Tuesday, May 25, 2010

மனுஷி

- ஏ.பி. ராமன்





சிங்கப்பூர் எழுத்தாளர் ஜெயந்தி சங்கரின் 'மனுஷி' சிறுகதைத் தொகுப்பு நூலைப்பற்றிய சிறு விமரிசனம் இது. இவர் சிங்கப்பூர் எழுத்தாளரா தமிழக எழுத்தாளரா என்பதை நிர்ணயிக்க வேண்டிய அவசியம் எதுவும் இல்லையென்றலும், சிங்கப்பூரில் குடியேறி 20 வருடங்களாக நிரந்தரமாக இங்கே வசித்துக் கொண்டிருக்கும் இவர் நம்மைப் பொறுத்தவரை சிங்கப்பூரர் தான். காரணம், சிங்கப்பூர் வாழ்க்கையை இந்த அளவுக்கு உவமித்து உணர்த்தும் தன்மையை மிகவும் நுட்பமான வார்த்தைகளால் கச்சிதமாகக் கையாண்டு வரும் இவரை உள்நாட்டு எழுத்தாளர்களின் முன் வரிசையில் தாராளமாக நிறுத்தலாம். முன்னர் வெளியான இவருடைய 'நாலேகால் டாலர்' மற்றும் 'பின் சீட்' தொகுப்புகளும் சிங்கப்பூர் உள்ளிட்ட தென்கிழக்காசிய்ட நாடுகளில் பெரிதும் பாராட்டப்பட்டதோடு இந்திய எழுத்துல ஜாம்பவான்களாலும் பேசப்பட்டன. பெரும்பாலான கதைகளில் சிங்கப்பூர் சூழலை அதிக அழுத்தத்துடன் விவரித்துள்ளார். அவை எழுதப்பட்ட நோக்கத்தையும் நிறைவேற்றி வைக்கின்றன. அந்த முயற்சிக்குத் தேவையான தைரியம் இந்நூலாசிரியருக்கு இருக்கவே செய்கிறது.

குறுகிய காலத்தில் 13 நூல்களை எழுதியுள்ளார். அவற்றில் சிறுகதைத் தொகுப்புகள் தவிர 'வாழ்ந்து பார்க்கலாம் வா', 'நெய்தல்' ஆகிய இரு நாவல்கள், 'முடிவிலும் ஒன்று தொடரலாம்' என்ற குறுநாவல் தொகுப்பு, 'ஏழாம் சுவை' என்ற கட்டுரைத் தொகுப்பு, சீனப்பெண்களின் வாழ்வையும் வரலாற்றையும் ஆய்வுப்பூர்வமாக எழுதியுள்ள 'பெருஞ்சுவருக்குப் பின்னே' என்ற நூல், சீனக்கவிதைகளின் மொழிபெயர்ப்பு+தொகுப்பு மற்றும் சில நூல்களும் இவருக்குப் புகழ் சேர்த்து வருகின்றன.

ஜெயந்தி சங்கரின் எழுத்துகளில் அனுபவத்தின் சாயல் அதிகம் தெரியும். எந்த உண்மையான எழுத்தாளனின் கற்பனைக்கும் அனுபவம் அவசியம் தேவையாகிறது. இலக்கிய எழுத்தாளனுக்கு அனுபவத்தின் அவசியம் புரியும். அனுபவத்திலும் அனுபவித்தலிலும் எத்தனையோ வகையுண்டு. ஒரு எழுத்தாளனுக்கு அனுபவமாகப் படுவது மற்றவனுக்கு சூன்யமாகப் படலாம். ஊர் உலகம் சுற்றும் எழுத்தாளனுக்கும் தன் சிருஷ்டிக்குத் தேவையான அனுபவத்தைப் பெற முடியாமற்போகலாம். ஆனால், அதை விடவும் அதிகமான ஆழமான, அதனினும் மாறுபட்ட ஒரு முழு அனுபவத்தை வீட்டுக்குள்ளேயே அடைந்து கிடக்கும் ஓர் எழுத்தாளன் பெற்று விடலாம். அனுபவம் அவரவர் கண்ணோட்டத்தைப் பொறுத்தது தான். உலகம் சுற்றும் தமிழ் எழுத்தாளர்களில் பலரும் கூட தாம் வாழ்ந்த இடங்களையும் அவ்விடங்களின் வாழ்க்கை முறைகளையும் தம் எழுத்தில் பிரதிபலிக்க மறந்ததில்லை.

மறைந்த எழுத்தாளார் சுஜாதா சுற்றாத நாடில்லை. ஆனாலும், ஸ்ரீரங்கத்தையும் திருச்சியையும் தொட்டு எழுதுவதில் அவர் கடைசிவரை ஒரு தனித் துடிப்பு காட்டினார். திருநெல்வேலி வட்டாரத்தை இழுத்து வருவதில் புதுமைப்பித்தன், வல்லிக்கண்ணன், ஸ்ரீவேணுகோபாலன் போன்றோர் போட்டி போட்டனர். தி. ஜானகிராமனுக்கு தஞ்சாவூர்ப்பகுதி தொக்கு மாதிரி. மலேசிய சிங்கப்பூரில் பல ஆண்டுகள் வாழ்ந்த கு. அழகிரிசாமி தமிழ்நாட்டு இடைசெவல் மண்ணை ஆங்காங்கே தூவ மறக்காதவர். அந்தக் கால எழுத்து மேதையான க.ந.சுப்ரமணியம் ஐரோப்பிய நாடுகளுக்குப் போகும் போதும் சாத்தனூரையும் சர்வமான்ய அக்கிரகாரத்தையும் குறிப்பிடுவதில் தனி ஆர்வம் காட்டினார்.

ஆனால், இதெல்லாம் அந்தக்கால விஷயமாகிவிட்டது. இப்போது பலரும் தங்கள் அனுபவ வாழ்க்கையிலிருந்து எதையும் பெறவோ பெற முயலவோ இல்லை என்பது தான் உண்மை. அதற்குக் காரணம், இன்றைய எழுத்தாளர்களின் பெரும்பாலான படைப்புகளில் இலக்கிய நோக்கம் குறைவு என்பது தான்.

சிறுகதைகளில் அனுபவங்களுக்கு இலக்கிய உருவம் கொடுப்பதும் சுலபமல்ல தான். காரணம், அனுபவத்தின் பரப்பளவைவிட அதன் ஆழம் தான் எந்த இலக்கியத்திற்கும் இன்றியமையாததாகிறது.

இவற்றை இங்கு குறிப்பிடுவதற்கான காரணம் ஜெயந்தி சங்கரின் சிறுகதைகளில் பிறந்த நாடும் வாழும் நாடும் பசுமையாக ஆத்மார்த்தமான சித்தரிப்பு காண்கிறது. மதுரை, ஒரிஸா, அஸ்ஸாம் இவற்றுடன் சிங்கப்பூரின் செங்காங், பீஷான், தேக்கா பகுதிகள் சிரமமின்றிச் சேர்கின்றன. மனித உறவுதான் அந்த இணைப்பிற்கு அங்கே மேம்பாலமாக அமைகிறது. இந்தியக் கண்ணோட்டத்திலும் சரி, சிங்கப்பூர் கண்ணோட்டத்திலும் சரி இவருடைய கதைகளில் இவரின் அனுபவ இழைகள் சுகமாகவே பின்னப்பட்டுள்ளன.

"சிறுகதை வடிவம், மிகநுட்பமான உறவுச்சிக்கல், நுண்ணிய நிகழ்வுகள், நேர்த்தி, மனவோட்டங்கள், கதை சொல்லல், அழகியல் போன்ற அனுபவம் சார்ந்தவற்றில் கவனம் செலுத்தி இயங்குவது தவிர்க்க முடியாததாகிறது", என்கிறார் நூலாசிரியர் தன் முன்னுரையில். நூற்றுக்கு நூறு உண்மை.

நுட்பமான உறவுச்சிக்கலை, நுண்ணிய நிகழ்வுகளாக கணவன் மனைவி இருவரின் மனவோட்டங்களாக 'மனுஷி' என்ற தலைப்பில் எழுதியிருக்கும் ஜெயந்தி சங்கரின் கதை சொல்லல் பாணி படிப்பவர்களின் உணர்வுகளுக்கு ஒரு தாலாட்டு! சொற்களை அவர் தராசு கொண்டு நிறுத்து நிறுத்துப் போடும் பாங்கு அருமை. மீனா நம் மனத்தோடு ஒன்றித்து விடுகிறாள். நம்மைப் பொருத்தவரை இது சிங்கப்பூர் கதை. ஆனால், ஜிம்பாப்வேயில் நிகழ்ந்தாலும் இதே பாத்திரங்களும் மனவோட்டங்களும் மிக நன்றாகவே பொருந்தும்.

'திரை' - இது முற்றிலும் சிங்கப்பூர் பின்னணி! பெண் குழந்தை வேண்டித் தவமிருக்கும் ஓர் இளந்தாயின் புலம்பல், குமுறல், ஆத்திரம், வெறுப்பு என்று ஒரு நவரச நாயகியாகச் சித்தரிக்கப்படும் தாயின் மனவுணர்வுகளை, பிரசவ மருத்துவமனைச் சூழலை, எதைப் பெற்றால் என்ன என சமாதானம் செய்யும் பெரியவர்களைச் சாடும் பெண் மனதை, பிரசவித்த பெண் படும் அன்றாட அவஸ்தைகளை அனுபவ நயத்துடன் சொல்கிறார். முதல் நாள் தாய்ப்பால் குடிக்காத குழந்தை மறுநாள் குடிக்க ஆரம்பித்ததும் அந்தத் தாய்க்கு மட்டுமல்ல நமக்கும் உள்ளம் பூரிக்கிறது. திரை - ஒரு நேரான நடை பாதை. தடையில்லாமல் தடுமாறாமல் அவரால் மட்டுமில்லாமல் வாசகனாலும் நடக்க முடிகிறது.

சுகாதார சிங்கப்பூரில் 'சார்ஸ்' அரக்கன் நிகழ்த்திய லீலைகளில் உயிரிழந்த சிந்துவையும் மகன் பிரவீணையும் சுற்றிச் சுழன்றோடும் கதை 'சுவடு'. குறைவான நிகழ்வுகளை நிறைவாகச் சொல்லியிருக்கிறார்.

'சொல்லாத சொல்', 2006ல் நடைபெற்ற பெண் எழுத்தாளர்களுக்கான சிறுகதைப் போட்டியில் முதல் தகுதி பெற்ற கதை.

'அவள்', 'சாயல்', 'பாலா' ஆகிய கதைகள் சிங்கப்பூர் தொடர்புகொண்டவை. 'பாலா'வில் சொன்னதைச் செய்யும் கையாளாக, எடுபிடியாகத் திரியும் அசட்டு பாலாவுக்கும் ஓர் அரிய அதிர்ஷ்டம் வருகிறது. சிங்கப்பூரிலிருந்து சொத்து சுகங்கள்! ஆனால், அந்த வெள்ளை உள்ளமோ அதைத் தூக்கியெறிந்து விட்டு வீட்டு வேலைகளை வழக்கம் போலத் தூக்கிச் சுமக்க ஓடுவது நெகிழ்வைத் தருகிறது.

'ஒரே கேள்வி', 'பொன்சாய்', 'நான்கிலக்கம்' ஆகிய கதைகள் முற்றிலும் சிங்கப்பூர் எண்ணையில் பொறித்துச் சுட்டெடுக்கப்பட்ட பலகாரங்கள்! சுவை சுமார் தான் என்றாலும், பள்ளிக்கூடக் கல்லூரி இளசுகளைச் சுற்றியோடும் நிகழ்ச்சிகளைக் கொண்டவை. 'நான்கிலக்கம்' கதையில் சீனப்பிரயோகம் சற்று மிகையாகத் திணிக்கப்பட்டிருப்பதைத் தவிர்த்திருக்கலாம் என்பது என் தனிப்பட்ட கருத்து. உள்ளூர் வாசகர்களுக்கு இந்த 'சப்ஜெட்' சற்று அலுத்துப் போனது. தமிழக வாசகர்கள் இதை 'டைஜெஸ்ட்' பண்ண சிரமப்படுவர். சிங்கப்பூரில் பேசும் தமிழ் மாறி வரும் இந்நாளில் 10 ஆண்டுகளுக்கு முன்னான பேச்சுத் தமிழை வலிந்து புகுத்துவது போல் அமையக் கூடாது என்பது என் கருத்து.

நன்றாக வளரும் ஓர் எழுத்தாளரை வளர்ந்த எழுத்தாளராக மாற்றும் அரிய வாய்ப்பு வாசகர்களுக்கும் கிடைத்திருக்கிறது. ஜெயந்தி சங்கரின் 'மனுஷி' மதி நிலையத்தின் வெளியீடு. இங்கு, இது தவிர மற்ற தொகுப்புகளான 'திரைகடலோடி', 'பின் சீட்' மற்றும் 'நாலேகால் டாலர்' கிடைக்கும்.

நன்றி: முல்லைச்சரம்

Thursday, May 06, 2010

'பின் சீட்'




- பாஸ்டன் பாலாஜி


கங்கா பிரவாகமும் தீபாவளி விருந்தும்


இணையத்தில் கிடைக்கப்பெற்ற அந்த வார கல்கியின் இரண்டொரு பக்கங்களை அச்சுப் பிரதி எடுத்து வந்திருந்தேன். தவறுதலாக தரையில் விழுந்திருந்தது. இரண்டாம் வகுப்பு படிக்கும் மகள் ஓடி வந்தாள். இலையுதிர் மரங்களில் இருந்து விழும் வண்ணம் மாறிய இதழ்களை கவனியாமல் அவசரமாக ஓடும் நதி போல் அவற்றை மிதித்துக் கொண்டே அன்றைய தினத்தில் நடந்தவற்றை சொல்லி முடிக்கும் வேகத்துடன் விவரித்துக் கொண்டிருந்தாள்.

அவளைக் கையமர்த்தி, 'எதன் மேல் நிற்கிறாய் தெரியுமா? சரஸ்வதி!' தொட்டு ஒத்திக் கொள்!' என்று கோபமும் அதிகாரமும் கலந்த அணைக்கட்டாய் அவளை நிறுத்தினேன்.

'பின் சீட்' தொகுப்பில் வரும் கதைகளும் இப்படித்தான்.

வாழ்க்கையில் புறக்கணிக்க எத்தனிக்கும் விழுமியங்களையும் மறக்க விரும்பும் கோட்பாடுகளையும் விட்டுவிட்ட கலாச்சாரக் குழப்பங்களையும் முரணாக வினாக்கள் ஆக்கும் தொகுப்பு.

மொத்தம் பதினாறு சிறுகதைகள். சிங்கை சஞ்சிகைகள் கல்கி மற்றும் இணைய இதழ்களில் வெளியானவற்றின் தொகுப்பாக மதி நிலையத் தொகுப்பாக வெளியாகியுள்ளது.

ஒவ்வொன்றிலும் பலவிதமான நாயகர்கள் தென்படுகிறார்கள். அம்மா கோந்துகள்; மக்கள் செல்வம் தங்களுடன் பசையாக இருக்க விரும்பும் பெற்றோர்கள்; பற்றற்ற மாந்தர்கள்; ஆசையை விட நினைப்பவர்கள்; விட்டதாக நினைப்பவர்கள். எல்லோரையும் உலாவ விட்டு அடர்த்தியான கதைகளில் மூழ்க வைக்கிறார் ஜெயந்தி சங்கர். நகைச்சுவை அரிதாகவே எட்டிப் பார்க்கிறது. வெரைட்டியான சிங்கப்பூரில் உரையாடல்களின் செழுமை மூலம் எட்டு திசைகளாக விரியும் சம்பவங்கள்.

நதி பெருக்கெடுத்து ஓடுகிறது. கரும்பு ரசம் போன்ற சுவைநீர், கடலில் திடீரென்று கலந்து உப்புத் தண்ணீர் ஆகிறது. 'அம்மா பேசினாள்' கிரியும் மகாமக நதியாக சாதிக்க நினைத்து ஓடிப் போய் களைக்கிறான். குடிக்கத் தகுதியற்ற நீரானாமோ என்று சோம்பித் துவளாமல், கயலும் கெண்டையும் எதிர்நீச்சலடிக்கும் சூழலை அமைத்துத் தர ஆசைப்படுகிறான்.

