வொரு முறையும் நான் வியந்ததுண்டு. அப்பட்டமாகச் சொல்லாவிடாமல் பட்டும் படாமலும்
அதே நேரத்தில் நம்பும் படி குறிப்பால் உணர்த்திருப்பார். சமூகத்தில் வெளிப்படையாக இல்லாமல்
இருக்கக்கூடிய ஒன்றை தான் உணர்ந்து கொள்வது ஒருபுறமிருக்கட்டும். அதை எழுத்தில் எழுதும்
துணிவு எத்தனை பேருக்கிருக்கும்? போகுமிடமெல்லாம் சேர்த்துக்கொள்ளும் பெண்களின் எண்ணிக்கை
லேசான அதிர்ச்சியைத் தரும். இதெல்லாம் சாத்தியமா என்று கூடத் தோன்றும். நம்முடைய வாழ்க்கை
முறைக்கு அப்பாற்பட்டது என்பதாலேயே அது அசாத்தியமாக இருக்கவேண்டியதில்லை என்பதும் புரியக்கூடியது.
இறுதியில் கணேசன் பாத்திரம் தொழுநோய்க்காட்பட்டு துறவுக்கு இணையான மனநிலைக்கு வந்துவிடும்.
ஒரு
சுவாரஸியமான அனுபவம் சமீபத்தில் நிகழ்ந்தது. சில சிறுகதைகளே எழுதியிருக்கும் ஓர் இளம்
எழுத்தாளர் என்னிடம் தன் சிறுகதைகளைக் கொடுத்து கருத்தும் ஆலோசனையும் கேட்டார். இது
எனக்கு அடிக்கடி நடக்கிறது தான். நானும் வாசித்துப் பார்த்துவிட்டு மொழியில் கவனம்
செலுத்துங்கள், மிகப் பழைய நடையிலிருக்கிறதென்றேன். உடனே, நான் ஆங்கிலச் சொற்கள் பயன்படுத்துவதில்லை.
அதனால் என் நடை உங்களுக்கு நவீனமாகப் படவில்லை போலும் என்றார். மொழி நவீனப் படுவதற்கும்
ஆங்கிலக் கலப்புக்கும் ஒரு தொடர்பும் இல்லை. தொடர்பு படுத்தி நினைப்பதே ஒருவித முதிர்ச்சியற்ற
சிந்தனையையே காட்டும். இந்த மாதிரியான ஒரு கருத்து நிலவுகிறது என்பதே எனக்கு கொஞ்சம்
ஆச்சரியம். எஸ்.ராமகிருஷ்ணன், பெருமாள் முருகன், கோணங்கி, ஜெயமோகன், யுவன் சந்திரசேகர்,
அ.முத்துலிங்கம் போன்றோரின் புனைவுகளைப் படித்தால் மொழி கொள்ளும் நவீனம் பிடிபடும்
என்று விளக்கினேன். வெகுஜன இதழ்களின் புனைவு மொழி, செய்தித்தொகுப்புக்குரிய மொழி, நவீன
புனைவுக்குரிய மொழிக்கூறுகள் போன்றவற்றைக் கூர்ந்து கவனித்தால், நான் சொல்வது புரியும்.
மிதவை,
மோகித்தே போன்ற ஆக்கங்களில் நாஞ்சில் நாடனின் புனைவுகள் சொந்த ஊரைவிட்டு வேறு ஊர்களில்
குறிப்பாக மும்பை நகரில் சொந்த ஊர் ஏக்கத்துடன் வாழும் பாத்திரங்கள் பற்றியது. வாழ்விடத்திலிருக்கும்
சவால்களை, நல்லவற்றைப் பேசும் வேளையில் அந்த ஊரின் அவலங்களையும் சொல்வார். குறிப்பாகச்
சொல்வதென்றால், மும்பாயில் நிலவும் கீழ்த்தட்டு மக்களின் கழிவறைப் பிரச்சனை. இவர் எழுதிய
பிறகே தமிழ் வாசகனுக்கு மும்பையின் பல அவலங்கள் தெரிய வந்தது. தலைகீழ் விகிதங்கள் மற்றும்
மிதவை அவருக்கு அதிக பெயர் வாங்கிக் கொடுத்திருந்தாலும் இவரது நூல்களில் எனக்கு மிகவும்
பிடித்தது எட்டு திக்கும் மதயானை. சொந்த கிராமத்தில் தான் செய்யாத ஒரு சிறிய பிரச்சனையில்
மாட்டிக் கொண்டு அடி வாங்கி, தன் பங்குக்கு பழிதீர்க்கும் ஆசையில் வைக்கோல் படலுக்கு
தீமூட்டிவிட்டு கட்டிய துணியுடனும் ஆயிரம் ரூபாயுடனும் ஊரைவிட்டு ஓடும் பூலிங்கத்தின்
கதை இது. நாவல் நெடுக ஓடிக்கொண்டே இருக்கும் பூலிங்கத்தின் அனுபவங்கள் நம்மில் சுவாரஸியத்தை
விட்டுச் செல்கின்றன.
சொந்தப்புனைவுகள்
மற்றும் மொழிபெயர்ப்பின் வழி தமிழ் வாசகனுக்கு கர்நாடகாவையும் அங்கிருக்கும் சமூகத்தையும்
கலாசாரத்தையும் பாவண்ணன் சொல்கிறார். இவரது பேசுபொருள் பெரும்பாலும் சமூகம் சார்ந்தவை.
அசோகமித்ரனோ செகெந்தராபாத் மற்றும் ஹைதராபாத் நகரங்களையும் கதாப்பாத்திரங்களையும் ஏராளமாகப்
பதிவு செய்துள்ளார். அதுவும் சுதந்திரத்துக்கு முன்பான காலகட்டத்தின் நகரும் நகரவாழ்க்கையும்
மத்திய வர்க்க பிராமணக் குடும்பப்பாத்திரங்களுமாகப் போகும் இவரது புனைவுகள். ஜெமினி
ஸ்டுடியோவில் வேலை செய்திருப்பதால், இவர் திரையுலக வாழ்வையும் தன் கதைகளில் எழுதியுள்ளார்.
அசோகமித்ரனின் வாசிக்க வேண்டிய நூல்கள் ‘தண்ணீர்’ மற்றும் ‘ஒற்றன்’. தண்ணீர் ஒரு சிறிய
நாவல். அதில் சென்னை நகரின் தண்ணீர் கஷ்டத்தை மிகமிகச் சிறப்பாக விவரித்திருப்பார்.
பெண்களே முக்கிய பாத்திரங்கள். தண்ணீர் கஷ்டம் சென்னையில் தீவிரம் கொள்ளும் முன்பே
எழுதப்பட்ட நாவல். அவ்வகையில் நூலாசிரியர் நிலமையை முன்னுரைத்ததாகவே சொல்லலாம். ஒவ்வொரு
அத்தியாயமும் தனித்து ஒரு சிறுகதையாக நிற்கக் கூடிய மாதிரியாகப் புனையப்பட்டது ‘ஒற்றன்’.