புத்தகத்தின் தலைப்புக் கதையான 'பின் சீட்' தமிழ் சினிமா போல் சூடான திரைக்கதையாக விரிகிறது. சிறு வயது மதிப்பீடு போராட்டங்களினால் ஏற்படும் நெருக்குதல்கள்; பெண்களைத் தவறாகப் புரிந்து கொள்ளுதல்; நாயகி தீபா, 'தம்பிக்கு எந்த ஊரு' ரஜினியாக மனமாற்றம் அடைதல்; நம்பர் ஒண்ணாக இருப்பதை விட உச்சங்களைத் தொடுபவர்களை உருவாக்கும் மனப்பக்குவத்தை எட்டுதல் போன்ற மேலாணமையும் மசாலாவும் கலந்த கதை.

- மேலை நாட்டுக் கலாச்சாரமான concierge services-ஐ அறிமுகப்படுத்தும் 'சேவை';
- மக்களை எடை போட்டு நிர்தாட்சண்யமாக்கும் நிறவெறியையும், செல்நெறி தேர்ந்ந்தெடுத்தல் குழப்பங்களையும் வெளிக்கொணரும் 'கண்ணாலே பேசிப் பேசி';
- காலத்திற்கேற்ப காலணிக்குள் நுழைந்து பொருத்திக் கொண்ட ஏபிசிடிக்களையும், பழைய செருப்புக்குள் தைத்து விடப்பார்ர்ப்பவர்களின் நடுக்கங்களையும் சமாதானப்படுத்தும் 'பார்வை'.

பல்வேறு களங்களில் பயணிக்கும் சிற்றருவிகள்.

ஓடத்தில் பேரருவியாக என்னை மிகவும் ஆர்ப்பரிக்க வைத்தவையாக 'ஜேட் வளையல்', எந்தையும் தாயும், அக்கா மற்றும் திரவியம் ஆகியவற்றை குறிப்பிடலாம்.

நிறம் பார்த்தோ வயசைப் பார்த்தோ அன்பு உருவாகாது. 'மிருகா' என்றழைக்கும் கிழவியின் பாசம்; ரங்கோலியாக வாழ்க்கையை ரசிக்கும் கிழவியின் பவள வளையல் குறியீடு; உற்றவருக்கு உடல்நலம் சரியில்லை என்னும்போது உள்ளார்ந்து எழும் மனக்கிலேசம்; கோடை கால நூறு பாகை வெப்பம் எல்லோரையும் சுட்டெரிக்கும். சத்தியமான சூரியனின் கதிர் போல் அனைவருக்குள்ளும் தகிக்க வைக்கும் மனிதத்தை வெளிக்கொணரும் கவிதையான கதை 'ஜேட் வளையல்'.

பெண் எழுத்தாளரின் மெல்லிய குரல் வெளிப்படும் ஆக்கமாக 'அக்கா' . வீடற்ற முதியவர்களின் நிலை குறித்து உணர்த்தும் 'திரவியம்'. வீடிருந்தும் வாசலிருந்தும் அனாதரவாகி அன்னியப்படும் மாடி வீடுகளைத் தொடும் 'எந்தையும் தாயும்'. ஒவ்வொன்றும் முத்திரைக் கதைகள்.

அக்கா மற்றும் திரவியம் சிறப்பாக எடுத்தாளப்பட்டிருந்தாலும், பளிச்சென்ற முடிவுகளும், அவை உணர்த்தும் தீர்ப்புகளும் சற்றே நெருடலாகவே உள்ளன. உரத்துப் பேசாமல் உணர்ச்சிகளை மட்டும் பேச விட்டிருந்தால் மேலும் மெருகேறியிருக்கும்.

இதே பாணியில் 'அப்பாவின் மனைவி' நாவலுக்குரிய செறிவுடனும் கதாபாத்திரங்களும் கொண்டிருக்கிறது. 'தலைச்சன்' அப்பாவின் மனமாற்றங்களும் சடாரென்று நிகழ்ந்து நம்ப இயலாதவொன்றாக ஆக்குகிறது. ஆசிரியர் இதே பின்புலத்துடன் விரிவாக பிறிதொரு புனைவு வடிவத்தில் இவற்றைக் விரிவாகக் கையாண்டால் நிறைவாக இருந்திருக்கும்.

ஜெயந்தி சங்கரின் பல கதைகளில் போதனையும் ஊடே இடம்பெற்றிருக்கிறது. குறிப்பாக 'உன் காலணிக்குள் நான்' பள்ளிக்கூட Moral Science பாடம் போல் தென்பட்டது. குடிகாரனின் லீலைகளை விவரிக்கும் 'நான் அவனில்லை'யும் மகப்பேறின் மகத்துவத்தை முன்வைக்கும் 'மழலைசொல் கேளாதவ'ரும் திறம்படக் கையாண்டிருந்தால், தற்போதைய நிலையில் வாசகனுக்கு குற்றவுணர்வு கலந்த அயர்ச்சிக்கு பதிலாக, சரியான தாக்கங்களைக் கொடுத்திருக்கும்.

இந்தத் தொகுப்பில் நான் முன்னமே வாசித்திருந்தது 'கடைசிக் கடிதம்' மட்டுமே. மீண்டும் வாசிக்க ஆரம்பிக்கும் முன்னே மனத்தில் தங்கிப் போன நினைவுகளை மீட்டெடுத்து, மீள்வாசிப்பில் மறக்கவியலாத நாவலின் பன்முகப் பரிமாணங்களை வாசகனுக்குள் பாய்ச்சும் தன்மையுடன் விரிந்தது.

பிரச்சினைகளைக் கண்டு ஓட வேண்டுமா? தன்னால் தீர்வு காண முடியாத அச்சத்தால், பிறரின் முடிவுக்கே விட்டுச் செல்வது சிறந்ததா? பேசாப்பொருளை எப்படி அறிமுகம் செய்வது? வாழ்க்கையில் எடுத்த முடிவுகள் சரிதானா? தவறு என்றால் எப்போது மாற்றிக் கொள்ளலாம்? மன்னிப்பு எதற்கு தேவை? யாருக்கு பாவம்? யார் பாவம்?

ஒவ்வொரு கதையிலும் வினாக்களும் கதாவாசகனின் அனுபவங்களுக்கு ஏற்ற அர்த்தங்களும் புலப்பட்டாலும், அவை யாவும் மிக சிறப்பாக 'கடைசிக் கடித'த்தில் வெளியாகியுள்ளது.

மஞ்சள் ரிப்பன், ஸ்பாஸிர்ரிஸ் போன்ற வினோத பதங்களை சிங்கப்பூரை எழுத்தில் மட்டுமே தரிசித்தவர்களுக்காக இன்னும் விரிவாக எடுத்துரைத்து லாவகமாக கதையில் விவரித்து, தெரியாத விஷயங்களை அறிமுகம் செய்வித்திருக்கலாம். கதைகளில் பெரும்பாலானோர் குற்றமற்ற உத்தமராக இருப்பதை போல் வார்த்தைகளில் வரும் பிழைகளைக் களைந்தெடுத்தால் வாசிப்பு ஈர்ப்பு அதிகரிக்கும்.

பாரத கண்டத்தை விட்டுப் போனாலும் தீபாவளி கொண்டாடுவது தொடர்கிறது.

பத்தாவது படிக்கும் வரை ஆயிரம் வாலா-வா அல்லது அணுக்கத்தில் ஆட்டம் பாம் போடுவதா என்னும் போட்டா போட்டி. கொஞ்சம் கெத்து வந்த வயதில் ரேமண்ட்ஸே வாங்கித் தைக்க அப்பா தயார் என்றாலும் கேப் காக்கியோ, ஏபர்கோம்பி •பிட்ச் பொன்னெழுத்துப் பொறிக்கப்பட்ட ஆடையோ தாங்கி உலா வரும் ஒளிக்கதிர் போட்டி. தலை தீபாவளிக்கு மிடுக்கு; ஊர் விட்டு ஊர் வந்திருந்த போது கொண்டாடிய ராம் லீலா மேளா; அமெரிக்காவோ ஆப்பிரிக்காவோ, அயல்நாட்டில் இருக்கும் பத்து தெற்காசிய குடும்பங்களைக் கஷ்டப்பட்டு ஒன்றுகூட்டி திருவிழா கொண்டாட்டம்.

பெற்றோரை விட்டு, சொந்த ஊரை விட்டு தள்ளி இருந்தாலும், தடாலடியாக பண்டிகை தினத்தன்று 'உள்ளேன் அய்யா' போட்டு, சாப்பிடத்தெரியாத தலைவாழை இலையில் அஜீரணம் தரும் எண்ணெய் சமாச்சாரம் தொட்டு திரட்டிப்பால் இரண்டாம் முறை வாங்கி, பூண்டு ரசத்தை கொஞ்சம் தரையில் இருந்து எடுத்து இலைக்குள் தள்ளி, தயிர் சாதத்துக்குப் பிறகு இராஜாவாக பிறக்கும் ஆசையில் பாயசம் சாப்பிட சிரம்பப்பட்டாலும் வயிறு முட்ட வைக்கிறது பின் சீட் தொகுப்பு.

சுற்றாரும் வம்பும் இனிப்பும் தீபாவளி லேகியமும் கலந்து பூர்விகத்தை திரும்பிப் பார்க்க சொல்லும் விருந்து.


பின் சீட் (2006)

பக்கங்கள் 153/ விலை: ரூ 66

வெளியீடு:

மதி நிலையம்
2/3 4வது தெரு,
கோபாலபுரம்
சென்னை - 600086

Tuesday, April 20, 2010

பெருஞ்சுவர் சூழ்ந்த பெண் -- ஜெயமோகன்




பெண்களின் வாழ்க்கையை ஆராய்ந்து அவள் ஏன் அடக்குமுறைக்கும் சுரண்டலுக்கும் ஆளானாள் என்று சொல்லும் சிந்தனையாளர்கள் ஒவ்வொரு நாட்டிலும் அங்குள்ள காரணங்கள் சிலவற்றை முன்வைப்பார்கள்.ஐரோப்பாவில் பெண்ணடிமைத்தனத்தை உருவாக்கியதில் கிறித்தவ தேவாலயத்தின் பங்கு முக்கியமாக சொல்லப்படுகிறது. அரேபியாவில் இஸ்லாமின் பங்கு இன்றும் அழுத்தமாகவே தொடர்கிறது. இந்தியாவில் மனுநீதி போன்ற மதநீதிநூல்கள் சுட்டப்படுகின்றன. ஆனால் உலகவரலாற்றை எடுத்துப்பார்த்தால் எங்கும் பெண்மீதான அடக்குமுறை ஒரே மாதிரியாகத்தான் இருந்துவந்துள்ளது என்பதைக் காணலாம். பழங்குடிச் சமூகங்களில் பெண்ணடிமைத்தனம் உச்சநிலையில் இருப்பதை இன்று ஆய்வாளர்கள் பதிவுசெய்துள்ளார்கள். அப்படியானால் பெண்ணடிமைத்தனம் என்பது சுரண்டல் போல மானுடப் பண்பாட்டின் ஒரு இயல்பான பரிணாமக்கூறா என்ன?

ஆனால் எங்கு அரசுகள் வலிமை பெறுகின்றனவோ அங்கே பெண்ணடிமைத்தனம் மேலும் இறுக்கமாகிறது.எங்கே பேரரசுகள் உருவாகின்றனவோ அங்கே அது உச்சத்துக்குச் செல்கிறது. உலக வரலாற்றில் இதற்கு விதிவிலக்கே இல்லை. உலகின் மாபெரும் பேரரசுகள் தொடர்ந்து கோலோச்சிய சீனா பெண்ணடிமைத்தனத்தின் அதி உச்சங்களைத் தொட்டிருப்பதை இயல்பாகவே காணவேண்டும்.

ஜெயந்திசங்கரின் 'பெருஞ்சுவருக்குப் பின்னால்' சீனப்பெண்களின் வரலாற்றையும் வாழ்க்கையையும் கூறும் முக்கியமான தமிழ் நூல். இந்தவகைப்பட்ட ஒருநூல் தமிழில் இதற்கு முன் வந்ததாகத் தெரியவில்லை. தமிழில் பல கோணங்களில் பெண்ணியம் பேசப்படும் இன்று அதற்குரிய முக்கியமான மூலநூலாக விளங்கக் கூடிய இந்நூலைப்பற்றி இன்றுவரை எந்தப்பெண்ணியவாதியும் பேசிக்கேட்கவில்லை என்பது தமிழ்ச் சூழலைவைத்துப் பார்த்தால் வியப்புக்குரியதுமல்ல.

உலக இலக்கியம், உலக அரசியல் பயின்று விவாதிக்கும் வாசகர்களுக்குக் கூட இந்நூல் முன்வைக்கும் தகவல்கள் ஆச்சரியமூட்டக் கூடும். காரணம் பொதுவாக சீனா பற்றி நாமறிந்தது மிக குறைவே. பத்து சீன எழுத்தாளர்களின் பெயர்களைச் சொல்லக்கூடியவர்கள் நம்மில் அனேகமாக யாருமிருக்கமாட்டார்கள். ஜெயந்தி சங்கர் சீனப்பெண்களைப் பற்றி சொல்லும் தகவல்கள் பெரும் புனைவுகளுக்கு நிகராக உள்ளன.

சீனப்பெண்ணை அடிமைப்படுத்தியதில் தத்துவ மேதை கன்பூஷியஸின் பங்கு முக்கியமானது என்று சொல்கிறது இந்நூல். பெண் இரண்டாம்பட்சமானவள் என்றும் பலவீனமானவள் என்றும் கட்டுப்படுத்தப்படவேண்டியவள் என்றும் கன்பூஷியஸ் சொன்னது சீன மனதை ஆழமாகப் பாதித்திருக்கிறது. பெண் ஆணின் மகிழ்ச்சிக்காக மட்டுமே படைக்கப்பட்டவள், ஆணுக்காகத் துயருறுவது மட்டுமே அவளது வாழ்க்கை என பெண்களுக்குப் போதிக்கப்பட்டது. அவள் தன் உணர்ச்சிகளை வெளிப்படுத்துவது முற்றிலும் தடைசெய்யப்பட்டது. சீனக்குடும்பம் என்பது மிக வலுவான ஓர் அமைப்பு. முற்றிலும் பெண்மீதான ஒடுக்குமுறையால் உருவாக்கி நிலைநிறுத்தப்படுவது அது

கிட்டத்தட்ட பல விஷயங்கள் இந்திய மரபை ஒட்டி உள்ளன. ஆண் ஒரு குடும்ப்பபெண்ணுடன் கொள்ளும் உறவு என்பது முழுக்க முழுக்க மகப்பேறுக்காக மட்டுமே என்ற நிலை இருந்திருக்கிறது. காம நுகர்ச்சிக்காக ஆண் விலைமாதரையும் வைப்பாட்டிகளையும் நாடிச்செல்வது முற்றிலும் அனுமதிக்கப்பட்டிருந்தது. ஆகவே பண்டைத்தமிழகம் போல சீனமும் பெண்சமூகத்தை இவ்விருவகைப்பட்ட பெண்களாக பிரித்து வைத்திருந்தது. இருசாராரும் இருவகையில் சுரண்டப்பட்டார்கள். பெண்ணுக்கு சொத்துரிமை கொடுக்கப்படவில்லை. அவள் திருமணம் முடித்து அனுப்பபடும்போது சிறிய வரதட்சிணை மட்டுமே கொடுக்கப்பட்டது. அதன் பின் அவளுக்கு பிறந்தவீட்டுடன் எவ்விதமான உறவும் இல்லை. பெண் பிறப்பது விரும்பபடவில்லை. பெண்சிசுக்கள் சாதாரணமாக கொன்றழிக்கப்பட்டு இன்று சீனாவில் பெண்களின் எண்ணிக்கை மிக மிகக் குறைவு. மிகச்சிறந்த அடிமையாக ஆதல் என்பதே கற்பு என சீனமரபு குறிப்பிட்டது.

இந்நூலில் சீனப்பெண்களின் கால்கள் சிறுவயதிலேயே ஒடித்து கட்டப்பட்டு 'தாமரைப்பாதம்' உருவாக்கப்பட்டு அவள் நிரந்தரமாக ஊனமுற்றவளாக ஆக்கப்பட்டதன் விரிவான சித்திரம் உள்ளது. அடிபப்டையில் பெண்ணை நீண்டநேரம் நிற்கவோ ஓடவோ தன்னைக் காத்துக்கொள்ளவோ முடியாதபடி பலவீனமானவளாக ஆக்கும் நோக்கம் கொண்ட இம்முறையானது ஓர் அழகூட்டும் சடங்காக பண்பாட்டில் முன்வைக்கபப்ட்டது. உயர்குடிப்பெண்கள் அதைச் செய்துகொண்டார்கள். உயர்குடிகளாக ஆக விரும்பும் நடுத்தரகுடிகளும் அதைப் பின்பற்றினர். மொத்த சீனப்பெண்களில் முக்கால்வாசியினர் ஒருகாலத்தில் இதற்கு ஆளாயினர்.

மிக மிக கொடூரமான ஒரு சித்திரவதை இது. மிக இளம் வயதிலேயே பாதங்கள் ஒடிக்கப்பட்டு சதையை வெட்டி காலை மடக்கி பட்டுத்துணியால் இறுகக் கட்டுகிறார்கள். உள்ளே கால் வருடக்கணக்காக வலியில் அதிர்கிறது. சதைகள் அழுகி புண்ணாகி உலர்கின்றன. எலும்புகள் முறிந்து பொருந்துகின்றன. பலசமயம் விரல்கள் உதிர்ந்துபோகின்றன. இப்போது படங்களில் அக்கால்களைப் பார்த்தால் அதிர்ச்சியும் அருவருப்பும் உருவாகிறது. அன்று அது ஆண்களுக்கு காமக்கிளர்ச்சியை அளித்திருக்கிறது. ஜெயந்திசங்கர் அவ்வழக்கத்தில் தோற்றம் அதன் சடங்குமுறைகள் அது மறைந்தவிதம் ஆகியவற்றைப்பற்றிய விரிவான செய்திகளை அளிக்கிறார்.

தமிழ் வாசகர்களுக்கு மிகுந்த ஆர்வமூட்டும் விஷயம் சீனாவில் பெண்களுக்கு மட்டுமாக, பெண்கள் நடுவே ஆண்கள் அறியாமலேயே புழங்கிய ஒரு தனி மொழி இருந்திருக்கிறது என்பது. நுஷ¥ என்ற அம்மொழி பெண்களால் வழிவழியாக கைமாறப்பட்டு தங்கள் துயரங்களை பரிமாறிக்கொள்ளவும் செய்திகள் அனுப்பவும் பயன்பட்டிருக்கிறது. சீன சித்திர லிபியிலேயே அதையும் எழுதியிருக்கிறார்கள். அதில் முக்கியமான கவிதைகள் வந்திருக்கின்றன. இம்மொழிக்கு பள்ளிகளும் ஆசிரியர்களும் இல்லை. இது அனைவரும் கேட்க பேசபப்டுவதில்லை. பின்பு மெல்லமெல்ல அம்மொழி வழக்கொழிந்துபோயிருக்கிறது. அதை அறிந்திருந்த சிலரை அன்றைய கம்யூனிசக் கலாச்சாரப்புரட்சியாளர்கள் வலதுசாரிகள் என முத்திரைகுத்தி அழித்தனர். அதை மிஞ்சி எஞ்சிய தடையங்களை இன்றைய சீன அரசு சுற்றுலாக்கவற்சியாக பயன்படுத்துகிறது

ஒடுக்கபடும் பெண் இருவகையில் அதிகாரத்தை அடைகிறாள் என்பதை வரலாறு காட்டும். ஒன்று தன் காமக்கவற்சியையே தன் ஆயுதமாக்கி அவள் அதிகாரத்தை அடைகிறாள். இரண்டாவதாக தன் மதிநுட்பம் மற்றும் குரூரம் மூலம் அதிகாரத்தை அடைகிறாள். இரண்டு முகங்களுமே கொண்ட பெண்கள் வரலாற்றில் அதிகம். சீனாவின் இணைசொல்லமுடியாத பெண்ணடிமைச் சூழலில் ஆசைநாயகியராக உச்சகட்ட அதிகாரத்தை அடைந்த பெண்களின் கதைகளை ஜெயந்திசங்கர் சொல்கிறார். அரசி வூ ஹேவ் ஆசைநாயகியாக இருந்து அரசியானவள். அதேபோல பேரரசி டோவேஜர் தன் குரூரம் மூலமே அதிகாரத்தை வென்று கையாண்டாள்.

சீனாவின் பண்டைய வரலாற்றுதடயங்கள் அழிக்கபப்ட்டு சீனமக்களில் கணிசமானோர் கொல்லப்பட்ட கொடுமையான கலாச்சாரப்புரட்சியே சீனப்பெண்களின் விடுதலைக்கும் காரணமாக அமைந்தது என்ற வரலாற்று முரண்பாட்டையும் நாம் இந்நூலில் காண்கிறோம். சீனப்பெண்களின் வரலாறு சமகாலம் வரை விரிவான தகவல்களுடன் சொல்லப்பட்டுள்ள இந்நூல் தமிழில் சமூக இயக்கத்தின் அடிப்படைகளை வரலாற்று நோக்குடன் சிந்திக்க விரும்பும் எவருக்கும் தவிர்க்க முடியாத ஒன்றாகும்.

நன்றி: உயிர்மை வெளியீடு - டிசம்பர் 2006



'பெருஞ்சுவருக்குப் பின்னே' ( சீனப்பெண்களின் வாழ்வும் வரலாறும் )
நூலாசிரியர் -ஜெயந்தி சங்கர்

. விலை120

கிடைக்குமிடம் :
திரு. மனுஷ்ய புத்திரன்,
உயிர்மை பதிப்பகம்,
11/29, சுப்ரமணியம் தெரு,
அபிராமபுரம், சென்னை- 600 018,

Tele/Fax : 91-44-2493448, residence:91-44-52074030, Mobile : 9444366704

நூல் அறிமுகம் - - செல்வநாயகி

சீனாவிலும் பெண்கள் இப்படித்தான்... ஜெயந்தி சங்கரின் நூலும் என் எண்ண இடைச்செருகல்களும்





மரங்கள் வழமைபோல் கோடையைச் சூடிக்கொண்டு விட்டன. இம்மாதங்களில் மட்டும் பறந்து திரியும் குருவிகள் சிலவும் வருடம் போலவே வந்து வந்து சன்னலுக்கருகில் சத்தமெழுப்பியே போகின்றன. எல்லாம் இருந்தும் இந்தக் கோடை பசுமையைக் கொண்டாடும் மனநிலையை வாரி வழங்கியதாகத் தெரியவில்லை. சில மாதங்களாய்ப் பதைபதைப்புடனும், இன்னபிற கையாலாகத் தனங்களோடும் செய்திகளை மட்டும் வாசித்துக் கடைசியில் இன்னும் மோசமான உணர்வுகளுக்குள் தள்ளப்பட்டுக் கிடக்கும் தமிழர்களில் ஒருத்தியாக நானும். எப்போதாவது தொலைதூர ஈழத்து நண்பர்கள், தோழிகளிடம் இருந்து வரும் தொலைபேசி அழைப்புகளில் கூட என்ன பேசுவதெனத் தெரியாத தடுமாற்றங்களே எஞ்சுகின்றன. இலக்கியம், கவிதை, ஈரம், நேசம், மனிதாபிமானம், உயிராபிமானம், லொட்டு, லொசுக்குஇன்னபிறவெல்லாம் எழுதவும், படிக்கவும் சுவைகூட்டுகின்றனவேயொழிய நடைமுறையில் எவ்வளவு தூரம் சாதிக்கப்படுகிறது என்ற கேள்வி எழுந்து உலகம் முழுமையும் வெறுமையால் சூழப்பட்டதான காட்சியைச் சில கணங்களில் விரித்துப் பின் தன்னுள் சுருங்குகிறது. இருந்தும் எழுதவே செய்கிறோம். ஏனென்றால் எழுத்து சில சமயம் ஆத்மதிருப்தியைத் தருகிறது. உள்ளே உருண்டு புரளும் உணர்வுகளுக்கு வடிகாலாக இருக்கிறது. எழுத்தை அருந்திப் பழகியவருக்கு அது ஒரு போதையாகக்கூடப் போய்விடுகிறது. ஒருசில நேரம் நம் இருத்தலுக்கான அச்சுறுத்தல்களுக்கு ஒரு எதிர்ப்பாகவும் எழுத்தை ஏந்தலாம்.


எழுத்துக் குறித்து மேற்சொன்ன எண்ணங்களெல்லாம் இருந்தாலும் நாளைத் தொடங்குகிற போது வாசிக்கிற செய்திகளும் பிறகு அவை தருகிற உணர்வுகளின் அலைக்கழிப்பிலும் உழலும் மனதை வைத்துக் கொண்டு எழுதும் எதிலும் உருப்படியாகச் சொல்ல முடிந்ததும் ஒன்றுமில்லையென்றே தோன்றுகிறது. இந்த ஒழுங்கற்ற நாட்களுக்கு நடுவே புத்தகம் படிக்கலாமென்ற எண்ணம் தோன்றியது. கி.மு, கி.பி மாதிரி புத்தக நேசத்தின் அடர்த்தியைக் க.மு (கணினிக்கு வரும் முன்), க.பி (கணினிக்கு வந்த பின்) என்ற கால வரையறை கொண்டே அளக்க வேண்டியிருக்கிறது. க.பி அந்த நேசத்தை ஒரு அடர்ந்த இருட்டுக்குள் தள்ளி விட்டது போலவே இருக்கிறது. ஊரிலிருந்து உறவினர்களால் அன்போடு கொடுக்கப்பட்ட வடக வகைகளையெல்லாம்கூட இரக்கமின்றிப் புறக்கணித்துப் பெட்டி நிறைய எடுத்து வந்த புத்தகங்கள் இங்கே தூசியோடு பேசிக் கொண்டு வருந்துவதைப் பார்க்கும்போது நிச்சயமாய் ஒரு சுய சுத்திகரிப்பு செய்தாக வேண்டுமென்றே படுகிறது. வலிந்து நாளிடமிருந்து நேரத்தைப் பிடுங்கிக் கொண்டு புத்தகமொன்று தேடிய போது ஜெயந்தி சங்கரின் "பெருஞ்சுவருக்குப் பின்னே" கைகளில் அகப்பட்டது. அது வெளியிடப்பட்டதும் ஜெயந்தியால் அனுப்பி வைக்கப்பட்டு இரு வருடங்களுக்கு முன்பே ஒருமுறை வாசித்து விட்டிருந்தேன். என்றாலும் மீண்டும் வாசித்தேன்.

இணையத்தில் 2003 வாக்கிலேயே குடிபுகுந்தவர்களுக்கு ஜெயந்தி சங்கரை நன்கு பரிச்சயமிருக்கலாம். அப்போதிருந்த மிகச் சில பெண் பதிவர்களில் அவரும் ஒருவர். சிறுகதைகள், குறுநாவல், நாவல், கட்டுரைத் தொகுப்பு, மொழிபெயர்ப்பு என இது வரை பல நூல்களை வெளியிட்டிருக்கும் இவரின் படைப்புகளில் என் மனதுக்கு மிக நெருக்கமாக உணர்ந்தது "பெருஞ்சுவருக்குப் பின்னே" நூல். சிங்கப்பூர்வாசியான ஜெயந்திக்கு அங்கே சீனர்களின் மொழி, வாழ்வியல், வரலாறு குறித்த ஆர்வமும், தேடலும் ஏற்பட்டதே இந்நூலுக்கு வித்திட்டிருக்கிறது. இந்தநூல் முழுதும் சீன வரலாற்றில் பெண்களின் நிலை குறித்த ஆய்வை நிகழ்த்தியிருக்கிறார்.

தோற்றங்கள், தோல்நிறம், மொழி, இடம், இனம் மாறினாலும் 'பெண்" என்னும் சொல்லின் வரையறை எந்த ஒரு வேறுபாட்டையும் கொண்டிருக்கவில்லை. எல்லா இடங்களிலும் அவளுக்கான வரையறை "ஆணுக்குக் கட்டுப்பட்டு, ஆனுக்காக வாழ்" என்பதே. கட்டப்பட்டிருந்த நூல்களும், அடைக்கப்பட்டிருந்த சிறைகளும் வண்ணங்களால் வேறுபட்டிருந்தாலும் "அடிமைத் தத்துவம்" காக்கப்பட்டே வந்திருக்கிறது. சீனப் பெண்கள் மட்டும் இதற்கு விதிவிலக்காக முடியுமா என்ன? நீண்டு நிற்கும் பெருஞ்சுவர் சீனாவுக்கான அடையாளம். அந்தப் பெருஞ்சுவருக்குப் பின்னான பெண்களின் இருண்ட வாழ்வு குறித்துப் பேசுகிறது இந்நூல்.

சீனப்பெண் சிறு அறிமுகம் என்பது தொடங்கி, மதங்களால் உருவாக்கப்பட்ட பெண், பெண்களுக்கான சமூகப்பாடங்கள், மரணித்த பாதங்கள் இலக்கியத்தில், அரசியலில், கல்வியில், தற்காலத்தில் சீனப்பெண்களின் பரிமாணங்கள், புலம்பெயர்நாடுகளில் அவர்களின் வாழ்வியல், சாதனைகளில் சீனப்பெண்கள் எனக் கிட்டத்தட்ட 40 தலைப்புகளில் மிகுந்த நுணுக்கங்களோடும், உண்மைகளோடும், அக்கறையோடும் எழுதப்பட்டிருக்கிறது.

"திறமையற்ற பெண் தான் நற்குணமுடையவள்", "மகள்களை வளர்ப்பதை விட வாத்துக்களை வளர்ப்பது மேல்" போன்ற சீனப் பழமொழிகளிலும், "பெண்ணாயிருப்பது எத்தனை வருந்தத்தக்கது!! பூமியில் வேறெதுவும் இத்தனை கீழ்த்தரமில்லை, ஆண்கள் வாயிற்கதவில் சாய்ந்துநிற்பது சொர்க்கத்திலிருந்து தெய்வங்கள் வீழ்ந்தது போல், நான்கு கடல்களையும் வீரத்துடன் எதிர்கொள்வான், ஆயிரம் மைலகளுக்கு காற்றையும் தூசியையும்கூட, பெண்பிறந்தால் யாருக்கும் பிடிக்காது" என்று தொடங்கும் சீனப்பழங்கவிதையொன்றிலும் ஆரம்பித்திருக்கிறார் ஜெயந்தி சீனப்பெண்களுக்கான அறிமுகத்தை. அங்கும் தந்தை வழிச்சமூகம் ஆரம்பித்த காலத்தே தான் பென்ணடிமைத்தனம் தன் வேர்களைத் திறம்பட ஊன்ற ஆரம்பித்திருக்கிறது. தாவோவும், பௌத்தமும் கொண்டிருந்த பெண் மீதான அணுகுமுறை மற்றும் முடியாட்சிக் கால நிலை என எங்கும் பெண்ணுக்கு இருண்ட காலமே.

உலகம் போற்றும் தத்துவஞானி கன்பூசியஸ¤க்கும் கூடப் பெண் கடைநிலைதான் என்பது வருந்தத்தக்கதெனினும் அதிர்ச்சியளிக்கவில்லை. ஏனென்றால் இங்கே பிதாமகன்கள் என்று பேசப்படுகிற பல கொம்பர்களுக்கும் கூடப் பெண் அவர்களுக்கான ஒரு சேவகி மட்டுமே என்பது வரலாற்று உண்மை. ஆண் கன்பூசியஸை விட்டுப் பெண் கன்பூசியஸ் என்று கொண்டாடப்பட்ட சீனப் பெண் அறிஞர் பான் ஜாவ் பெண்களுக்கு என்ன சொன்னார் என்று பார்த்தாலுமே நம்முடைய "தையல் சொல் கேளேல்" பாணியாக இருக்கிறது. அச்சம், மடம், நாணப் பாடங்களைத்தான் பான் ஜாவும் எடுத்துத் தொலைக்க வேண்டிய சிந்தனை அவலத்தை அச்சமூகம் ஊட்டி வளர்த்திருக்கிறது.