ஐயோவாவுக்கு எழுத்தாளர் மாநாட்டுக்கு அழைக்கப்பட்ட அசோகமித்ரன் அங்கே இருந்த சிலமாதங்களில்
எதிர்கொண்ட சுவாரஸியமான நிகழ்வுகள், வேற்றின மனிதர்கள் ஆகியோரையும் தான் புது இடத்தில்
பட்ட சிரமங்களையும் மிக அழகாகச் சொல்லியிருப்பார். ‘சாயத்திரை’உள்ளிட்ட பல்வேறு படைப்புகளிலும்
சுப்ரபாரதிமணியன் சாயக்கழிவுகளால் ஏற்படும் சுற்றுச்சூழல் மாசு, திருப்பூர் சாயப்பட்டறைகளையும்,
நெசவாளர்களையும், அந்தச் சமூகத்தின் வாழ்வை இவர் நிறைய எழுதியுள்ளார். இவரது சமீபத்து
நாவலான ‘ஓடும் நதி’, நாகாலந்து, செகந்திராபாத் மற்றும் திருப்பூர் ஆகிய மூன்று ஊர்களில்
விரியும் ஒரு பெண்ணைப் பற்றிய புது உத்தியிலான கதை.
பொதுவாக
நாடகத் தன்மையுடனான மொழி, வழக்கமான உவமைகள், துதிபாடுதல் போன்றவற்றைத் துறந்து நல்லனவற்றை
மட்டுமின்றி சமூக அவலங்களையும் அபத்தங்களையும் கூட கலையுணர்வோடு பேசும் நவீன புனைவுகள்
சமீப ஆண்டுகளின் நிறையவே மாற்றங்களைக் கண்டு வருகின்றன. நீதிபோதனைகள் இன்றைய நவீன இலக்கியத்திற்கு
ஒவ்வாதது. நேர்மறையானவற்ரை மட்டும் பேசி எதிர்மறைகளை மறைக்கும் பழக்கங்களும் நிறையவே
மாறிவிட்டன. நேர்மறைகள் இருக்கும் இதே உலகில் தானே எதிர்மறை விஷயங்களும் உள்ளன. அதைக்
கண்டு ஏன் ஓடவேண்டும் என்று கேட்பதே நவீன புனைவுகள். பேசுபொருளிலோ நியாய அநியாய அளவுகோல்களையும்
சரி தவறு எனும் பிரிவுகளையும் கடந்து நவீன புனைவுலகம் இயங்குகிறது.
பேசுபொருள்
குறித்து கிளம்பிய சர்ச்சைக்கு இன்னொரு மிகச் சிறந்த உதாரணம் எல்லோரும் அறிந்திருக்கும்
ஜெயகாந்தனின் ‘அக்னிப்பிரவேசம்’, ‘சில நேரங்களில் சில மனிதர்கள்’ போன்றவை. ‘அக்னிப்பிரவேசம்’
சிறுகதை பிரசுரமானபோது பெண்ணின் கற்பு என்பது குறித்து பெரும் அதிர்வுகள் ஏற்பட்டன.
பலரிடமிருந்தும் எதிர்ப்புகள் கிளம்பின. ஆனால், பிற்காலத்தில் பெண்களின் சிந்தனை மாற்றங்களை
அவர் முன்னுரைத்ததாகவே எனக்கு அந்தக் கதையைப் படிக்கும் போதெல்லாம் தோன்றும். அல்லது
ஆசிரியரின் அக்காலகட்டத்திலிருந்த விழைவு wishful thinking என்றும் கொள்ளலாம். காலப்போக்கில்
சிந்தனை மாற்றங்கள் சமூகத்தில் நிகழ ஆரம்பித்த போது அதை மனம் சார்ந்ததாகப் பார்க்கவும்
ஏற்கவும் மக்கள் ஆரம்பித்தார்கள். புதிதாய் ஒரு விஷயத்தை எழுத்தாளன் முன்னுரைக்கும்
போது வரும் சலசலப்புகள் மறைந்து எழுத்தானது நிலைபெறத் தான் செய்தது. இருப்பினும், புரட்சிகரமாக
எழுதக் கூடிய ஜெயகாந்தன் ஏன் கங்காவை காசிக்கு விரட்டுகிறார் என்பதைக் குறித்து நான்
மிகவும் யோசித்திருக்கிறேன். ஏன் கங்காவுக்கு நம் சமூகத்தில் இடம் கிடையாதா? பழமையைப்
பின்பற்றி அவள் காசிக்குப் போய் தலைமறைவாகியே தீரவேண்டுமா? எதற்கு? பாவத்தைக் கழுவவவா?
எந்த பாவத்தை? தெருவில் போன எவனோ செய்த பாவத்தையா? பின்னாளில் அவரே கூட இந்த மாதிரியெல்லாம்
யோசித்திருக்கலாம். இது எல்லா எழுத்தாளர்களுக்கும் நடப்பது தான்.
பொதுவாக,
தமிழர்களாகிய எமக்கு ஒரு விநோத மனோபாவமுண்டு. அதாவது, சமூகத்தில் ஆங்காகே இலைமறைவு
காய் மறைவாய் இருக்கும் விஷயங்களை அறிந்தும் அறியாதது போன்ற பாவனையுடன் ‘கலாசாரக் காவலர்கள்
நாங்கள்’ என்ற பிம்பத்துடன் திரியப் பிடிக்கும். அதுவே, யாரேனும் பளிச்சென்று எழுதிவிட்டால்
தாம்தூமென்று குதிப்போம். சினிமாத் திரையில் முக்கால் நிர்வாணத்தில் நாயகியைப் பார்க்க
ஆசைப்படும் தமிழன், அவள் மேடையிலேறும் போது முழுக்க போர்த்திக் கொள்ள வேண்டுமென்று
நினைக்கிறான். அவ்வாறு வராவிட்டாலோ சர்ச்சையைக் கிளப்பி தனது ‘கலாசாரக் காவலர்கள் நாங்கள்’
என்ற பிம்பத்தை முன்னிருத்துகிறான். இதன்மூலம் அவளை அவளாக இருக்க விடாமல் குழப்பியிருப்பான்.
நவீன புனைவிலகியத்துக்கும் இது ஓரளவிற்குப் பொருந்தும்.
தொழில்நுட்பம்
தவிர வேறு எதிலுமே கிரமங்கள் பெருநகரங்களிலிருந்து மாறுபடுவதில்லை என்றே நான் எப்போதும்
நினைப்பதுண்டு. பாலியல் சார்ந்த எழுத்துக்களில் சமீப ஆண்டுகளாக ஜே.பி.சாணக்கியா சிறப்பாக
எழுதுகிறார். ‘கனவுப்புத்தகம்’ எனும் இவரது சிறுகதைத் தொகுப்பில் இவர் எழுதியுள்ள சிறுகதைகள்
தொடர்ந்து நவீன இலக்கியங்கள் வாசிப்பவருக்கு இயல்பான அனுபவத்தையே கொடுக்கின்றன. உள்ளடங்கிய
ஊர்களிலும் கிராமங்களிலும் அன்றாட வாழ்வின் தடம்புறண்டதாக நினைக்கூடிய உறவுச்சிக்கல்களைப்
பேசும் இவரது சிறுகதைகள் புதிய வாசகர்களுக்கு லேசான அதிர்ச்சியை அளிக்கலாம். கதையின்
கரு வேண்டி நிற்கும் மொழியைக் கொண்டது இவருடைய எழுத்து சிலரின் போலியான ஆபாச மொழியை
மட்டுமே நம்பி கதையை உருவாக்கும் போர்னோ எழுத்துவகையிலிருந்து வேறுபட்டது.