ஆணுக்காக வார்க்கப்பட்ட பெண்களைச் சீனச் சமூகத்திலும் கண்டறிந்து பல்வேறு பழக்கவழக்கங்கள், வரதட்சணை, குடும்ப நிகழ்வுகள் எனப்பலவற்றையும் விட்டுவிடாது விளக்கியிருக்கிறார் ஜெய்ந்தி. என்னை மிகவும் பாதித்த அங்கத்தைய பழக்கம் ஒன்று "மரணித்த பாதங்கள்" என்ற தலைப்பில் கட்டுரையாக்கப்பட்டிருக்கிறது. "பெண்ணின் உடலும் ஆணுடையதே" என்ற சமன்பாட்டைப் பலசமூகங்களும் நிறுவியே வந்திருக்கிறது. பழஞ்சீனச் சமூகத்தில் பெண்ணின் பாதங்கள் ஆணுக்கு இச்சையைத் தூண்டுவதாகவும், அவன் அழகின் எதிர்பார்ப்புக்கு ஏற்பவும் அவன் எதிர்பார்க்கும் அளவுகளில் சிறியதாக இருக்கவேண்டுமாம். அதற்காகப் பெண்கள் பாதங்களை இறுக்கி, மடக்கிக் கட்டிக் கொள்வார்களாம் அதன் வளர்ச்சியைத் தடுக்க. இது வேறு ஒரு சடங்காக நடத்தப்படுமாம். முதலில் கால்விரல் நகங்கள் வெட்டப்பட்டுப் பின் எலும்பையும், தசையையும் மென்மையாக்க மூலிகை காய்ச்சிய சுடுநீரில் காலை ஊறவைத்துக் கடைசியில் கட்டைவிரலை மட்டும் விட்டு மீதி விரல்களையெல்லாம் உள்ளே தள்ளி இறுக்கிக் கட்டிவிடுவார்களாம். அப்படிக் கட்டிய பாதங்களோடே சில வருடங்கள் நடந்தால் பாத வளர்ச்சி தடுக்கப்பட்டுச் சிறியதாகவே இருக்குமாம். இவ்வளவு பெரிய வன்முறை 20ம் நூற்றாண்டுத் தொடக்கம் வரை இருந்துவந்துள்ளது என்பது உபகுறிப்பு. இப்படியெல்லாம் ஒருவனுக்காகச் சிரமப்பட்டுச் சிறிய பாதங்கள் கொண்டு கல்யாணம் கட்டித்தான் தொலைக்க வேண்டுமா என்றால் "செத்த பின் அவளின் கல்லறையைப் பராமரிக்க கணவனோ, வாரிசுகளோ இல்லாது போனால் அவள் மோட்சம் அடைய முடியாது" என்பது இன்னொரு எழவெடுத்த நம்பிக்கையாம். உண்மையில் இந்தக் கட்டுரையை இரண்டாவது முறையாக வாசிக்கும் போதும் நான் உணர்ச்சி வயப்பட்டேன். நம்மை மாதிரி ஆட்கள் அங்கே பிறந்து தொலைந்திருந்தால் நிச்சயமாக மோட்சமே கிடைத்திருக்காதே என்ற எண்ணமும் வந்துபோனது.

ஆனால் பெரும் இடிகளுக்கு நடுவிலும் சின்ன மழையொன்று சிதறி விழுவதைப் போல் இத்தனை இடர்ப்பாடுகள் நிறைந்த சமூக அமைப்பிலும் தடைகளைத் தாண்டிச் சாதித்த பெண்களும் உண்டுதான். அப்படி வெளிப்பட்ட முதல் சீனப்பெண் விமானி உள்ளிட்ட இன்னும் சில முதல் பெண் வகையராக்களையும், சமீபத்திய சட்ட, சமூக மாற்றங்களையும் கூடக் கோடிட்டுக் காட்டிச் சில நம்பிக்கைகளையும் விதைத்து முடிகிறது நூல்.

எனக்கு இந்நூல் சொல்லியவை ஏராளம். அவ்வகையில் இதை ஒரு படிக்க வேண்டிய நூல் என்பேன். புத்தகம் குறித்து முதல்முறை வாசித்த போதே தனிப்பட்ட முறையில் என் நண்பர்களுக்குப் பரிந்துரைத்தேன் எனினும் அது குறித்து இங்கே எழுத நினைக்கையில் சில தயக்கங்கள் இருந்தன. அதில் முக்கியமானது ஜெயந்தி என் நண்பர் என்பது. எனது கருத்துத் தளங்கள் சிலவோடு ஜெயந்திக்கு இடைவெளிகள் இருக்கலாம், என்றாலும் இணையத்தில் நான் நெருங்கிப் பேசும் சுகமான சொற்ப நட்புகளில் அவர் இருக்கிறார். நண்பர்களின் புத்தகங்களை எடுத்துக்கொண்டு எழுதுவதில் சில அகவயப்பாட்டுச் சிக்கல்கள் உள்ளன. அதில் ஒன்று வெறும் சொரிதலாய் முடிந்துவிடக்கூடும் என்பது. ஆனால் இரண்டாவது முறையாகவும் வாசித்த பின்பு ஜெயந்தியை மறந்து அந்தப்பிரதி தனக்குள் மட்டும் என்னை வைத்திருந்தது. எனவே எழுத நினைத்தேன்.

இப்போதும் ஜெயந்திக்கு இந்தப் பிரதியின் வாசகியாக மட்டும் சொல்ல நினைப்பது "சிந்திக்கிற, எழுத விரும்புகிற எல்லாப் பெண்களும் தாம் நினைக்கும் தூரம் வரை வந்து சேர்ந்துவிடுவதில்லை. இடையில் வீடு இழுத்து விடுகிற, சமூகச் சேறு விழுங்கி விடுகிற சோகங்கள் உண்டு. எல்லாம் தாண்டி வந்த பின்னும் எத்தனை பேருக்கு உண்மையான சமூக அக்கறை இருக்க முடியும் என்பதும் சொல்வதற்கில்லை. விகடனிலும், குமுதத்திலும் ஒரு காதல் அல்லது சாதல் கதை வந்த கையோடு அந்த வெளிச்சத்திலேயே தன் ஆயுளைக் கரைத்துக் கொள்கிறவர்களும் உண்டு. அப்படியின்றி எழுதக் கிடைத்த வாய்ப்பை சமூக நேசத்தின்பாலும் செலுத்த முடிவது சிறப்பானது. நீங்கள் பெருஞ்சுவருக்குப் பின்னே எழுத நினைத்ததில் அப்படியொரு நேசம் நிறைந்திருக்க வேண்டும் என்பதே என் கணிப்பு. அதை நீங்கள் தொடர வேண்டும். இரண்டாவது நானறிந்த வரை தற்கால சமூக நிகழ்வுகளில் அது பெண் சம்பந்தப்பட்டதே எனினும் ஒரு எழுத்தாளராக அல்லது பெண் எழுத்தாளராக உங்களின் குரலை நான் கேட்டதில்லை. கேட்க விரும்புகிறேன். சீனப் பெருஞ்சுவரையும் தாண்டி விடயங்கள் சேகரிக்கும் ஜெயந்தியின் எழுத்து மனம் மற்ற தேவையான நேரங்களிலும், இடங்களிலும் கூடத் தன் மௌனம் உடைத்து வெளிவர வேண்டும் அதன் சாதக பாதகங்கள் பற்றிய பிரக்ஞைகள் இன்றி.



'பெருஞ்சுவருக்குப் பின்னே' ( சீனப்பெண்களின் வாழ்வும் வரலாறும் )
நூலாசிரியர் -ஜெயந்தி சங்கர்


உயிர்மை வெளியீடு - டிசம்பர் 2006

கிடைக்குமிடம் :
திரு. மனுஷ்ய புத்திரன்,
உயிர்மை பதிப்பகம்,
11/29, சுப்ரமணியம் தெரு,
அபிராமபுரம், சென்னை- 600 018,

Tele/Fax : 91-44-2493448, residence:91-44-52074030, Mobile : 9444366704

'பெருஞ்சுவருக்குப் பின்னே' - நூல் அறிமுகம் -- மதுமிதா

ஜெயந்தி சங்கரின் 'பெருஞ்சுவருக்குப் பின்னே' நூலின் தலைப்பே சீனப்பெருஞ்சுவரினை நினைவுபடுத்துவதோடு பெருஞ்சுவருக்குப் பின்னே நிகழ்ந்திருப்பது என்ன என்ன என்பதை வாசித்தறியும் ஆர்வத்தினை தூண்டுவதாகவும் உள்ளது.


'சீனப் பெண்களின் வாழ்வும் வரலாறும்' எனும் சிறு தலைப்பு நூலின் சாரம்சம் இதுதான் என்பதனை கோடிட்டுக் காட்டி விடுகிறது. பெண்களின் வாழ்க்கையே சுவருக்குப் பின்னேயான வாழ்க்கையாய் அடைபட்டு விடுவதை சீனப் பெண்களின் வாழ்வும் வரலாறும் அப்பட்டமாக அப்படியே காட்டப்பட்டுள்ளது.


சீனப் பெண்களின் வாழ்க்கைநிலை குறித்து தமிழுக்கு முற்றிலும் புதுமையானதொரு நூல் இது. ஜெயந்தி சங்கரின் இந்நூல் உயிர்மை வெளியீடாக 192 பக்கங்களில் வெளிவந்துள்ளது. 37 தலைப்புகளில் நூலாசிரியர் கட்டுரைகளை அளித்துள்ளார்.
கட்டுரைகள் அனைத்தையும் மெனக்கெட்டு தன்னார்வத்துடன் ஆய்வுரீதியில் கொடுத்துள்ளார். எனினும் மொழிபெயர்ப்புநூலாகத் தெரிவதனை தவிர்க்க இயலவில்லை. நம் சூழலுக்கு முற்றிலும் புதிதான ஒரு படைப்பாகையால் இப்படித் தோன்றுவதனை தவிர்க்கவியலவில்லை. அனைத்தையும் மீறி அவரின் கடின உழைப்பும் அக்கறையும் தெரிகிறது.




நூலாசிரியரின் முன்னுரையில் சொல்லும் இவ்வரிகளே அவரின் ஆய்வுக்குக் கட்டியம் கூறும் - 'வேறு எதிலும் கவனம் செலுத்தாமல் பல வாரங்களுக்கு இது ஒன்றையே செய்து கொண்டிருந்தேன். தேசிய நூலகத்தின் குறிப்பெடுக்கும் பிரிவில் வாரா வாரம் சில மணி நேரங்கள் செலவழித்து எடுத்த குறிப்புகளைக் கொண்டு பல மணி நேரங்கள் கணினியில் எழுதினேன். இது தவிர, இணையமும் கைகொடுத்தது. சில வருடங்களுக்கு முன்பு சீனாவிலிருந்து வந்து இங்கு வசிக்கும் தோழி ஸேராவிடமும் அவர்களின் தோழிகளிடமும் எழுதியதை அவ்வந்த வாரமே கலந்து பேசி சரி பார்த்துக் கொண்டேன். ஒரு சில விவரங்களில் அவர்களுக்கே சந்தேகம் வந்தது.'
முதல் அத்தியாயத்திலேயே முகத்திலறையும் உண்மை வெளிப்பட ஆரம்பிக்கிறது.
'ஒரு பெண்ணைக் குறிக்கும் சீனத்தின் சித்திர எழுத்தில்பணிவுடன் மண்டியிட்டிருக்கும் பெண்தான் சித்தரிக்கப்படுகிறாள். மணமான பெண்ணைக் குறிக்கும் சீன எழுத்து இரண்டு பகுதிகளைக் கொண்டுள்ளாது. ஒன்று துடைப்பம்; இன்னொன்று ஒரு பெண். அதன் உச்சரிப்பு - ஷ¥வென் ஜெயிட்சு. இதற்கு அகராதி கொடுக்கும் விளக்கம் 'கீழ்ப்படிதல் மற்றும் பெண் தரையைக் கூட்டுதல்' என்று இருவேறு பொருள்கள். எழுத்து வடிவம் வருவதற்கு முன்பே சீனத்தில் ஆணாதிக்கச் சிந்தனைக்கு விதை போட்டாகி விட்டது என்பதற்கு இதுவும் நல்ல ஒரு சான்று'
என்று கொடுத்துள்ளார்.


தொடர்ந்து 'திறமையற்ற ஒரு பெண்தான் நற்குணமுடையவள்' மற்றும் 'மகள்களை வளர்ப்பதைவிட வாத்துகளை வளர்ப்பது இன்னும் லாபகரமானது' போன்ற சீன பழமொழிகள் சீனப் பெண்களின் நிலையினை தெளிவாகவே சொல்கின்றன.
'நன்றி கெட்ட மகனை விட நாய்கள் மேலடா' என்ற பாடல்தான் கேட்டுள்ளோம். வாழ்க்கையில் நன்றிகெட்ட மகனால் மனதிலடிபட்ட தந்தையின் மன உணர்வு அது. மகளை வளர்ப்பதைவிட வாத்தை வளர்ப்பது லாபகரமானதா வாசிக்கையிலேயே வலிக்கிறது.


சமீப வருடங்களுக்கு முன்னால்வரை எந்தக் காலக்கட்டத்திலும் அரசு வேலைகளில் பெண் அனுமதிக்கப்பட்டதில்லை. அவளுக்கு வீடு மட்டுமே உலகம் என்று வகுக்கப்பட்டுள்ளது. குடும்பப் பெண் வெளியில் செல்வது பிள்ளைப்பேறு தொடர்பாகவும், வேறுவகைப்பெண்கள் ஆணின் சௌகரியம் கருதி மட்டுமே. வாழ்நாள் முழுவதுமான உடல் மற்றும் மனவலிதான் பழஞ்சீனப்பெண்களுக்கு விதிக்கப்பட்டிருந்தது. பிறந்ததிலிருந்தே இவ்வகையான வாழ்வு முறைக்குத் தயார்படுத்தப்பட்டே வந்திருக்கிறாள்.


இரண்டாம் அத்தியாயத்தில் பெண் குறித்த சீனப்பழங்கவிதை:
மூன்றாம் நூற்றாண்டைச் சேர்ந்த •பூ ஷ¤வான் என்ற சீனப் பெண் கவிஞரின் 'பெண்' என்ற கவிதையை ந்யூயார்க்கைச் சேர்ந்த ஆர்தர் வேய்லி என்பவர் 1946ல் மொழிபெயர்த்தார். அதன் ஒரு பகுதியின் எளிய தமிழாக்கம் -


பெண்ணாயிருப்பது எத்தனை வருந்தத் தக்கது ! !
பூமியில் வேறு எதுவும் இத்தனை கீழ்த்தரமில்லை
ஆண்கள் வாயிற்கதவில் சாய்ந்து நிற்பது
சொர்க்கத்திலிருந்து தெய்வங்கள் வீழ்ந்தது போல்.
நான்கு கடல்களையும் வீரத்துடன் எதிர்கொள்வான்
ஆயிரம் மைல்களுக்கு காற்றையும் தூசியையும் கூட.
பெண் பிறந்தால் யாருக்கும் பிடிக்காது
அவளை அவள் குடும்பத்தினருக்கும்.
அவள் வளர்ந்ததும் அறையில் ஒளிந்து கொள்வாள்
ஓர் ஆணை முகத்திற்கு நேராகப் பார்க்க பயந்து.
யாரும் அழுவதில்லை அவள் வீட்டை விட்டுச் செல்லும் போது-
சட்டென்று மழை நின்று மேகங்கள் தெரிவதைப் போல
அவள் தலை குனிந்து தன்னைத் திடப் படுத்திக் கொள்வாள்.
சிவந்த உதடுகளைக் கடிக்கும் அவளின் பற்கள்,
பணிவாகப் பலமுறை குனிந்தும் மண்டியிட்டும்
வேலைக் காரர்களையும் வணங்குதல் வேண்டும் அவள்
அவனின் அன்பு வானத்து நட்சத்திரங்களைப் போல தூரத்தில்
இருந்தாலும், சூரியகாந்தி சூரியனை நோக்கிச் சாயும்.
இருவரின் உள்ளமும் நீரும் நெருப்பும் போன்ற எதிர் நிலையில்
நூறு இன்னல்கள் கவிழும் அவளின் மீது.
அவளின் முகம் வருடங்களின் மாற்றங்களையடைய
அவள் தலைவனோ விதவிதமான சுகங்களைத் தேடிய படி.
அப்படியே வாசிக்க வாசிக்க அப்பெண் கடந்து செல்ல வேண்டிய இன்னல்கள் கண்முன்னே தெரிகின்றன காட்சிகளாய்.