மோகமுள்,
செம்பருத்தி, அம்மா வந்தாள், மரப்பசு போன்ற முக்கிய படைப்புகளைத் தந்த தி.ஜானகிராமன்
அந்நாளிலேயே திருமணத்திற்கு வெளியில் ஏற்படும் உறவு, தன்னைவிட ஒன்பது பத்து வயது மூத்தவளை
மோகிக்கும் உறவு என்று நிறை எழுதியிருப்பார். பாலியல் ஏதுமற்ற அவரது எழுத்துக்கள் அவ்வாறான
உறவுகளையும் கதாப்பாத்திரங்களையும் லேசாக உயர்த்திப் பிடித்திருக்கும். அதே வேளையில்
ஒரு துளிகூட உயர்த்தினால், நம்பகத் தன்மையை இழந்துவிடும் எல்லைக் கோட்டின் மேலேயே அவர்
நடப்பதையும் வாசிக்கும் நம்மால் துல்லியமாக உணர முடியும். ‘மரப்பசு’ நாவல் பேசியதோ
கொஞ்சம் மாறுபட்ட ஒரு பெண்ணைக் குறித்து. ஆண்பெண் பேதமின்றி எல்லோரையும் அபரிமிதமாக
நேசிக்கும் அவளின் நிபந்தனைகளற்ற அன்பைக் குறித்து. முக்கியமாக, எல்லோரையும் தொட்டும்
அணைத்தும் பேச விரும்பும் அவளது இயல்பு குறித்து.
நீலபத்மநாபன்
எழுதிய பள்ளிகொண்டபுரம் நாவலிலும் சிக்கலான உறவே முக்கிய இழை. பின் வந்த காலங்களில்
பெண்களைக் கவர்ந்த எழுத்தாளராக உருவான பாலகுமாரன் பெண்களின் உளச்சிக்கல்களையும் சமூக
சவால்களையும் மனவோட்டங்களையும் எழுதினார். பெண் குடும்பத்தில் சமூகத்தில் சந்திக்கும்
இடர்கள் சவால்களைச் சொல்லி, அவள் மீண்டெழும்படியாக எழுதுவார். அதற்கு ஒரு ஆண் உந்துசக்தியாக
இருப்பான். பாலகுமாரன் பாலியலுக்குள் புகவில்லை என்பதே என் கருத்து. இருப்பினும், அவரது
எழுத்தை மிகவும் வெளிப்படையென்று நினைப்போரும் உண்டு. பெண்ணினத்தை மகிழ்விக்கவும் விதந்தோதவும்
என்றே லேசாக மிகைப்படுத்தி எழுதுவார் என்றே நான் கணித்து வைத்திருக்கிறேன். பெண்கள்
பரவலாக விரும்பிப் படிக்கவென்றே ஒரு உள்நோக்கத்தோடு அவர் அதைச் செய்திருக்க வேண்டும்
என்பது என் அனுமானம். அதில் தவறில்லையென்றாலும் இவ்வாறான நோக்கங்களுடன் எழுதும் எழுத்தில்
எனக்கு நம்பிக்கையில்லை.
ரப்பர்,
விஷ்ணுபுரம், பின் தொடர்ந்து வரும் நிழலின் குரல், காடு, கன்யாகுமரி என்று ஏராளமான
புனைவு நூல்களை எழுதியிருக்கும் ஜெயமோகனின் ஏழாம் உலகம், நாம் அறியாத ஓர் உலகத்தை நம்
முன் காட்சிப் படுத்தி மிரட்டுகிறது. முடமாக்கப் பட்ட மனித உயிர்களும் முடமாகவே பிறந்த
உயிர்களையும் ‘உருப்படிகள்’ ளாக்கி விலங்குகள் போல உணவிட்டு வளர்த்து, பழனியில் பிச்சையெடுக்கவென்று
செய்யப்படும் பெரிய வணிக வலையை அறியும் ஒவ்வொரு வாசகன் மிரண்டு போவான். ஜெயமோகன் சிறுதெய்வங்கள்,
மலை வாழ்மக்கள், யட்சிணிகள் போன்றவை குறித்து நிறைய எழுதுவார். காடுகள் குறித்தோ மிகமிக
ஏராளமாக. சமீபத்தில் இவர் எழுதிய காமரூபிணி, ஊமைச் செந்நாய், மத்தகம் ஆகியவை மிகுந்த
வரவேற்பைக் கண்டு வருகின்றன. யானையைக் குறித்து உலகளவில் ‘மத்தகம்’ (குறுநாவல்) போல
இன்னொரு படைப்பு எழுதப்பட்டிருக்குமா என்று மிகமிகச் சந்தேகம் தான். யானையை யாருக்குதான்
பிடிக்காது! நட்பு, காமம், காதல், சோரம், வாள்வீச்சு என்று அத்தனையும் அற்புதமாக வடிக்கப்பட்டிருக்கும்
இந்தக் குறுநாவலில் யானையைக் குறித்து எத்தனையெத்தனை நுட்பமான விஷயங்கள்! யானை தூங்கியெழுந்ததும்
அதிகாலையில் முதல் மூத்திரம் பெய்துவிட்டு, நீர்நிலையைக் காணும் வரையில் எத்தனை நேரமானாலும்
தன் இரண்டாவது மூத்திரத்தைப் பெய்யாது என்று உங்களுக்குத் தெரியுமா. தெரிந்ததும் மிகவும்
ஆச்சரியப் பட்டேன். அதனால் தான் அது தன் பாகனை எழுப்புமாம் குளிக்கக் கிளம்பவென்று.
http://jeyamohan.in/
சு.சமுத்திரம்
எழுதிய வாடாமல்லி அணும் இல்லாமல் பெண்ணும் இல்லாமல் பிறந்த ஒரு நபர் குறித்த முக்கிய
நாவல். சமூகமும் குடும்பமும் புறக்கணித்த இவர் தில்லிக்குப் போய்சேர்ந்து எப்படி தன்
பிறப்புறுப்பை ஒரு சடங்கு மூலம் அறுத்தெறிந்து பால்மாற்றம் கொள்கிறார் என்பதைப் பேசும்
நாவல். குரலை உயர்த்தாமலே உருக்கமாக எழுதப்பட்டிருக்கும்.
நவீன
இலக்கியப் புனைவுகளுக்கு பண்பட்ட உரைநடை மொழி, பல்வேறு உத்திகள், பாத்திர வார்ப்புகள்,
சொல்லாதப்படாத சொற்கள், குறியீடுகள், விவரிக்கும் காட்சிகள், படிமங்கள் என்று நிறைய
விஷயங்கள் உதவினாலும் கூட பேசுபொருள் காலத்துக்கு காலம் மாறியபடியே தான் இருந்து வந்துள்ளது.
சமூக மாற்றங்கள் மற்றும் அரசியல் மாற்றங்கள் இந்தப் பேசுபொருளைத் தீர்மானித்து வந்துள்ளன.
நவீன இலக்கிய மொழி தன் குரலை உயர்த்துவதில்லை. உணர்ச்சிவசப் படுவதுமில்லை என்பது என்
சொந்தக் கணிப்பு. எழுத்தாள வாசகக் கூட்டணியில் இயங்க வேண்டியதாக இருக்கிறது நவீன இலக்கியம்.
இதைப்புரிந்த வாசகன் புரியாம எழுதறார் என்று சொல்லமாட்டான். வாசிப்பில் தனக்கான வேலையை
உணராதவனோ அதைச் சொல்வான். சொல்வதுடன் விலகியும் பின்னோக்கியும் போவான் என்பது என் அனுமானம்.
கிளீஷேக்களாகக் கருதப்படும் கண்கள் பனித்தன, கண்ணைக்கட்டி காட்டில் விட்டது போல, நகமும்
சதையும் போல என்பவை பண்பட்ட நவீன புனைகள் தவிர்த்துவிடும். புதுவித originalityயுடனான
உவமைகளை ஏற்கும். அற்புதமான புது உவமைகளுக்கு நல்ல எடுத்துக்காட்டு ஜெயமோகனின் ஊமைச்செந்நாய்
குறுநாவல்.
அம்மாமி
கதைகள் என்று பலராலும் விமரிசிக்கப்பட்ட லக்ஷ்மியின் நாவல்கள் அந்தக் காலகட்டத்தில்
பெரிய வாசகப் பரப்பைக் கொண்டிருந்தது. அந்நூல்களை ஆண்களும் வாசிக்க கண்டதுண்டு. பெருபாலான
கதைகளின் நாயகி நிறைய கண்ணீர் வடிப்பாள். சதா கஷ்டங்கள் அனுபவிப்பாள். அவ்விதத்தில்
இந்தக்காலத்துக்கு டீவீ சீரியல்களுக்கு முன்னோடியோ என்று நினைத்தாலும், டீவீ சீரியல்களில்
ஆபாசமான விதத்தில் கொடுக்கப்படும் குரோதங்கள் லக்ஷ்மியின் எழுத்துக்களில் கிடையாது.
பின்னால் வந்த சிவசங்கரி ஓரளவிற்கு சமூகச் சிடுக்குகளை எடுத்தாண்டு எழுதினார். ராஜம்
கிருஷ்ணன் களப்பணி மேற்கொண்டு தரமான நாவல்களைக் கொடுத்தார். குறிப்பாக, நீலகிரி மலைத்
தொடரின் ‘தோடர்கள்’ என்றறியப்படும் மலைவாழ் மக்களைப் பற்றி ஆய்வு மேற்கொண்டு இவர் எழுதிய
நாவல் மிகவும் முக்கியமான ஆக்கம்.
வாஸந்தி
எழுதிய ‘அம்மிணி’ எனும் நாவல் ஆணாதிக்கசிந்தனையை அருமையாகச் சொல்லியிருக்கும். மனைவியை
இழுந்து நிற்கும் ஒருவன் தன் இளம் குழந்தைகளைப் பார்த்துக்கொள்ளவென்று வரவழைக்கும்
ஒரு பெண்மணியை கொஞ்ச காலத்திற்குப் பிறகு தன் இச்சைக்குட்படுத்துவான். தொடர்ந்தும்,
அவளைப் பயன் படுத்தி அடுத்தடுத்து சில கருக்கலைப்புகளையும் செய்விப்பான். கடைசிவரை
அவன் அவளது மனதைப் புரிந்து கொள்ளத் தவறிவிட்டிருப்பான். பிள்ளைகள் அவளிடத்தில் ஒட்டுதலாக
இருக்கும்.
தமிழில்
பெண்ணிய எழுத்துக்கு முன்னோடி என்று அம்பை எனும் புனைப்பெயரில் எழுதும்
C.S.Lakshmi யைச் சொல்லலாம். ஆசாரமான ஒரு பிராமண குடும்பத்தில் பிறந்த இவர் காட்டில்
ஒரு மான், வீட்டில் மூலையில் ஒரு சமயலறை, சிறகுகள் முறியும் உள்ளிட்ட படைப்புகளில்
மேல்தட்டு வர்க்கத்துப் பெண்களின் குரலில் பெண்ணியத்தைச் சொன்ன மாதிரி வேறொருவர் சொன்னதில்லை
என்றே நான் கருதுகிறேன். அம்பை தானே அறியாமல் மெதுவாக பழமைக்குத் திரும்புகிறார் என்று
கருதும் சில வாசர்களும் உளர்.
சிவகாமி
மற்றும் பாமா பேசிய பெண்ணியம் தலித் இலக்கியத்தின் ஒரு பகுதியான. ஒடுக்கப்பட்ட ஒரு
இனத்தின் பெண் குரலாக வெளிப்பட்ட இவர்களது எழுத்துக்கள் வெளிப்படையாகவும் கூர்மையாகவும்
அக்கறைக்குரிய விஷயங்களைத் தொட்டன.
உனக்கு
நடந்ததா என்று பெண் எழுத்தாளர்களை தற்மசங்கடத்தில் ஆழ்த்தும் சில வாசகர்கள் உணரத் தவறுவார்கள்.
சொந்த அனுபவங்களை மட்டுமே எழுதுவதென்றால் ஓரிரு சிறுகதைகளுக்குப் பிறகு பேனாவை மூடிவைக்க
வேண்டியதுதான். அப்படிக்கேட்கும் வாசகனை மன்னிக்கலாம். அப்படிக்கேட்கும் சக எழுத்தாளனை
என்ன செய்யலாம்? வேண்டுமென்றே கேட்பவர்கள் கலகத்துக்கு அலைபவர்கள் என்று விடவேண்டியது
தான். இதே விஷயம் பல்வேறு அடுக்கடுக்கான பல தளங்களில் விவாதத்துக்குரியன.
படைப்பாளியாக
புனைவினுள்ளிருக்கும் கதாப்பாத்திரமாக எப்படியிருந்தாலும் பெண்ணுக்கு இருக்கும் சமூக
ஓரவஞ்சனைகள் அங்கீகரிப்பிலும் தொடர்கிறது. இதில் அதிக மாற்றங்கள் தேவையாக இருக்கிறது.
ராஜ்கௌதமன்,
ஆதவன் தீட்சண்யா, பெருமாள் முருகன், அழகிய பெரியவன் போன்ற பலரும் கூட ஒடுக்கப்பட்ட
தலித் மக்களின் அக்கறைக்குரிய குறைகளையும் அவலங்களையும் பதிவு செய்கின்றனர். வெறும்
பதிவுகளாக மட்டுமின்றி படைப்பாகவும் இலக்கிய ஆக்கங்களாகவும் இவர்களிடமிருந்து தமிழுக்குக்
கிடைத்து வருகின்றன.
தில்லியின்
மேல்மத்திய வர்க்கத்தின் வாழ்க்கையை சுவாரஸியங்களுடனும் லேசான விடலைக் குறும்புகளுடன்
அவருக்கேயான ஒரு மொழியில் ஆதவன் தன் ‘என் பெயர் ராமசேஷன்’, ‘காகித மலர்கள்’ உள்ளிட்ட
பல நாவல்களிலும் சிறுகதைகளிலும் எழுதியிருப்பார்.