தொடரும் அத்தியாயங்களில் முழுமையான சீனப்பெண்கள் குறித்த வரலாறு சீனத்தின் வரலாறாகவே காணக் கிடைக்கிறது. மதம், முடியாட்சி, சித்திரஎழுத்து, பெண்மொழி, அரசிகள், வீரப்பெண்கள், ஆசைநாயகிகள், அழகிகள், குரூபிகள், இலக்கியத்தில், அரசியலில் பெண்கள், பெண்கல்வி, குடும்பம், சிசுக்கொலை, வரதட்சிணை, திருமணம்.......... என பல்வேறு தலைப்புகளில் பெண்களின் பல்வேறு வாழ்க்கை நிலையினைக் கொடுத்துள்ளார்.


பெண்களின் பாதங்களைக் கட்டும் 'மரணித்த பாதங்கள்' வாசிக்கையில் மரத்துப்போகிறது மனம்.


உலகளவில் பெண் சிசுக்கொலை பிரபலம் போலிருக்கிறது. இங்கே உசிலம்பட்டியில் மட்டுமே என்று இனி வருந்த வேண்டாமோ? சீனாவிலும் பெண் சிசுக்களுக்கு உயிரின் மீதான பாதுகாப்பில்லை.


1996 ஆம் ஆண்டு கணக்கெடுப்பின்படி சீனாவில் மட்டும் ஒவ்வொரு வருடமும் 10,000 பெண்குழந்தைகள் கொல்லப்படுவதாகத்தெரிகின்றன. என்ன நெஞ்சு கொதிக்கிறதா. அடங்கலாம் என்று இந்தப் பாடலை வாசித்தால் இன்னும் எகிறுகிறது.
'பாடல்களின் நூல்' என்ற 1000 - 700 கிமு வைச் சேர்ந்த பழஞ்சீன இலக்கியத்தில் உள்ள


மகன் பிறந்தால்
அவனைப் படுக்கையின் மீது தூங்க வை
அவனுக்கு உயரிய உடைகளை அணிவி
அவனுக்கு விளையாட பச்சைப் பவழத்தைக் கொடு
மகள் பிறந்தால்
அவள் தரையில் உறங்கட்டும்
கந்தலைக் கொண்டு அவளைப் போர்த்து
உடைந்த பீங்கானை விளையாடக் கொடு



1947 ல் 'ஒரே குழந்தை' கொள்கை அறிமுகப் படுத்தப்பட்டபின் சீனப்பெண்கள் அடிக்கடி காணாமல் போகிறார்களாம். ஒரு குழந்தைக்கு மேல் உருவான கருவைக் கலைக்கவோ, பெற்றெடுத்துவிட்டு மேலை நாட்டினருக்குத் தத்து கொடுக்கவோ பெண்களுக்கு அவகாசம் தேவையாக இருந்தது. அதனால், குறிப்பிட்ட காலத்துக்கு இப்பெண்கள் காணாமல் போனார்கள். ஒரு குழந்தைக்கு மேல் பெற்றுக்கொண்டது கண்டுபிடிக்கப்பட்டால், ஊதியத்தில் வெட்டு விழுந்தது. அரசாங்கத்தால் ஓய்வூதியம் குறைக்கப்பட்டும் மறுக்கப்பட்டும் வந்தது. இன்னும் சில வருடங்களில் 40 முதல் 60 மில்லியன் பெண்கள் கணக்கில் வராமல் காணாமல் போகலாம் என்கிறார்கள் மக்கட் தொகையியல் வல்லுநர்கள். இந்த வரிகளை எழுதும் போது ஜெயந்தி எப்படியெல்லாம் வேதனைப்பட்டாரோ என்றெண்னுகையில் இதையும் மீறும் வண்ணமாய் பாலியல் தொல்லை, குடும்ப வன்முறை, திருமண சிக்கல் குறித்த சில கட்டுரைகள் வருகின்றன. வாசிக்கையில் வாசிக்கையிலேயே இத்துனை துன்பம் என்றால் வாழ்ந்த பெண்களின் நிலை என்ற கேள்விக்குறி பெரிதாய் தோன்றுகிறது.
சட்டத்தின் பெயரால் பெண்கள் சிறையிலும், காவலிலும் அடைந்த கொடுமை ரத்தக்கண்ணீர் வரச்செய்யும்.


சீனத்தில் நான்கு நிமிடங்களுக்கு ஒரு பெண் தற்கொலை செய்து கொள்கிறாள். உலக சுகாதார நிறுவனத்தின் கணக்கெடுப்பின்படி ஒவ்வொரு வருடமும் 1.5 மில்லியன் சீனப்பெண்கள் தற்கொலைக்கு முயற்சிக்கிறார்கள். அதில் 1,50,000 பேர் சாகிறார்கள். கிராமப்புறங்களில் நகரங்களைக் காட்டிலும் மூன்று மடங்கு சீனப்பெண்கள் தற்கொலை செய்து கொள்கிறார்கள். கிட்டத்தட்ட 70-80 சதவிகிதம் கணவன் மனைவி சண்டையால் விளைந்தவையாம்.


மணவிலக்குகள் அதிகரித்துவிட்ட நிலையில் போலி மணவிலக்கு குறித்து சொல்லியிருப்பது அதிர்ச்சியளிக்கக்கூடிய விஷயமாயுள்ளது. சர்வ சாதாரணமான போலிமணவிலக்குகள் நிஜமான மனவிலக்குகளுக்கு தம்பதியினரிடையே உண்மையான பிளவுக்கு காரணமாகிவிடுகிறதாம்.


புலம் பெயர் நாடுகளில் சீனப்பெண்களின் நிலையினைக் காணும்போது உலகம் முழுக்க பெண்களின் நிலை இதுதானோ, அது எந்த தேசத்து, இனத்துப் பெண்ணாக இருந்தாலும் என்னும் நிலை தீவிர யோசனையைக் கிளப்புகிறது. பாலியல் ரீதியான சிரமங்கள்தான் எத்தனை எத்தனை.


ஜப்பானியர் ஆட்சிக்காலத்தில் தென்கிழக்காசிய வட்டாரத்தில் சீனப்பெண்களே ஜப்பானிய இராணுவத்தினரின் உடற்தேவைகளுக்கு அதிகமாக இலக்கானார்கள். ஏராளமான பெண்கள் ஊரை விட்டுத்தள்ளி ஒதுக்குப்புறமாக அமைக்கப்பெற்ற வீடுகளில் சிறை வைக்கப்பட்டார்கள். இவ்வகையில் சிறைப்படுத்தப்பட்ட மொத்தப் பெண்களில் 80 சதவிகிதம் பேர் சீனப்பெண்கள்.


சீனப்பெண்களின் உடையில் மாற்றம் வரவேண்டுமென்றும், சீனப்பெண்ணுக்கு உடையின் அசௌகரியமாக இருக்கும் என்று அக்கறை கொண்ட ஒரு கவிஞரின் கவிதை இதோ:


ஒரு சீனப் பெண் வியாபாரியைக் கேளுங்கள்
சீனப்பாணியில் உடை உடுத்த வேண்டுமா என்று,...
எத்தனை சிரமம் இந்த வியாபாரப் பெண்களுக்கு
அவர்கள் அழகிய பருத்தித் துணிகளும் பட்டுத் துணிகளும் விற்கிறார்கள்.
ஒரு கையில் துணிப் பொதியைக் கக்கத்தில் இடுக்கிக் கொண்டு
இன்னொரு கையில் குடையையும் எடுத்துக் கொண்டால்
இன்னும் சிரமமாக இருக்காது?


இத்தனையும் கடந்தும் பல பெண்கள் அரசியலில், இலக்கியத்தில், இராணுவத்தில் பல்வேறு துறைகளிலும் முன்னுக்கு வந்துள்ளனர். தன்னம்பிக்கையுடன் போராடி வென்ற பெண்களாகவும் காட்சியளிக்கின்றனர்.

ச்யூ ஜின் (1877-1907) மட்டுமே 1906 ல் பெண்களுக்கான பத்திரிகையைத் தொடங்கியவர். பாடல்களும், கவிதைகளும் எழுதியுள்ளார். ஷாங்குவான், லீ பாய் கவிஞர்கள். ஷன் சுங்க் இலக்கிய வரலாறு ஆளுமை மிக்கவர். ஜீத்தியேன்( கி.மு. 221) கவிஞர். யாங்க் யூஹ¥வான் ஆடல், பாடல்களில் வல்லவர்.

ஷ்வே தாவ் ( கி.பி. 758 - 832) கவிஞர் பாடகி. ஸ்யேதாவ்யுன் கவிஞர், கட்டுரையாளர். லியூ லிங்க் ஸியன் கவிஞர்(கி.பி. 502 - 557). லீச்சிங்க் ஜாவ் கவிஞர், கட்டுரையாளர், பாடலாசிரியர் (கி.பி. 1084 - 1155). ஷீமூ கவிஞர், நாட்டுப்பற்றாளர்.

ஸின்ரன் - இவரின் 'சீனாவின் நல்ல பெண்மணிகள்' நூல் 50 நாடுகளில் 22 மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.

'வீரப்பெண்கள்' நெஞ்சுரம் பெற்ற வீர மகளிர்களைக் குறித்த கட்டுரை. சீனப்பெண்களின் வீரத்துக்கு எடுத்துக்காட்டாக இருந்த எண்ணற்ற பெண்களைச் சீன வரலாறு நெடுகிலும் சந்திக்க இயலுகிறது.

'நவீன சீனத்தில் பெண்களின் நிலை' மனதை ஆற்றுப்படுத்துவதாய் உள்ளது. அனைத்துத்துறைகளிலும் நெஞ்சுரத்துடன் போராடி வெல்லும் மகளிரின் மாண்பு சீனப்பெண்களிடமும் காணக்கிடைக்கிறது.

இன்றைய சாதனைப்பெண்களில் சிலர் என்ற அத்தியாயம் (இதுவே கடைசி அத்தியாயம்) 8 பெண்கள் குறித்த கட்டுரை அடங்கியது. விமானி, நிறுவனர், செஸ், கம்பூட்டர் சாதனையாளர் என பலதுறைப்பெண்கள் குறித்து பேசுகிறது இவ்வத்தியாயம்.

'பெருஞ்சுவருக்குப் பின்னே' சீன பெண்கள் குறித்த நுட்பமான பார்வைக்கான திறவுகோல்.


----


'பெருஞ்சுவருக்குப் பின்னே' ( சீனப்பெண்களின் வாழ்வும் வரலாறும் )
நூலாசிரியர் -ஜெயந்தி சங்கர்


உயிர்மை வெளியீடு - டிசம்பர் 2006

கிடைக்குமிடம் :
திரு. மனுஷ்ய புத்திரன்,
உயிர்மை பதிப்பகம்,
11/29, சுப்ரமணியம் தெரு,
அபிராமபுரம், சென்னை- 600 018,

Tele/Fax : 91-44-2493448, residence:91-44-52074030, Mobile : 9444366704

Tuesday, April 06, 2010

ஜெயந்தி சங்கரின் கதை மாந்தர்கள்

-- புதியமாதவி



அண்மையில் (2006) சிங்கையிலிருந்து ஜெயந்தி சங்கர் எழுதி வெளியிட்டிருக்கும் மூன்று புத்தகங்கள் என்னைத் தேடி வந்தன. (நாலே கால் டாலர் -16 சிறுகதைகள், முடிவிலும் ஒன்று தொடரலாம் - மூன்று குறுநாவல்களின் தொகுப்பு,ஏழாம் சுவை - 11கட்டுரைகள்),எவ்விதமான சின்னத் துண்டு கடிதமும் இணைக்கப்படாமல். எப்படி முகவரி கிடைத்திருக்கும் என்று வழக்கமான துப்பறிதலை விலக்கி வைத்து விட்டு புத்தகங்களைப் புரட்ட ஆரம்பித்தால் ஒன்றிலிருந்து ஒன்றாக மூன்று புத்தகங்களையும் ஒருசேர வாசிக்க வைத்த எழுத்தின் ஆளுமையும் ஜெயந்தி கதை மாந்தர்களும் என் கண்ணாடிக் கதவுகளில் பளிச்சிட்டு மின்னும் மும்பையின் மழை மேக மின்னலைப் போல மின்னி கொட்டி நனைத்து இருப்பதை நானே புரிந்து கொள்ள கொஞ்சம் நேரம் பிடித்தது உண்மை.


ஜெயந்திசங்கரின் கதைகள் பலவற்றை மின்னிதழ்களில் தொடர்ந்து வாசிக்கும் வாசக அனுபவம் ஏற்கனவே இருந்தாலும் ஒருசேர வாசிக்கும்போது தான் ஏழாம் சுவையை அனுபவிக்க முடிகிறது. கதை மாந்தர்களிடமிருந்து விலகி நிற்காமல் அதே நேரத்தில் அவர்களின் உணர்வுகளில் கலந்து அதிகப்படியாக அழாமல், கூச்சலிடமால ரொம்பவும் சர்வ சாதாரணமாக கதைகளை நகர்த்திச் செல்வது தான் ஜெயந்தியின் கதைச் சொல்லும் பாணியாக அமைந்துள்ளது.


கதைகளும் கதை மாந்தர்களும் பெரும்பாலும் பெண்ணின் பார்வையிலேயே இருப்பதால் ஜெயந்தியின் கதை மாந்தர்களின் நிஜமுகம் அலங்காரங்கள் இன்றி அன்றாடம் சந்திக்கும் பெண்களாக அமைந்து விடுகிறார்கள். சிங்கையும் சிங்கையின் புலம்பெயர்ந்த வாழ்வும் அந்த வாழ்வில் அன்றாடம் சந்திக்கும் பிரச்சனைகளும் கதையின் கருப்பொருளாகி ஜெயந்தியின் கதைகளைத் தனித்துவமாக்கி சிறப்பு செய்கின்றன.

சட்டமும் ஒழுங்கும் மனித நேயத்தைக் கொன்றுவிட்டு என்ன சாதிக்க முடியும் என்பதை மிகவும் நேர்த்தியாக படைத்திருக்கும் கதை "ஈரம்" . கதையின் முடிவில் மகன் மகிழ்ச்சியுடன் வந்துடும்மா என்று சொல்வதை எதிர்பார்ப்பவளுக்கு ஏமாற்றம். மகன் சொல்கிறான்.'எடுத்ததுமே, ஏம்மா, இப்ப என்ன ஆயிடுச்சுன்னு திடீர்னு கிளம்பி இங்க வரேன்ற?' கதை முடிகிறது நாம் அப்போதுதான் இன்னும் ஆழாமாக யோசிக்க ஆரம்பிக்கின்றோம்

வாழ்க்கையின் பொருளியல் தேவைகள் முன்னிறுத்தப்படும்போது தாயன்பு, மனித நேயம் எல்லாமே இரண்டாவது, மூன்றாவது நிலைக்குத் தள்ளப்படுவதை. சிங்கையின் சட்டம் ஒழுங்கான சமுதாயம், இந்திய வாழ்வின் பொருளியல் தேடலின் அவலம் இரண்டையும் ஒரு சேர ஒரே கதையில் -ஒரு கல்லில் இரண்டு

மாங்காய்' அடித்த மாதிரி சாதித்திருக்கிறார் ஜெயந்தி.


திரிசங்கு கதை முழுக்க முழுக்க ஒரு மூன்றாம் வகுப்பு படிக்கும் சிறுவனின் பார்வையில் சொல்லப்படும் கதை. கதை முழுக்கவும் சிறுவனின் மனநிலையில் அவனுடைய வயதுக்கு ஏற்ற வார்த்தைகளுடன் எவ்விடத்திலும் அதை மீறாமல் எழுதப்பட்டிருக்கும் கதை. பாலர் பள்ளியிலிருந்து ஆரம்பிக்கும் மதிப்பெண்கள், நேர்முகத்தேர்வுகள் என்றாகிவிட்ட போட்டிகள் நிறைந்த உலகத்தை புதிய முறையில் சொல்லும் கதை பந்தயக்குதிரை.

மிருகன் என்ற கதையும் கதைக்கருவும் எவரும் தொடாத செய்தி. பல இடங்களில் பத்திரிகைகள் வாயிலாக இப்படிப்பட்ட மிருகங்களும் மனித வடிவில் நடமாடுவதை வாசித்துவிட்டு மறந்துவிடுகின்றோம். ஒரு குழந்தையை, குழந்தையின் பெற்றவர்களை எப்படி எல்லாம் அச்சம்பவம் பாதிக்கும் என்பதும் இம்மாதிரி நிகழ்வுகள் காவல்துறையில் புகார் செய்யப்பட்டால்தான் தன் குழந்தைக்கு ஏற்பட்ட கொடூரம் இன்னொரு குழந்தைக்கு ஏற்படுவதைத் தடுக்க முடியும் என்ற சமூக அக்கறையும் தொனிக்க எழுதப்பட்டிருக்கும் கதை.