‘குழந்தைகள்
பெண்கள் ஆண்கள்’, ‘ஒரு புளியமரத்தின் கதை’, ‘ஜே ஜே சிலகுறிப்புகள்’ போன்ற நாவல்களையும்
நிறைய சிறுகதைகளையும் எதார்த்தமான மொழியில் எழுதிய சுந்தரராமசாமி மறைவதற்கு கொஞ்ச காலம்
முன்னர் எழுதிய சிறுகதை ‘பிள்ளைகெடுத்தாள் விளை’ மிகப்பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
தங்கக்கண் எனும் பாத்திரத்தால் சொல்லப்படுவது போல் நகரும் இந்த கதையில் தாழ்த்தப்பட்ட
ஜாதியைச் சேர்ந்த ஒரு பெண் -- அதாவது தலித் பெண் -- படிப்பறிவு பெறுவாள். ஊருக்கு வந்த
ஒரு ஜெர்மன் பாதிரியார் அவளுக்கு படிப்பு சொல்லிக் கொடுக்க முன்வருவார். முதலில் எதிர்ப்பு
தெரிவிக்கும் அவளது சமூகம் பின்னர் ஒத்துக் கொள்ளும். ஆனால், அவள் பெரியவளானதும் படிப்பு
கொஞ்ச காலம் தடைப்படும். பாதிரியாரே அவள் இருப்பிடத்துக்கே வந்து சொல்லித்தர ஒப்புக்
கொள்வார். அனுமதி கொடுக்கப் பட்டதும் தாயம்மா என்ற அந்தப் பெண் ஆங்கிலம், கணிதம், விஞ்ஞானம்
போன்ற பாடங்களை பத்து ஆண்டுகள் அவரிடம் கற்றுத் தேர்வாள். அவளது படிப்பு காரணமாக அவளுக்கு
திருமணம் ஆவது தடைபடும். முதிர் கன்னியான அவள் அந்த ஊர் பள்ளிக்கூடத்தின் தலைமை ஆசிரியையாகவும்
ஆக்கப்படுவாள். வருடங்கள் உருண்டோடும். ஆனால் ஐந்தாம் வகுப்பில் சேர்ந்திருந்த மணிகண்டன்
என்ற அரசியல் வாதி ஒருவன் அவள் தன் மகனை பாலியல்
பலாத்காரத்துக்கு உட்படுத்தியதாக புகார் கொடுப்பான். ஊர்ப்பெரியவர்கள், நிர்வாகம் எல்லாம்
சேர்ந்து அவளை கம்பால் வாயிலும் மார்பிலும் அடித்துத் துன்புறுத்த, அவள் ஊரை விட்டே
ஓடிவிடுவாள். எண்பது வயது கிழவியாக 53 ஆண்டுகள் கழித்துத் திரும்பி வருவாள். அப்போது
உயிரோடு இருக்கும் சிலர் அவளை வார்த்தைகளாலும், சில கட்டுப்பாடுகளாலும் துன்புறுத்துவர்.
கடைசியில், அவள் இறந்தும் போவாள். இந்த விஷயத்தை ரொம்ப வருத்தமுடன் தங்கக்கண் ஊர்ப்
பெரியவர்களிடம் சொல்லிக் காட்டுவதாக கதை அமைக்கப்பட்டுள்ளது. சின்னப் பையனை அவள் கெடுத்ததால்
அந்த ஊருக்கே 'பிள்ளை கெடுத்தாள் விளை' என்று
பெயர் வருகிறது! இந்தக் கதை தலித் படைப்பாளிகள் வட்டங்களில் பெரும் அதிர்வுகளை ஏற்படுத்தியது.
ஆங்காகே விவாதங்கள், சர்ச்சைகள் நடந்தேறின.
கசாப்புக்கடைக்காரனின்
நியாயம் ஆட்டுக்கு அநியாயம், பாம்பின் பசி எனும் நியாயம் தவளைக்கு அநியாயம் என்றெல்லாம்
இருக்கும் நிலையில் நியாயத்துக்கும் அநியாயத்துக்கும் அளவுகோள் தான் என்ன என்ற கேள்வி
முன்நிற்கிறது. நவீன புனைவுகளில் நியாய அநியாயங்களென்றோ நல்லது கெட்டதென்றோ படைப்பாளி
மறந்தும் சுட்டுவதில்லை. வாசகனின் அனுபவத்தைப்பொருத்து சீர்தூக்கி சிந்தித்துக்கொள்வான்
என்று நம்பும் படைப்பாளில் வாசகனைத் தன் கூட்டாளியாகவே காண்கிறான்.
வண்ணதாசனின்
ஏராளமான சிறுகதைகளில் அன்பைத் தவிர வேறொன்றை நாம் காணமுடியாது. அதற்கேற்ற பூச்சுக்களற்ற
எளிய மொழியுமிருக்கும். திருநெல்வேலி வட்டாரத்தின் ஒரு வட்டிக்கடைக் குடும்பத்தின்
நான்கு தலைமுறைக் கதையை புலிநகக்கொன்றையில் வாசிக்கும் போது பலவரலாற்றுத் துளிகளும்
சுவாரஸியம் சேர்ப்பதை உணரலாம். ஆ.மாதவன் எழுதிய கிருஷ்ணப்பருந்து நாவல் சிறந்த நாவல்
பட்டியலில் திரும்பத் திரும்ப வருவது. இதில் கிருஷ்ணப்பருந்து என்று ஒன்று வராது. முக்கிய
பாத்திரம் மனைவியை இழந்த நடுவயது பிரமச்சாரி. அவருக்குள் அவ்வப்போது எழுந்து இம்ஸிக்கும்
காமத்திற்கு கிருஷ்ணப்பருந்தை ஒரு குறியீடாக்கி அந்தப் பெயரை வைத்திருக்கிறார்.
மார்க்வேஸ்ஸின்
‘நூற்றாண்டுத் தனிமை’யால் தாக்கம் கொண்டு எஸ்.ராமகிருஷ்ணன் தனது நெடுங்குருதி நாவலை
எழுதியிருக்கிறார். அதே போல உப பாண்டவம் போன்ற சில ஆக்கங்களில் அவன் புராண இதிகாஸங்களை
மீட்டுருவாக்க செய்தெழுதுவார். மொழியும் நவீனமாக இருக்கும். வாழ்க்கையில் தோல்வியுற்ற
சம்பத் எனும் கதாபாத்திரத்தின் கதை ‘உறுபசி’. இதில் கதைக்கேற்ற வறண்ட மொழியைக் கையாண்டிருப்பார்.
நாவலின் ஒட்டுமொத்த கட்டமைப்பும் உத்தியும் கூட புதியது. நண்பன் சம்பத்தின் மரணத்துக்குப்
பிறகு, ஒரே இடத்தில் நண்பர்கள் கூடி இருந்து நினைவுகளில் திளைப்பதுபோல அவனது மரணத்துக்கு
முன்பான வாழ்வு சொல்லப்பட்டிருக்கும். Idealism என்பதை முற்றிலும் நிராகரித்து முற்காலத்து
நவீன புதினங்களுள் ஒன்றான நா.பாவின் ‘குறிஞ்சி மலர்’ ருக்கு நேர் எதிராக இயங்கும் உறுபசி.
முன்பெல்லாம் புனைவுகளில் இருந்த குறைகளற்ற கதாநாயகனோ கதாநாயகியோ நவீன புனைவுகளில்
இருப்பதில்லை. முற்றிலும் நல்லவனுமில்லை முற்றிலும் கெட்டவனுமில்லை என்ற எதார்த்தை
ஏற்று இயங்குவதே நவீன புனைவுகள். நல்லவற்றை சொல்லும் வேளையில் சமூகத்தில் தீயவை என்றறியப்படுபவற்றையும்
சொல்ல நவீன புனைவாளன் தயங்குவதில்லை. ரோஜா இதழ்களிலிருந்து வாசனைத் திரவம் தயாரிக்கும்
ஒரு இஸ்லாமிய குடும்பத்தை மயமாகக் கொண்டிருக்கும் எஸ்.ராமகிருஷ்ணனின் சமீபத்து நாவலான
யாமம் சென்னையின் நூற்றாண்டுகால வரலாற்றுக் கூறுகளில் சிலவற்றை கொண்டியங்குகிறது.
தமிழைத்
தன் தாய்மொழியாகக் கொள்ளாத ஒரு மார்வாடிக்காரர் ஜெகதீஷ். தமிழின் மீது இவர் கொண்டிருக்கும்
பற்று ஆச்சரியமானது. இவர் எழுதிய கிடங்குத் தெரு வணிக உலகில் உலவும் அறிவு ஜீவி ஒருவனின்
உளச்சிக்கலை மிக அழகாகச் சொல்லும். அதே போல, திலீப்குமாரும் ஒரு குஜராத்தி. அவர் எழுதிய
சிறுகதைகளில் சில மிகவும் பேசப்படுபவை. இவர் சென்னையிலிருக்கும் தனது சமூகத்தினரின்
வாழ்க்கையை நகைச்சுவையோடு பதிவார்.
கல்கி,
சாண்டில்யன் போன்றோர் காலத்தால் மின் நோக்கிப் போனார்கள். வரலாற்றைக் கையிலெடுத்து
புனைவுகளில் பரப்பியெழுதியதை நாம் யாவருமே அறிந்தது தான். பிரெஞ்சு ஆட்சியின் கீழ்
இருந்த பாண்டிச்சேரியைச் சேர்ந்த பிரபஞ்சன் தன் புனைவுகளில் பாண்டிச்சேரியை, அதன் கலாசார
சுவாரஸியத்தை எழுதுவார். இவரின் எழுத்தில் அந்தக் கலாசாரத்துக்கே உரிய மொழி, சமையல்,
பழக்க வழக்கங்கள் இயல்பாகப் பொருந்தியிருக்கும். அவரது மானுடம் வெல்லும் முக்கிய சரித்திர
நாவல். பாண்டிச்சேரியிலிருந்து புலம்பெயர்ந்து பிராஸில் வசிக்கும் நாகரத்தினம் கிருஷ்ணாவும்
பாண்டிச்சேரி, பிரான்ஸ் தேசத்து கலாசாரங்களைத் தொட்டெழுதுகிறார்.
யூமா
வாசுகியின் ரத்த உறவு எனும் நாவல் வறண்ட மொழியில் ஒரு குடும்பத்தலைவனின் மூர்க்கத்தையும்
குடிப்பழக்கத்தையும் பேசும். அவனது அந்தப்பழக்கங்களும் அவனது அம்மா அவன் மனைவி குடும்பத்தின்
மீது கொண்டிருக்கும் பழியுணர்ச்சியும் சேர்ந்து ஒரு குடும்பத்தை அழித்த கதை இது.
ஆடுமாடு
மேய்க்கும் சமூகம் பற்றிய ‘கூளமாதாரி’ எழுதிய பெருமாள் முருகன் 2007 எழுதிய நாவல் கங்கணம்.
சமீபத்தில் நான் வாசித்த நாவல்களில் என்னை மிகவும் கவர்ந்த நாவல் இது. பெரும்பாலும்
ஒடுக்கப்பட்டவர்களின் குரலாக எழுதும் பெருமாள் முருகன் இதில் அதை மறந்து ஒரு ஆணின்
குரலில் புனைந்திருப்பார். பெண்ணுக்கு மணமாகாதது குறித்தும், முதிர்கன்னி என்ற சொற்றொடரும்
நாம் கேள்விப்பட்டிருப்போம். மணமாகாத ஆணை சமூகம் பார்க்கும் பார்வை எப்படியானதாக இருக்கும்?
‘கங்கணம்’ நம் முன்னால் அவ்வுலகை விரித்து நிறுத்துகிறது. கௌண்டர் இனத்தைச் சேர்ந்த
ஒரு ஆண் 42 வயது வரை திருமணமாகாமல் இருந்து படும் கஷ்டங்களைச் சொல்லியிருப்பது மிகச்
சிறப்பாக இருக்கும். தொடர்ந்து நிறுத்தாமல் பெண் தேடியும் கிடைக்காமலே இருக்கும். கிடைத்தால்,
உப்புச்சப்பற்ற காரணங்களால் தடைபடும். சமூகத்தில் பெண்குழந்தை பெற்றுக்கொள்வது குறைந்து
போனது என்பதையும் பெண்ணென்று அறிந்து கருவிலேயே அழிப்பது, பிறந்த பிறகு பெண்ணென்றால்
கள்ளிப்பால் கொடுத்துக் கொல்வது என்றிருக்கும் நிலையில், ஊரில் ஒரு பெண்ணுக்கு நாலைந்து
ஆண் என்ற விகிதத்தில் இருப்பதை எண்ணிக் கவலை கொள்ளும் இவன் திருமணம் செய்து வரிசையாய்
பெண்பிள்ளைகளைப் பெற்றுப் போட நினைத்துக் கொள்வான். பெண்சிசுக்கொலை கொணரக்கூடிய மிகப்பெரிய
சமூக பாதிப்பைப் பேசும் புதினம் இது என்று சொல்லலாம். இறுதியில், திருமணம் காப்பு கட்டுவது
வரை வந்தபிறகு, அடுத்தநாள் தாலிகட்டவிருக்கும் நிலையில் அவனது பாட்டி இறப்பாள். அதைச்
சொல்லாமல் மறைக்க முயன்றும் அவன் அறிய நேரும். அப்போது காப்பு கட்டியபிறகு மண்டபத்தை
விட்டு வெளியேறக்கூடாது என்று சொல்லித் தடுத்து நிறுத்துவார்கள்.
இஸ்லாமிய
சமூகத்தினருக்கென்று அவர்களின் கலாசாரமும் மொழியும் கொண்ட எழுத்துக்கள் நிறைய உண்டு.
தோப்பில் மீரான் எழுதிய சாய்வு நாற்காலி, துறைமுகம் உள்ளிட்ட நாவல்களும் கன்யாகுமரியின்
கடலோர கிராமங்களில் வாழும் இஸ்லாமிய சமூகத்தைக் குறித்து, குறிப்பாக பொருளாதாரத்தில்
பின்தங்கிய அடித்தட்டு எளிய மக்களை மிகுந்த பரிவோடும் மனிதநேயத்தோடும் பேசும். பேராசிரியர்
நாகூர் ரூமியும் எழுதியுள்ளார். அவரது ‘தூரம்’ எனும் சிறுகதை பெண்ணியம் பேசும் சுவாரஸியமான
எனக்குப் பிடித்த சிறுகதை. இவரது குட்டியாப்பா எனும் சிறுகதை மிகப்பரவலாகப் பேசப்பட்டது.