தையல் சிறுகதையும் எம்.ஸீ சிறுகதையும் பெண்ணியத்தளத்தின் மிகத் தீவிரமானக் கருத்துகளை நறுக்கு தெறித்தாற்போல கச்சிதமாக படைத்திருக்கும் கதைகள் இவருடைய பெண்கள் குடும்பம், குடும்ப உறவுகளின் பின்னணியில் குடும்பத்திற்கு முதலிடம் கொடுத்து தன்னை, தனக்கான தனிப்பட்ட விருப்பு வெறுப்புகளை மறந்து செயல்படுபவர்களாக படைக்கப்பட்டிருந்தாலும் அவர்களிடம் ஏற்படும் சிலச் சிந்தனை மாற்றங்களைப் போகிற போக்கில் சொல்லிச்செல்கிறார்.


முடிவுலும் ஒன்று தொடரலாம் குறுநாவலில் ' பலமாதங்கள் சேர்ந்துவாழ்ந்து ஒத்திகை பார்த்துவிட்டு ஒத்து வரும் போலிருந்தால் மணமுடிக்கலாமென்று யோசித்துப் பதிவு திருமணம் செய்து கொண்டு பிறகு சம்பிரதாயப்படி ஒருமுறை ஊரைக் கூட்டி மணமுடிப்பார்களாம். லாவண்யாவிற்குக் கேட்கக்கேட்க அப்படியே
தலைகீழாய் நடக்கும் விநோதத்தை அறிந்து ஒரு புறம் நெருடலாய் இருந்தாலும் மறுபுறம் அதில் இருந்த நடைமுறை சாதகங்களையும் யோசிக்க ஆரம்பித்தாள்' (பக் 72) என்று அவள் யோசிக்க ஆரம்பிப்பதில் சொல்லாமல் சொல்லிச்செல்வார்.


ஆண்-பெண் இல்லற வாழ்வில் ஒருவரை ஒருவர் புரிந்து கொள்வது என்பதுதான் முக்கியம். அந்தப் புரிதல் இல்லை என்றால் அழகு, அறிவு, வேலை, சம்பாத்தியம் எல்லாமே அர்த்தமிழந்துவிடுகின்றன. 'பொல்லாதவனனோட குடித்தனம் நடத்திடலாம், புரியாவதனோட எப்படி குடித்தனம் நடத்த?' (பக் 79) என்று
கதைப்போக்கில் சொல்லிச் செல்வதை ரசிக்கலாம். கதை மாந்தர்களில் போக்கில் கதை நகர்த்திச் செல்லும்போது கதையாசிரியர் எவ்வளவு கவனமாக இருந்தாலும்
நுழைந்துவிடுவது ஏற்படுவதுண்டு. வேண்டியது வேறில்லை என்ர குறுநாவலில் செல்வி என்ற வீட்டுவேலைக்கு வந்திருக்கும் பெண் 'இந்த முறை அலங்காரங்கள் வழக்கத்தைவிடக் கொஞ்சம் கலையுணர்வோடு இருந்ததாகச் செல்விக்குத் தோன்றியது' (பக் 38) என்று சொல்லும் போது கலையுணர்வு என்ற பெரிய விசயத்தை புரிந்து கொள்ளக்கூடிய திறன் செல்வியின் மீது விழுந்திருக்கும் ஆசிரியரின் பார்வை. ஆனாலும் அடுத்து வரும் உரையாடல்கள் அதை ஓரளவு சமன் செய்திருப்பது இதம் தருகிறது.


குழந்தையை எடுத்துக்கொண்டு கிஷோர் ஓடிவிடுகிறான். லி•ப்டில் தேடி ஓடும் தாயின் மனநிலையில் அந்த நேரத்தின் உணர்வு கொந்தளிப்பில் மூளை ஒன்றுக்கும் மேற்பட்ட சேனல்களில் ஓடுவதாக காட்டியிருப்பதை ஏற்றுக்கொள்வதற்கில்லை.


ஜெயந்தியின் ஏழாம்சுவை உயிர்மை, அமுதசுரபி இதழ்களில் வெளிவந்த கட்டுரைகளின் தொகுப்பு.தன்னுடைய அரைநிர்வாண உடையையே ஓர் ஆயுதமாக்கியவர் மகாத்மா காந்தி என்ற வரலாற்று செய்தியுடன் விரிகிறது
ஆடைமொழி என்ற கட்டுரை. சிங்கையின் பல்வேறு விழாக்கள், நம்பிக்கைகள், செய்திகள் தரும் கட்டுரைகளாக ஏழாம்சுவை கட்டுரைகள் எழுதப்பட்டுள்ளன.

புலம் பெயர்ந்த வாழ்க்கை நம்மில் பலருக்கு திணிக்கப்பட்டுள்ளது, சிலருக்கு கை கூடிய கனவாகி இருக்கிறது. ஆனால் அந்தப் பின்புலத்தில் எழுதுபவர்கள் அதிகமில்லை என்ற ஒரு குறைபாட்டை முழுக்கவும் இல்லாது செய்திருக்கிறது ஜெயந்தி சங்கரின் ஒவ்வொரு பக்கங்களும்.தோழி ஜெயந்திசங்கருக்கு வாழ்த்துகள்.

முடிவிலும் ஒன்று தொடரலாம் (குறுநாவல்கள்)

வெளியீடு

சந்தியா பதிப்பகம்
57 A, 52 வது தெரு,
அஷோக் நகர்,
சென்னை - 83,
இந்தியா

தொ.பே - 2489 6979 / 93810 45211

ஜெயந்தி சங்கருடன் ஒரு கலாச்சார சுற்றுலா

--- வெங்கட் சாமிநாதன் (சிஃபி.காம்)



பெரனாக்கான் என்றால் என்ன என்று இதை வாசிப்பவர் எவருக்காவது தெரியுமா? யோசிக்க வேண்டாம், பதிலைத் தேடும் பாவனையில் ஆகாயத்தைப் பார்க்க வேண்டாம். சிந்திக்கும் பாவனையில் தலையைச் சொரிந்து கொடுத்துக் கொள்ளவும் வேண்டாம். தெரியும், அல்லது தெரியாது என்று இரண்டில் ஒன்றே உடனே பதிலாக வரும் சாத்தியம் உண்டு. தெரியாது. சரி. சட்டைக்காரன் என்றால் என்ன, யாரைச் சொல்வார்கள் என்று தெரியுமா? இந்த தலைமுறைக்குத் தெரிந்திருக்கும் சாத்தியமில்லை. ஆங்கிலேயர் இந்த நாட்டை ஆண்டு வந்த காலத்தில், இங்கேயே தங்கி இந்தியப் பெண்ணை மணந்து வாழ்ந்த ஆங்கிலேயர்களின் வாரிசுகளாக இந்தியர்களாகிவிட்டவர்களுக்கு, தமிழ் நாட்டில் சட்டைக் காரன் என்று பெயர். அவர்கள் மாத்திரம் தான் சட்டை அணிந்தவர்களா, அதனால் தான் அவர்கள் சட்டைக்காரர் ஆயினரா என்றால், தெரியாது என்பது தான் பதில். இந்த சட்டைக்காரர் குடும்பத்துக் குழந்தைகளைப் பார்த்து வியந்த என் நண்பர் சொல்வார்: அவர் மன்னி, "டேய் சீனு, இத்துனூண்டு குழந்தகள்ளாம் என்னமா இங்கிலீஷ் பேசறதூங்கறே! என்னமாடா இத்தனை சீக்கிரமா இங்கிலீஷ் கத்துண்டுதுகள் இந்த வாண்டெல்லாம்!" என்று சொல்லி ஆச்சரியப்படுவாளாம். ஆங்கிலோ இந்தியருக்கு என்று ராஜ்ய சபாவில் ஒரு இடம் ராஷ்டிரபதியின் நியமன உறுப்பினராக ஒதுக்கப்பட்டிருந்து. இப்போதும் அது உள்ளதா, அந்த இடத்தில்யார் என்றெல்லாம் தெரியாது.

ஆரம்பித்த விஷயத்திற்கு வருவோம். தென் சீனாவிலிருந்து வணிகம் செய்ய மலாய் தீபகற்பம் வந்து சேர்ந்த் சீனர்கள் நாளடைவில் மலாய் பெண்களை மணந்து மலேசியாவிலேயே தங்கி விட்டனர். அந்நாட்களில் சீனர்கள் தம் குடும்பத்தோடு வெளிநாடு செல்வது அனுமதிக்கப்படவில்லை. நம் ஊர் செட்டியார்கள் மாதிரி அவர்கள் தனியாகத்தான் சென்று வியாபாரத்தை மேற்கொண்டனர். ஆனால் நம் ஊர் செட்டியார்கள் அனேகர் தமிழ் நாடுதிரும்பினர். இப்படி வந்த சீனர்களுக்கும் மலேசியர்களுக்கும் பிறந்த கலப்பினத்தவர் தான் பெராக்கான் என்று அழைக்கப்படுவதாக ஜெயந்தி சங்கர் நமக்குச் சொல்கிறார். இவர்கள் கணிசமான எண்ணிக்கையில் இருப்பதால், அவர்கள் தம் தனித்வ அடையாளங்களைக் காப்பாற்றிக்கொள்ளவும் முடிந்திருக்கிறது. இவர்கள் உடைகள், சாப்பாடு, மொழி எல்லாமே சீன மலாய் கலப்பாகத்தான் இருக்குமாம். உணவு வகைகளில் இந்தோனேசிய, இந்திய கலவைகளையும் காணமுடிகிறது என்கிறார் ஜெயந்தி சங்கர். இவர்கள் பௌத்தர்கள். ஜாதகப் பொருத்தம் நக்ஷத்திரப் பொருத்தம் பார்த்துத் தான் வெற்றிலை மாற்றி திருமணத்தை நிச்சயப்படுத்திக் கொள்வார்களாம். ஆக பகுத்தறிவுப் பிரசாரத்திற்கு இங்கும் நிறைய வாய்ப்பு இருக்கிறது என்று தோன்றுகிறது. சிஇவர்கள் பேசும் மொழிக்கு பஹாசா பாபா என்று பெயர். பாபா பெரனாக்கானைக் குறிக்கும். பஹாசா என்பது பாஷா என்னும் சமஸ்கிருதத்தின் திரிபு தான். இந்தோனேசிய மொழியையும் பாஷா என்றே அழைக்கிறார்கள். இந்தியாவிலிருந்து பெற்ற தாக்கம் அது. இவர்கள் மூத்தோரை மதித்தால் என்பது இவர்களது பண்பு. இரண்டு பிறந்த தினங்களைத் தான் இவர்கள் கொண்டாடுகிறார்கள். முதல் வருடம், பின் 61-வது பிறந்த வருடம். இந்த 61 என்ற எண்ணும் சுழற்சியும் மிக பரவலாக பல நாடுகளில் இடங்களில் காணப்படுகிறது. இந்த எண்ணில் சுழற்சியில் என்ன மகத்துவமோ. மலேசிய சிங்கப்பூர் அரசுகள் தம் மக்களின் கலாச்சார அடையாளங்களைக் காப்பாற்றுவதில் கவனம் கொள்கிறது என்றாலும் இளம் தலைமுறையினரிடம் இந்த அக்கறை இருப்பதில்லை என்கிறார் ஜெயந்தி சங்கர். எங்கேயும் இந்தக் கதைதான் போலும்.

ஜெயந்தி சங்கர் நமக்குச் சிங்கப்பூரையும் அதன் மக்களையும் பற்றி மட்டும் சொல்வதில்லை. சிங்கப்பூரில் தமிழர், சீனர், மலாய் மக்கள் வாழ்கின்றனர். இவர்களைப் பற்றிச் சொல்லும் போது சீனாவும் மலாயாவும், அத்தோடு இந்தோனேஷியாவும் கூட வந்து சேர்ந்து கொள்கின்றனர். ஒன்றைப் பற்றிப் பேசும்போது மற்றதும் உடன் வந்து விடுகிறது.

அப்படி வந்ததில் ஒன்றுதான் மிக ஆச்சரியம் தரும் சரித்திரத் தகவல். கொலம்பஸ¤க்கும் வாஸ்கோட காமாவுக்கும் முன்னரே, 1405- ம் வருடம் 317 கப்பல்களும், 27.870 படைவீரர்களையும் கொண்ட ஒரு பெரிய கப்பற்படையுடன் தன் முதல் பயணத்தைத் தொடங்கியது யுனான் என்னும் தென் சீன மாநிலத்தில் ஒரு ஏழைக் குடும்பத்தில் பிறந்து, அரச குடும்பத்தின் நட்பு வாய்க்கப்பெற்ற செங் ஹ என்னும் இஸ்லாமிய சீனன். முதலில் தரை வழியாக மக்காவுக்குச் சென்றவன். அரபி மொழி தெரிந்தவன். மலாக்கா, இந்தோனேசியா, இலங்கை, கிழக்கு ஆப்பிரிக்கா என்றெல்லாம் சுற்றி அமெரிக்காவையும் தொட்டவன். மெக்ஸிக்கோ கலி•போர்னிய தீவுகள் எல்லாம் அவன் காலடி பட்ட இடங்கள். போர் புரிந்த இடங்கள். அரிய பொருட்களையும், பெண்களையும், அரிய தாவரங்களையும், மிருகங்களையும் கப்பலில் நிரப்பிக்கொண்டு சைனா திரும்பினால், அவன் உலகம் சுற்றுவது ஒரு தடவையோடு நின்று விடுமா என்ன? அக்காலங்களில் உலகிலேயே சீன கடற்படைதான் மிகப் பெரியது என்று சொல்லப்படுகிறது. 1430 -ம் ஆண்டு அவன் ஏழாம் முறையாக மேற்கொண்டது தான் அவனது கடைசிப் பயணமாகியது. 1433-ம் ஆண்டு அவன் வழியில் இந்தியாவில் மரணமடைந்ததாகவும், 1435-ல் அவன் நான் ஜிங் மாநிலத்தில் புதைக்கப்பட்டதாகவும் வரலாற்றுச் செய்திகள் சொல்கின்றன. சீனாவில் செங் ஹவின் பயணங்கள் குறித்த கருத்தரங்கு, செங் ஹ தன் பயணத்தை முதலில் தொடங்கிய தாய்சாங்கில் ஒரு பிரும்மாண்ட விழா, சிங்கப்பூரிலேயே கூட செங் ஹ வுக்கென ஒரு பெரும் அருங்காட்சியகம் என செங் ஹ வின் நினைவு சீனர்கள் வாழும் இடமெல்லாம் கொண்டாடப்படுகிறது. செங் ஹ என்ற பெயரே நமக்குப் புதிது. அவன் சாகஸங்கள் பிரமிப்பைத் தருபவை. இருப்பினும் கொலம்பஸ் பெயரைத் தான் உலகறியும்.

ஹினா மட்சுரி என்றால் நம்மூரில் கொலு கொண்டாடப்படுவது போல ஜப்பானிலும் கொண்டாடுகிறார்களாம். அதற்குப் பெயர் ஹினா மட்சுரி. வேடிக்கையாக இல்லையா? கொலு கொண்டாடப்படுவது எனக்குத் தெரிந்து தமிழ் நாட்டில் மட்டுமே. அதுவும் சில குடும்பங்களில் மாத்திரமே. அப்படிப்பட்ட ஒரு கொண்டாட்டம் ஜப்பானில் நாடெங்கும் கொண்டாடப்படுகிறது என்றால்? அதிலும் ஜப்பான் பொம்மைகள் எவ்வளவு கலை அழகும் செய்நேர்த்தியும் கொண்டவை! அதைப் பார்த்தபின் நம் கொலு பொம்மைகள் ஏன் அத்தனை அழகையும் செய்நேர்த்தியையும் கொள்ளவில்லை என்று யோசிக்கத் தோன்றுகிறது. நம் சிற்ப பாரம்பரியம் மிக பழமையானது. நீண்டதும் வளமையானதும் கூட. இருப்பினும்...... அதெல்லாம் சரி. இந்த ஒற்றுமை எப்படி நேர்ந்தது!. நேர்ந்துள்ளது. 1990களில் தில்லியில் ஜப்பானிய கலைகளின் ஒரு பரந்த கண்காட்சி, கருத்தரங்கு எல்லாம் நடந்தது. அதில் பேசிய ஒரு ஜப்பானிய அறிஞர், ஜப்பானிய இசையில் தென்னிந்திய தாக்கம் உண்டு என்றார். நம்மூர் காரர் யாரும் சொல்லியிருந்தால், இதுவும் ராமாயண புஷ்பகவிமானம் போன்ற சமாச்சாரம் என்று ஒதுக்கியிருப்பேன். அந்த ஜப்பானியர் சொன்னதை சாட்சியப்படுத்தும் முகமாக, காஞ்சியிலிருந்து அசோகர் அனுப்பிய தூதுவர்களோடு, காஞ்சியிலிருந்து இரு சங்கீத கலைஞர்களும் சென்றார்கள் என்ற செய்தியும் படித்திருந்ததும் நினைவில் இருக்கிறது. இப்படி நிகழ்வ துண்டு தான். இப்போதைக்கு இன்னொரு சம்பவத்தையும் சொல்லலாம். ஒரு நைஜீரியன் பாடகர் (அம்மையார்) பாடிக்கொண்டிருந்தார் தில்லியில் நடந்த ஒரு சர்வதேச கலை விழாவில். எனக்கு அடுத்து பக்கத்தில் இருந்தது சுப்புடுவும் வெங்கட் ராமன் என்னும் என் நண்பரும். திடீரென என் நண்பர் சுப்புடுவிடம், "பாரும் இது மோஹனம் இல்லியோ!" என்றார், சுப்புடுவும் ஒப்புதலுடன் தலையாட்டினார். எனக்கு அந்த மோகனத்தின் சாயல் ஒன்றும் புரியவில்லை. என் சங்கீத ஞானத்திற்கு "ஏன் பள்ளி கொண்டீரய்யா " என்றோ, "மயில் வாகனா, வள்ளி மன மோஹனா" என்றோ "ராமா நின்னே நம்மினவாரு.." என்றோ பாடினால் தான் மோகனம் எனக்குப் புரியும். சாயல் எங்கு விழுந்திருக்கிறது என்றெல்லாம் எனக்குப் புரிபடாது. எதற்குச் சொல்கிறேன் என்றால் இப்படி உலகப் பொதுமையான பல உணர்வுகள், சடங்குகள், விழாக்கள் நம்பிக்கைகள், கற்பனைகள் நாடு, கலாச்சார, மொழி எல்லைகள் தாண்டி காணப்படும். ஆனால் ஜப்பானின் நாடு முழுதும் தழுவிய ஹினா மட்சுரிக்கும் தமிழ் நாட்டில் சில இடங்களில் மட்டுமே காணப்படும் கொலுவுக்குமான ஒற்றுமை ஆச்சரியப்படுத்தும்.

தமிழ் நாட்டு கொலு நவராத்திரி எனப்படும் ஒன்பது நாட்கள் நீடிக்கும். இதன் பின் புராணக்கதைகள் இருப்பது போலவே ஹினா மட்சுரிக்கும் ஒரு வரலாறு, அதன் பரிணாம வளர்ச்சி எல்லாம் உண்டு. ஜப்பானிலும் இது சிறுமிகளை மையமாகக் கொண்ட விழா. ஜயந்தி சங்கர் இது பற்றி விவரிக்கும் பல காட்சிகள், 'சிறுமிகள் விளக்குகளைக் கையிலேந்தி செல்லும் அழகு' தமிழ் நாட்டில் சிறுமிகள் தம்மை அலங்கரித்துக் கொண்டு கூட்டம் கூட்டமாக குங்கும சிமிழை ஏந்திச் செல்லும் காட்சிகளை நினைவு படுத்தும். அவரவர் வீட்டில் குடும்பச் சொத்தாகக் பாதுகாக்கப்படும் பொம்மைகள், 15 படிகள் வரை அடுக்கி வைக்கப்பட்டிருக்கும் கொலு. தமிழ் நாட்டில் வீட்டு வைபவமாகவே இருக்கும் இது ஜப்பானில் ஊரே கொண்டாடும் அளவில் பெரிய விழாவாகவும் இருக்கிறது. இதையெல்லாம் எண்ணும் போது பகுத்தறிவுக் காரர்கள் எதை இழந்து தம் வாழ்க்கையை வரட்சியாக்கிக்கொள்கிறார்கள் என்று என்ணத் தோன்றுகிறது.

இந்தோனேசியாவின் பாலி தீவு மக்களைப்பற்றி எழுதுகிறார் ஜெயந்தி சங்கர். இந்தியாவிலிருந்து பரவிய ஹிந்து கலாச்சாரமும் புராணங்களும், கோயில்களும் பற்றி நாம் கொஞ்சம் தெரிந்திருக்கிறோம். பாலி தீவிலிருந்து இந்தியாவுக்கு வருகை தந்த ராமாயண நாட்டிய நாடகங்கள், பாவைக் கூத்துக்களைப் பார்த்து நான் வியந்திருக்கிறேன். அவர்களது ராமாயணக் கதைகள் கொஞ்சம் நம்மைக் குழப்பினாலும், - நம்மிடையே கூட எத்தனை மாறுபட்ட ராமாயணங்கள் இருக்கின்றன! - அவர்களது ராமாயண நடன நாடகங்களும், பாவைக்கூத்தும் மிகச் சிறப்பானவை, அவற்றுக்கிணையானவை அல்ல நம்மது என்ற நினைப்பு எனக்கு எப்போதுமே உண்டு. ஆனால் நான் செய்த ஒரு தவறு, இவர்கள் எல்லாம் முஸ்லீம்கள் என்றே நினைத்திருந்தேன். ஆனால் இவர்கள் புத்த இந்துமதக் கலவையான ஆகம இந்து பாலி மதத்தைச் சேர்ந்தவர்கள் என்று ஜெயந்தி ஷங்கரிடமிருந்து தெரிந்து கொள்கிறேன். இவர்கள் பெயர்களை வைத்து நாம் ஏதும் அனுமானிக்க முடியாது. முஸ்லீம்கள் பெயர்கள் எல்லாம் மூல சமஸ்கிருத வடிவத்திலிருந்து சற்று மாற்றம் பெற்றவையாகவே இருக்கும். அவர்கள் விமான போக்குவரத்து சேவைக்குப் பெயர் கருடா ஏர்வேஸ். முதல் சுதந்திர இந்தோனேசிய தலைவர் பெயர் சுகர்னோ. காதுக்கு இனிமையானவர் என்று அர்த்தம். அவரது மகள், பின்னர் பிரதம மந்திரியானவர், சுகர்னோ புத்ரி. இவ்வளவு இருக்கும் போது சாதி இல்லாமல் போகுமா? அதுவும் உண்டு என்று தெரிகிறது. நம் வீடுகளில் பூஜை அறை இருப்பது போல இவர்கள் ஒவ்வொருவர் வீட்டிலும் அவரவர் வசதிகேற்ப கோயில் ஒன்று கட்டிக்கொள்வார்களாம். நமது பாரம்பரிய நம்பிக்கைகள் சடங்குகள் பலவும் இவர்களிடமும் உண்டு. சாமி வருவதும் உண்டு. தக்சு என்பார்கள். தக்சு தான் இறந்த மூதாதையர், தெய்வங்கள் ஆகியோருடன் இன்று வாழ்பவர் தொடர்பு கொள்ள அழைப்புப் பெற்றவர். இந்த தக்சு யாருக்கும் வரலாம். இதைச் சுற்றி எழும் பிரார்த்தனைகள், வேண்டுதல்கள், சடங்குகள், மந்திரங்கள் தீமிதி என பலவும் உண்டு. பல நம்பிக்கைகள், தீயவை நீங்கும், நல்ல அறுவடை கிடைக்கும், நோய் நொடிகள் தீரும் போன்ற நம்பிக்கைகள் இதில் சம்பந்தப்பட்டுள்ளன. உலகெங்கும் காணப்படும் காட்சிகள் இவை. ஆப்பிரிக்க சமூகங்களில் இம்மாதிரியான நிகழ்வுகளில் உச்சாடனம் செய்யப்படும் மந்திரங்கள், வாத்தியங்களின் முழக்கம், இவற்றாலேயே மன நோய்கள் பல தீர்க்கப்படுகின்றன என மருத்துவ ஆராய்வுகளே சொல்கின்றன. நம்மூரிலும் பேயோட்டும் காட்சிகளின் சூழலே இம்மாதிரியான ஒரு நாடகமாகத்தான் இருக்கும். உண்மையில் அந்த சூழலும் நம்பிக்கையும் தான் நோயைக் குணப்படுத்துகின்றன என்று நினைக்கிறேன்,.

ஜெயந்தி சங்கர் இப்படி பல விஷயங்களைப் பற்றி மிக விரிவாகவும், கூர்ந்த பார்வையுடனும் எழுதியிருக்கிறார். கோலாலம்பூரின் பெட் ரோ நாஸ் இரட்டைக்கோபுர கட்டிடம் பற்றி, ஆடையே மொழியாகவும் கருத்து வெளிப்பாடுமாவது பற்றி, சிங்கப்பூர் சீனர்கள் கொண்டாடும் ஆவிகளுக்கு உணவு படைத்தளிக்கும் விழா பற்றி, சந்திர ஆண்டு பற்றி எல்லாம் எழுதுகிறார். இவையெல்லாம் நம் கலாச்சாரத்திலும் வேறு உருவங்களில் வழங்குகின்றன தான். தமிழ் வருடக் கணிப்பும் சந்திரனைக் கணக்கில் கொண்டது தான். அதனால் தான் மாதங்களின் தினங்கள் ஒவ்வொரு ஆண்டும் வேறு படுகின்றன. நமக்கும் மூதாதையரை நினைவு கொண்டு உணவு படைக்கும் சடங்குகள் உண்டு. இந்த ஒற்றுமை வேற்றுமைகள், எப்படி எந்த தொடர்பும் காரணமாக இல்லாது பல சடங்குகள், நம்பிக்கைகள், உலகின் எல்லாக் கலாச்சாரத்திலும் காணக்கிடைக்கின்றன என்பது ஆச்சரியம் தரும் ஒன்று.

சிங்கப்பூர் மலாயா கல்வி நிலை பற்றியும் நம் கல்வி முறை பற்றியும் ஒப்பீடு செய்யும் போது அவர் தரும் புள்ளி விவரங்கள், முடிவுகள், நம்மை மகிழ்ச்சியில் ஆழ்த்தக்கூடும். மற்ற நாடுகளை விட நாம் கல்விக்குச் செலவிடுவது மிகவும் குறைவு என்றும், ஆரம்ப கல்வியில் நாம் மற்ற நாடுகளைவிட அதிக தரத்தில் இருப்பதாகவும், நம் சில கல்வி நிறுவனங்கள் உலக தரத்தவை என்றும் சொல்கிறார். எல்லாம் சரி. புள்ளி விவரங்களும் சரி. கேட்க சந்தோஷமாகத்தான் இருக்கிறது. ஆனால் நமக்குப் பார்க்கக்கிடைக்கும் சாம்பிள் கல்லூரி மாணவர்களையும் முனைவர்களையும், தமிழ் அறிஞர்களையும் பார்த்தால், நாம் அந்த மகிழ்ச்சியில் பங்கு கொள்ள முடியாது என்றே நினைக்கிறேன். போகட்டும்.

ஜெயந்தி சங்கர் அவரைச் சுற்றி இருக்கும் உலகையும் மக்களையும் அவர்கள் வாழ்க்கையையும் எவ்வளவு ஆர்வத்துடனும், ஆச்சரியத்துடனும், மகிழ்ச்சியுடனும் தன் இயல்பிலே கூர்ந்து கவனிக்கிறார், அவற்றில் தானும் பங்கு கொள்கிறார் என்பதைப் பார்க்க மிக மகிழ்ச்சியாக இருக்கிறது. தம் லண்டன் பயணத்தில் எங்கே தோசை கிடைக்கும் என்று தேடியதையும் அது கிடைத்ததும் பெற்ற பரமானந்தத்தையும் எழுதியுள்ள, பாளையங்கோட்டையிலிருந்து தில்லிக்குச் சென்றாலும் அங்கும் ஒரு பாளையங்கோட்டையை உருவாக்கிக் கொண்டு அதிலேயே திளைத்துத் தாம் வாழ்க்கையைக் கடத்திய இலக்கியப் பெருமக்களை எனக்குத் தெரியும். ஜெயந்தி சங்கர் மிக மிக வித்தியாசமானவர்.



ஏழாம் சுவை (கட்டுரைகள்)

வெளியீடு


உயிர்மை பதிப்பகம்,
எண்:11/29, சுப்பிரமணியம் தெரு,
அபிராமபுரம், சென்னை-600018,
தமிழ்நாடு, இந்தியா.
தொலைபேசி எண்: 091 - 044 - 24993448.
மின்மடல்: uyirmmai@yahoo.co.in

ஏழாம் சுவை

நூலைப் பற்றி........


- புலவர் செ. இராமலிங்கன்


புதுச்சேரி - மின்னிதழ்






எழுத்தாளர் திருமதி ஜெயந்தி சங்கர் எழுதிய, “ஏழாம் சுவை” என்னுங் கட்டுரைத் தொகுப்பில் “ஆவிகள் புசிக்குமா?” தொடங்கி “ஏழாம் சுவை” ஈறாகப் பதினொன்று கட்டுரைகள் இடம்பெற்றுள்ளன. கட்டுரைகள் அனைத்திலும் சிங்கப்பூரை அடுத்தடுத்துள்ள மலேசியா, ஜப்பான் போன்ற தீவு நாடுகளில் பயின்று வரும் பண்டைய நிகழ்வுகள், விழாக்கள் பற்றிய செய்திகளை ஒப்பாய்வுடன், நல்ல எளிய தமிழ்நடையில் ஆசிரியர்க்கே உரிய பாணியில் வரலாற்றைக் கோடிட்டுக் காட்டுவதாக அமைத்திருக்கிறார்.



“ஆவிகள் புசிக்குமா?” என்னுங் கட்டுரையின் முன்னுரையாக சீன நாட்டுச் சிறுகதையொன்றை புத்த மதத்தில் வழங்கி வருவதை கூறுகையில், “ சீன புராணப் பாத்திரமான மூலான் தன் அம்மாவை மேலுலகத்திற்கு காணச்சென்றான். அம்மூதாட்டி உயிரோடிருக்கையில், மிகவும் சுயநலவாதியாகவும், தீயவளாகவும் இருந்ததால், மேலுலகில் முட்படுக்கை மீது கிடப்பதைப் பார்க்க நேரிடுகிறது. ஆவியுருவிலிருந்த அவள் மிக்கப் பசியோடு துன்பப்படுவதைக் கண்டு அவளுக்கு உணவூட்ட முயலுகையில், ஒவ்வொரு முறையும் உணவுக் கவளம் வெறும் நீறாகப் போகின்றது. இதனால் வருந்திய மூலான், பூமிக்குத் திரும்பித் தன்னுடைய புத்த ஆசானிடம் அம்மாவைக் காக்கும் வழியினை கேட்கையில், அவர் அவனை உணவு, பானங்கள் முதலானவற்றைத் தயாரித்து முன்னோர்களின் ஆவிகளுக்குப் படையலிட வேண்டுமெனக் கூறுகிறார். பின்னர் பௌத்த பிக்குகளும் பிக்குனிகளும் கூடி மந்திரங்கள் ஓதிய பிறகே அத்தாயின் பசி போகிறது. இதன் பிறகு புத்த பிக்குகளுக்கு முன்னோர் நினைவாக உணவளிக்கும் வழக்கம் வந்தது....”, என்கின்ற சீனர்களின் மரபு வழிக் கதையின் வாயிலாக, ஆவிகள் புசிக்கும் என்பதை கட்டுரையில் விளக்கியிருக்கிறார்.