கீரனூர் ஜாகிர்ராஜா என்பவரின் மீன்காரத்தெரு, கருத்த லெப்பை ஆகியவையும் இப்போது கவனம்
பெற்று வருகின்றன. இவரது எழுத்துக்களில் தன் சமூகத்தின் பழக்கவழக்கங்களைச் செல்லமாகக்
கேலி செய்யும் சுவாரஸிய குரல் கேட்கும்.
நவீன
புனைவுகளில் வாசகன் எதிர்பார்ப்பது எதை? ஏற்கனவே அறிந்த விஷயமாகவே இருந்தாலும் கொடுக்கும்
விதத்தில் புதுமையை. அது தனக்கு எவ்வாறான அனுபவத்தைக் கொடுக்கிறதென்று. உணர்ச்சிகளையும்
அனுபவங்களையும் தனக்கு மிச்சம் வைக்கும் எழுத்துக்களை நவீன வாசகன் விரும்புகிறான்.
படைப்பாளியே முழுவதுமாக அழுதும் சிரித்தும் சிந்தித்தும் விட்டால், வாசகனுக்குப் பிடிப்பதில்லை.
பா.ராகவன்
எழுதிய ‘இரண்டு’, இரண்டாம் பாதியில் என்னை ஏமாற்றினாலும் முதல் பாதி கொடுத்த உற்சாகம்
மறக்கக்கூடியதன்று. வெகுஜன இதழில் தொடராக வந்த வெகுஜன மொழியிலான நாவல் இது. இதில் ஒரே
பெண்ணை இருவர் விரும்புவர். மூவரும் ஆராய்ச்சி மாணவர்கள். இருவரையும் அவளுக்குப் பிடிக்கிறது.
அவனிடம் சில குணங்களும் இவனிடம் சிலகுணங்களும் அவளுக்குப் பிடிக்கும் நிலையில் இருவரில்
ஒருவரை அவளால் தேர்ந்தெடுக்கவே முடியாதிருக்கும். மூவருமாகச் சேர்ந்து ஒரு ஒப்பந்தத்துக்கு
வருவார்கள். இப்படியும் நடக்குமா என்றும் இது சரியா என்றுமான கேள்விகளுக்குள் புகாமல்
வாசித்தால், புதுவித அனுபவத்தைக் கொணரக்கூடிய கதையாக விரிந்து இரண்டாம் பாதியில் வழக்கமான
புளித்துப்போன நடையிலும் திருப்பத்திலும் முடியும். வாசிக்க விரும்புவோரின் சுவாரஸியம்
கெடாதிருக்க மேலதிக விவரங்களைத் தவிர்க்கிறேன்.
ஈழத்திலிருந்து
பிறக்கும் புனைவுகள் போரையும், போர் குறித்து புரிதல்கள், சர்ச்சைகள் தாங்கி வருகின்றன.
அதன் நீட்சியான, புலம்பெயர்ந்த ஈழத்தமிழர்கள் உலகெங்குமிருக்கிறார்கள். அவர்களின் இளைய
தலைமுறையினர் தொலைத்துவிட்டுத் தவிக்கும் அடையாளத்தை
முன்னிலைப் படுத்திய - identity crisis படைப்புகள். ஷோபா சக்தியின் ‘ம்’ எனும் நாவல்
டையரிக் குறிப்புகள் போலக் கொடுக்கப் பட்டிருக்கும் ஒரு முன்னாள் போராளியின் கதை. ஆசிரியர்
முன்னாள் போராளி என்பது இதற்கான முக்கிய காரணம். ஐநா மற்றும் உலக வங்கி போன்ற நிறுவனங்களின்
உயர்பதவிகளில் இருந்து தற்போது பணிஓய்வில் கனடாவில் வசிக்கும் ஈழத்தமிழரான அ.முத்துலிங்கம்
ஆங்கிலப் படைப்புகளுக்கிணையான ஒரு வித்தியாச மொழியில் சிறுகதைகள் ஏராளம் எழுதியுள்ளார்.
அவை முக்கியமாக ஆப்பிரிக்க கண்டத்தில் அம்மக்களையும், அவர்களது வாழ்க்கையையும் உள்வாங்கி
விரிகின்றன. அது தவிர கனடா அமெரிக்க போன்ற நாடுகளைக் களமாகக் கொண்டும் நிறைய கதைகள்
எழுதுவார். இவரது கதைக் கருவும் தலைப்புகளும் தனித்துவம் கொண்டவை. இவரது கட்டுரைகளும்
கதைத் தன்மை கொண்டு சுவாரஸியமாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
சா.கந்தசாமி,
மாலன், இந்திரா பார்த்தசாரதி போன்றவர்கள் இந்திய அரசியலைக் கருவாகக் கொண்டு புனைகதைகள்
எழுதியிருக்கிறார்கள். எல்லோரும் அறிந்த சுஜாதா, இளமைத் துள்ளலான நடையில் எழுதி தமிழில்
ஏராளமானோரைக் கவர்ந்தார். அத்துடன் நிற்காமல் பல சுஜாதாக்களையும் தானறியாமல் உருவாக்கினார்.
தமிழிலக்கியத்தில் அறிவியல் புனைகதையை அறிமுகப்படுத்திய ஒரு முன்னோடி. உல்லாசமான மொழியில்
சமூகத்தையும் சமூகத்தின் போக்குகளையும் உற்சாகமாக நையாண்டியுடன் சொல்லிச் செல்லும்
எஸ்.ஷங்கரநாராயணன் போன்றோர் நிறைய எழுதுகிறார்கள்.
சமீப
ஆண்டுகளில் வெளியான நாவல்களில் முக்கியமான நாவல் என்று பலராலும் மெச்சப்படும் புதினம்
டி.குரூஸ் என்பவர் எழுதிய ‘ஆழிசூழ் உலகு’. இவர் ஒரு மீனவ குடும்பத்தைச் சேர்ந்தவர்.
கடலுடனான தன் வாழ்வனுபவத்தை மிகச் சிறப்பாக புனைவாக்கியிருக்கிறார் என்கிறார்கள். நான்
இன்னும் இந்நூலை வாசிக்கவில்லை. இணையம், தொழில்நுட்பம் சார்ந்த சிக்கல்களையும் சவால்களையும்
புனைவுகளாக எழுதுவோரும் அதிகரித்து வருகின்றனர்.
மலாயாவின்
புனைவிலக்கியம் பெரும்பாலும் ரப்பர் தோட்டம், ஜப்பானியராட்சி, யூஎன்ஐ என்று பேசியது.
‘சயாம் மரண ரயில்’ குறிப்பிட வேண்டிய முக்கிய ஆவணம். ஒரு புனைவாக பல குறைகளைக் கொண்டிருப்பினும்,
வரலாற்றுப்பதிவாக அது முக்கியத்துவம் பெற்றுவிடுகிறது. ரயில்பாதை அமைக்கவென்று ஆங்கிலேயன்
வலுக்கட்டாயமாக இழுத்துக் கொண்டு போய் கொத்தடிமைகளாக நடத்தியதை வாசிக்கும் போது நெஞ்சில்
ஈரம் கசியும். ஈழப்போரால் பாதிக்கப்பட்டோரைப் போலவே இவர்களிலும் சொத்து, குடும்பம்,
உற்றார், உறவினர், மக்கள், உயிர், உறுப்பு என்று இழப்புகளும் துயரங்களும் தான் எத்தனையெத்தனை!
யுத்தகால பஞ்சத்தாலும் கணவன் வலுகட்டாயமாகச் சயாமுக்கு அழைத்து செல்லப்பட்டதாலும் மூன்று
குழந்தைகளுடன் வறுமையில் உழலும் தாயானாவள் செய்வதறியாது குழந்தைகளின் பசிதீர ‘இன்னொருவனுடன்
சேர்ந்து கொள்ளட்டுமா’ எனத் தன் மூத்த மகன் மாயாவிடம் கேட்கிறாள். இதைக்கேட்டு ‘அதிர்ச்சி’
அடையும் மாயா வீட்டை விட்டு வெளியேறுவதாக நாவல் தொடர்கிறது. பின்னர் கோலாலம்பூரில்
சுற்றித் திரிந்து சயாமுக்குச் செல்பவனுக்கு ஏற்படும் பல்வேறு அனுபவங்களை விவரித்து
மாயாவின் வழியாக நேர்க்கோட்டுத் தன்மையிலேயே நாவல் நகரும். அவனுக்கு ஒரு காதலும் திருமணமும்
குடும்பமும் உருவாகி இறுதியில் மீண்டும் பிறந்த ஊருக்கே திரும்பும் மாயாவுக்கு குடும்பம்
சிதறியிருப்பது பேரதிர்ச்சியைக் கொடுக்கும்.
ஐம்பதாண்டுகளாக
தமிழிலக்கியத்தில் இயங்கி பல ஆக்கங்களை கொடுத்திருக்கும் மலேசியாவின் சை. பீர் முகமது
சுமார் கால் நூற்றாண்டுக்கு முன்பே, அதாவது ‘fire’ திரைப்படம் வெளியாவதற்கு வெகு காலத்திற்கு
முன்பே, பெண்களிடையேயான ஒருபால் உறவு குறித்த ஒரு நாவல் எழுதியுள்ளார் என்று தெரிகிறது.
நான் இன்னும் அந்த நூலை வாசிக்கவில்லை.
உங்களில்
சிலருக்கேனும் பிடிக்கக்கூடிய ஒரு சவாலை உங்கள் முன்னால் அன்புடன் வைக்கிறேன். கோணங்கி
எழுதிய ‘இருள்வமௌத்திகம்’ எனும் நாவலை நான் நூலகத்திலிருந்து எடுத்து, இரண்டு முறை
வாசிக்க முயன்று இரண்டு முறையும் இரண்டாவது பக்கத்துக்குள் புக முடியாது நூலை அப்படியே
திருப்பிவிட்டேன். என் அனுபவத்தில் இந்த புத்தகத்திலிருக்கும் மொழியை விட நவீனமுமில்லை;
கடினமுமில்லை. இவ்வாறான மொழிக்குப் பெயர்போனவர் இவர். இந்த நூலை வாசிக்க முடிந்தவர்கள்
நூலகத்திலிருந்து வாசித்து கருத்து சொல்லுங்கள். வாசிக்கக்கூடிய டிப்ஸ் கொடுத்து எனக்கும்
உதவுங்கள்.
இந்தத்
தலைப்பில் பேச நிறைய இருக்கிறது. பின்னவீனத்துவம், சிற்றிதழ்-வெகுசன இதழ், எதார்த்தம்-மாய
எதார்த்தம், •பாண்டஸி, என்று ஏராளமான வகைகளைக் குறித்தும் பேசலாம். நேரக்கட்டுப்பாடு
கருதி சுருக்கமாக, சுமார் பத்தில் ஒரு பங்கு இருக்கலாம். அதை மட்டுமே நவீன இலக்கியத்தில்
உள்ள பேசுபொருள் என்ற அளவில் பகிர்ந்து கொண்டேன். நான் வாசிப்பது முழுக்கமுழுக்கவே
நவீன இலக்கியம். ஆகவே, பழம் இலக்கியங்களில் ஆழ்ந்த பரிச்சயம் கொண்ட இந்தச் சபையினருக்கான
ஒரு சிறு அறிமுகமாக.
இதைச்
சொல்வதா வேண்டாமா என்று யோசித்து சொல்லிவிடுவதென்ற தீர்மானத்துக்கு வந்தேன். ஒரு புது விஷயத்தை புதியதொரு பாணியில் நான் பேசியிருக்கும்
எனது சமீபத்தைய நாவல் தான் மனப்பிரிகை. Dispersion of light - நிறப்பிரிகை போல இது
மனப்பிரிகை. இந்தப் பெயரையும் நானே உருவாக்கினேன். சொல்லப் போனால் இதில் ஏதும் இலக்கணச்
சிக்கல்கள் இருக்குமா என்றெல்லாம் கூட அப்போது நான் யோசிக்கவில்லை. வாசிக்க விரும்புவோருக்கு
முன்பே சொன்னதாக இருக்க வேண்டாம், சுவாரஸியம் போய்விடுமென்பதால், இந்நூல் குறித்த மேலதிக
தகவல்களைச் சொல்லாமல் விடுகிறேன். என்னிடம் இந்த ஒன்றைத் தவிர வேறு பிரதிகள் கைவசமில்லை.
இருந்தால், கொண்டு வந்து உங்களுக்கெல்லாம் கொடுத்திருப்பேன். நமது தேசிய நூலகக்கிளைகள்
எல்லாவற்றிலும் இதன் பிரதிகள் இருக்கின்றன. உங்களுக்கு நேரமும் மனமுமிருந்து வாசித்தால்,
அவசியம் கருத்துகளை எனக்குச் சொல்லுங்கள். மகிழ்ச்சியுடன் வரவேற்கிறேன்.
சொல்லப்
போனால், இப்போது நான் குறிப்பிட்ட நூல்களில் முக்கால்வாசியும் நமது நூலகக் கிளைகளில்
இரவல் கிடைக்கக் கூடியவை தான்.
இன்னொரு
செய்தியுண்டு. சமீபத்தில் எழுதி முடித்த இந்த ஆண்டு பிரசுரமாகவிருக்கும் எனது நாவலின்
பெயர் குவியம். மனப்பிரிகையைப் போலவே இதுவும் இயற்பியல் சார்ந்ததாக அமைந்திருக்கிறதென்று
மூத்த எழுத்தாளர் ஒருவர் சுட்டிக் காட்டிய போது தான் உணர்ந்து வியந்தேன்.
நல்வாய்ப்புக்கு
மிக்க நன்றி. வணக்கம். கேள்விகளுக்கு எனக்குத் தெரிந்தால் பதிலளிக்கிறேன். கலந்துரையாடவே
விருப்பம்.
(நிறைவு)