நாளடைவில் சீனர்கள் இவ்விழாவினை ஒரு மாதம் கொண்டாடி வரத் தொடங்கி இருக்கின்றனர். இந்த ஒரு மாத காலத்தில், ஆவிகள் தங்கள் சுற்றத்தினர் அருகில் பாம்பு, வண்டு, பறவை, புலி, ஓநாய், நரி முதலான எந்த வடிவத்திலும் வரும் என்பதாலும்; அவை மனிதர்கள் உடலில் புகுந்து மன உளைச்சலை, மனநோயினை ஏற்படுத்தும் என்பதாலும், மறக்காமல் ஆண்டுதோறும் உணவளித்து அன்பு செலுத்துவோரின் குடும்பத்திற்கு செல்வம் கொழிக்கச் செய்து சிறப்புகளை உண்டாக்கும் என்பதாலும், மேலும் சீனர்கள் இக்கால கட்டத்தில் பய உணர்வுடன் நடந்து கொள்வர் என்பதை இக்கட்டுரை வாயிலாக அறிய முடிகிறது.



மண்ணுலகில் வாழ்ந்த காலத்தில் விரும்பிப் பயன்படுத்திய பொருட்களையும், விரும்பியும் கிட்டாத பொருட்களையும், பெரிய அளவில் பொம்மைகள் போல் செய்து, தீயிட்டுக் கொளுத்தி ஆவிகளுக்குப் படைப்பது, சீனர்கள் வாழும் அனைத்து நாடுகளிலும், வழக்காக இருந்து வருவதை, இதற்காக பல அங்காடிகளும், தொழிலாளர்களும் ஈடுபட்டிருப்பதை கட்டுரையாளர் படம் பிடித்துக் காட்டுகிறார். இன்றைய அறிவியல் உலகில் வாழும் மக்களின் எண்ணங்களையும், கருத்துகளையும் பகுத்தறிவுடன் கூறியச் சீனத் தத்துவ அறிஞர் கன்பூசியசின் சீடர் ஒருவர் ஆவிகளுக்கு எப்படித் தொண்டு செய்ய வேண்டும் எனக் கேட்டதற்கு, “மனிதனுக்குத் தொண்டு செய்யாத போதில் ஆவிகளுக்கு எப்படித் தொண்டாற்றுவாய்? வாழ்வையறியாத போதில், சாவை எப்படியறிவாய்?” என்ற கன்பூசியசின் வினாவுடன் கட்டுரையை முடித்திருக்கும் உத்தி, கட்டுரையாசிரியரின் மனித நேய உணர்வை வெளிப்படுத்துகிறது.



இத்தகைய ஆவிகள் பற்றிய கட்டுக்கதைகள் எல்லா நாடுகளிலும் உள்ளன. வளர்ந்த நாடுகள்கூட அறிவியல் நுட்பங்களைக் கையாண்டு நம்பமுடியாத பகுத்தறிவுக்கு ஒவ்வாத கதையமைப்புகளைக் கொண்ட பல திரைப்படங்களை வெளியிடுகின்றன என்பது இங்கே குறிப்பிடத்தக்கது. மறைந்த நம் முன்னோர்களை நினைவுகூர்ந்து, அவர்கள் காட்டிய நல்வழியில், அவர்கள் விட்டுச்சென்ற குடும்பப் பணிகளையும், பொதுத் தொண்டுகளையும் கடமையெனக் கருதி, நாம் செயலாற்ற வேண்டும் என்பதற்காகவே, இத்தகைய கட்டுக் கதைகளை பழங்காலத்தில் புனைந்துள்ளனர் என்பதை “ஆவிகள் புசிக்குமா” கட்டுரை நமக்கு உணர்த்துகிறது.



ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம், என்பதற்கேற்ப, மற்ற பத்துக் கட்டுரைகளும் மிக நன்றாகவே அமைந்துள்ளன. அவற்றையும் படித்து இன்புறுதல் சுவைஞர்களின் கடமையாகும்.



ஏழாம் சுவை (கட்டுரைகள்)

வெளியீடு

உயிர்மை பதிப்பகம்,
எண்:11/29, சுப்பிரமணியம் தெரு,
அபிராமபுரம், சென்னை-600018,
தமிழ்நாடு, இந்தியா.
தொலைபேசி எண்: 091 - 044 - 24993448.
மின்மடல்: uyirmmai@yahoo.co.in

Monday, March 29, 2010

நாலேகால் டாலர் - அணிந்துரை - ஜெயபாஸ்கரன்

ஆழ்மனதின் அறச்சீற்றம்






கடந்த 2004 ஆம் ஆண்டு வட அமெரிக்கத் தமிழ்ச் சங்கப்பேரவையின் (FETNA) 17ஆம் ஆண்டு தமிழர் திருவிழா மலரைச் சென்னையில் வடிவமைத்துத் தயாரிக்கும் பணியில் அதன் குழுவினரோடு ஈடு[பட்டிருந்தேன். அது ஒரு ஜூன் மாதத்தின் நள்ளிரவு. உலகின் பலநாடுகளிலிருந்தும் அம்மலருக்கும் வந்திருந்த பல்வேறு வகையான படைப்புகளை என் பணியின் நிமித்தம் படிக்கும் அரிய வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. படித்துப் பிழைதிருத்தம் செய்துகொண்டிருந்தேன்.

அதிகம் பேசாதவரும் ஆழ்ந்த இலக்கிய இரசனையாளருமான மலர் வடிவமைப்பாளர் தமிழேந்தி என்கிற இராசேந்திரனும், "சார், இந்த மலருக்கு 'ஈரம்'னு ஒரு கதை வந்திருக்கு சிங்கப்பூர்ல இருந்து. ஜெயந்தி சங்கர்னு ஒருத்தர் எழுதியிருக்காக. ரொம்ப நல்லா இருக்கு சார்", என்று கணிப்பொறிவேலை செய்துகொண்டே என் காதுகளுக்குத் தகவல் சொன்னார். பாறையே வெடித்து வாய்பிளக்கிறதே என்று வியந்து என் கைகளில் இந்த படைப்புகளைத் துழாவி 'ஈரம்' சிறுகதையைத் தேடிப்பிடித்துப் படித்தேன். அதற்குப்பிறகு அன்றைய பணி முடித்து அதிகாலை நான்கு மணிக்கு வழக்கம்போல் பணியிடத்திலேயே படுத்தேன். ஆனால், தூக்கம் வரவில்லை. பிழைப்புக்காக சிங்கப்பூருக்குப் போன தமிழ்நாட்டின் நடுத்தரவயதுப் பெண் ('ஈரம்' கதாநாயகி) என்னை அழ வைத்துக்கொண்டிருந்தாள். பொதுவாகத் திகிலுற்றிருப்பவனை 'பேயறைந்தது' என்பார்கள். அன்று நானும் அப்படித்தான் இருந்தேன். ஒரு சின்ன வித்தியாசம் என்னை ஒரு 'படைப்பு' அறைந்திருந்தது.

மறுநாள் இரவு மலர் தயாரிப்புப் பணிகளின்போது மற்ற படைப்புகளை வடிவமைத்துக் கொண்டே நானும் ராஜேந்திரனும் 'ஈரம்' கதைப் பற்றி நீண்ட நேரம் பேசிக் கொண்டிருந்தோம். வேறு ஏதோவொரு வேலைக்காக அதன் வாரங்கழித்து மலர் அச்சாகி வந்தவுடன் ஒட்டுமொத்த மலரைப் பற்றிப் பேசியவாறு அதன் நிறைகுறைகளைப் புரட்டிக் கொண்டிருந்தேன். வேறு ஏதோவொரு வேலைக்காக அங்கே வந்திருந்த யாரோ ஒரு நண்பர், "சாரி, மலர்ல ஈரம்னு ஒரு கதை ரொம்ப நல்லாயிருக்கு சார். ராத்திரி என் வொய்ப்கிட்ட அதைப் பத்திப் பேசிக்கிட்டிருந்தேன்", என்று சொன்னார். ஒரு படைப்பைப் பற்றி இவ்வளவு சிலாகித்தது பொதும் என்று நேற்றைய என் நினைப்பை யாரோ ஒருவர் சம்மட்டியால் அடிப்பதுபோல் அடித்துத் தகர்த்தார். அப்படியெனில் நல்ல படைப்புகள் குறித்து நாம் மௌனமாக இருந்தாலும், 'அதையறிந்தவர்கள்' மௌனமாக இருக்கமாட்டார்கள் என்பதை மீண்டும் ஒருமுறை நான் உணர்ந்தேன். அப்போதெல்லாம் ஜெயந்தி சங்கர் என்கிறவர் சிங்கப்பூரில் இருந்து எழுதுகிறார் என்பது மட்டுமே எனக்குத் தெரியும். வாகனம் சீராக ஓடுகிறது என்பதைச் சொல்வதற்கு 'டிரைவிங்க்' தெரிந்திருக்க வேண்டிய அவசியமில்லைதானே ! எனவே ஜெயந்தி சங்கருக்கு என்னைத் தெரியாத நிலையிலும் அப்போது அவரது அந்த ஒரு கதையைச் சுமந்து சென்று பலரிடம் இறக்கி வைத்துக் கொண்டிருந்தேன். அவ்வாறான ஒரு வேளையில்தான் சென்னையில் கவிஞர் மதுமிதாவிடம் தான் 'ஈரம்' கதை குறித்துச் சொன்னபோது, "அய்யோ கடவுளே, அவங்கள உங்களுக்குத் தெரியாதா? அவங்க என்னோட தோழிதாங்க!, என்று அநியாயத்துக்கு மென்மையாகவும் நிதானமாகவும் சொன்ன அவர், " ஜெயந்தி எழுதின தையல் கதையை படிச்சீங்களா" என்று கேட்டு, என் ஆர்வத்தை மேலும் தூண்டினார். அடடா அப்படியெனில்...... அவரது மற்ற கதைகளையும் நாம் படித்து விடலாம் என்று அப்போது நான் நினைத்தேன். அதன் தொடர்ச்சியாகவே இப்போது அவரது குறித்து 'என்னை' உங்களுக்கு எழுதிக்கொண்டிருக்கிறேன்.

இலக்கியத்திற்கு வாழ்க்கைப் பட்டுவிட்ட எவரும் நல்ல இலக்கியங்களைத் தேடிப்பிடித்துப் படித்தேயாக வேண்டும். அதன் விளைவாக நல்ல இலக்கியங்களைப் படைத்தேயாகவேண்டும். இதுதான் இலக்க்கியவியல் விதி. இந்த விதியின்படிதான் இங்கே நல்ல வாசகனுக்கும், நல்ல வாசகனாகவும் இருக்கிற படைப்பாளிக்கும் உண்மையான படைப்பாளிகளும் உண்மைகளைப் படைப்பாவர்களும் மிகவும் எளிதில் தட்டுப்பட்டு வருவார்கள். அப்படித் தான் எனக்கு ஜெயந்தி சங்கர் சட்டெனத் தட்டுப்பட்டார்.

என்னைப் பொறுத்தவரை மிகவும் சுலமானது எது தெரியுமா? ஒரு படைப்பாளியாக வாழ்ந்து நல்ல படைப்புகளைத் தருவதுதான். மிகவும் கடினமானது எது தெரியுமா? படைப்பாளியைப் போன்று நடித்து படைப்புகளைப் போல எழுதுவதுதான். ஜெயந்தி சங்கருக்கு அந்தக் 'கடினம்' நேரவில்லை. படைப்பது என்பது பிரசவவேதனை போன்றது என்றும் படைத்து முற்றுப்புள்ளி வைத்தவுடன்தான் அந்த வேதனையும் வலியும் தீரும் என்றெல்லாம் சொல்கிறார்களே என்று நீங்கள் கேட்கலாம். அது உண்மையில்லை. எழுதத் தெரியாத ஒருவர் எழுதத் தெரியாது இன்னொருவருக்குச் சொன்ன உண்மை என்றே அதை நீங்கள் புரிந்துகொள்ள வேண்டும்.

ஊரான் ஊரான் தோட்டத்திலே
ஒருத்தன் போட்டானாம் வெள்ளரிக்காய்
காசுக்கு ரெண்டு விற்கச் சொல்லி
கடுதாசி போட்டானாம் வெள்ளைக்காரன்

என்கிற ஆங்கிலேயரின் நெற்றிப் பொட்டில் அறைந்த இந்த பாடல் வரிகளைப் படைத்த யாரோ ஒரு நாட்டுப்புறத்தான் பிரசவேதனைப் பட்டது போல தெரியவில்லையோ ?

அட அதைக்கூட விடுங்கள்

அவன் போருக்குப் போனான் - நான்
போர்களமானேன் - அவன்
வேல் கொண்டு சென்றான் -நான்
விழிகளை இழந்தேன்


என்கிற இதயம் துளைக்கிற இந்த இலக்கியம் பிரசவவேதனைப் பட்டு எழுதியதுபோலவா தெரிகிறது ?


படைப்பாளி போகிறபோக்கிலே தான் சொல்ல வேண்டியதைச் சொல்லிவிட்டுப் போய்விடுவான். படைப்பாளி போன்றவன் படைப்பு வரமால் படுத்து உருண்டு
'படைத்ததை' நூலாக்கித் தந்து படிப்பவர்கள் நொந்து நூலாவதற்கும் வழிவகுப்பான். படைப்பு நிமித்தமான பிரசவவேதனை (?)யில் முக்கி முனகிக் கூச்சலிட்டுக் கொண்டு இருப்பவர்களுக்கிடையில் சன்னமாக, சங்கீதமாக கம்பீரமாகப் பாடிக் கொண்டிருப்பவர்களை நல்ல வாசகர்களும் நல்ல இலக்கியம் விரும்புவோரும்தான் கண்டுபிடித்துக் காப்பாற்ற வேண்டும். அவ்வாறு பாதுகாத்துப் பாராட்டவேண்டிய படைப்பாளியாகவே நான் ஜெயந்தி சங்கரைப் பார்க்கிறேன்.

நல்ல இலக்கியம் என்பது படைக்கிறவனையும் அதைப் படிக்கிறவனையும் மேம்படுத்தும் என்று ஜெயகாந்தன் ஒருமுறை சொன்னார். இதுதான் உலக அளவிலான உண்மையான இலக்கியக் கோட்பாடு. இந்தக் கோட்பாட்டில்தான் ஜெயந்தி தானும் மேம்பட்டு தன் படைப்புளைப் படிக்கிறவர்களையும் மேம்படுத்துகிறார். இந்தத் தொகுப்பில் உள்ள கதைகளைப் படிக்கிறவர்களால் இவ்வுண்மையை உணர முடியும்.

ஏனெனில் அவருடைய படைப்புகள் நுட்பமானது. ஊன்றிக் கவனித்து உள் நுழைந்து பார்க்கும்போதுதான் அவற்றின் நுட்பம் நமக்கு விளங்கும். போராட்ட வாழ்க்கை, வாழ்க்கைப் பொராட்டம் இவையிரண்டுமே இலக்கியத்திற்கான இரு தண்டவாளங்கள். பெருவாரியான கண்ணதாசனின் படைப்புகள் வாழ்க்கைப் போராட்டத்தைச் சொன்னது. நிகழ்காலத்தில் ஜெயகாந்தன் வாழ்க்கைப் போராட்டத்தை எழுதுகிறார் என்றால் காசி ஆனந்தன் போராட்ட வாழ்க்கையை எழுதிக்கொண்டிருக்கிறார்.

இவ்விரண்டு வகையில் ஜெயந்தியின் படைப்புகள் வாழ்க்கைப் போராட்டைத்தையே மையங்கொண்டு சுழல்கின்றன. சுடர்கின்றன. மனித உளவியலை உளைச்சலை மிகத் திறமையாகப் படம் பிடித்துக்காட்டும் வல்லமை ஜெயந்திக்கு சர்வ சாதாரணமாகக் கைகூடி வருகிறது. இக்கூற்றை நம்புவதற்கு விரும்புகிறவர்கள், இத்தொகுப்பில் உள்ள 'நுடம்' அல்லது 'நாலேகால் டாலர்' அல்லது 'நிஜமற்ற நிழல்' ஆகிய கதைகளில் ஒன்றை அல்லது இத்தொகுப்பில் உள்ள நான் சுட்டிக்காட்டாத ஏதாவதொரு கதையை உடனடியாகப் படித்துவிட்டு அதற்குப்பிறகு என் அணிந்துரைக்கு வரலாம்.

அயல் மண்ணில் வாழப்போனவர்கள் அல்லது பிழைக்கப்போனவர்கள் எத்தகைய அவலங்களுக்கு ஆட்படுகிறார்கள் என்பதை அம்மண்ணில் வாழ்ந்துகொண்டிருக்கிற ஜெயந்தி சொல்லாமல் அல்லது ஜெயந்தி போன்றவர்கள் சொல்லாமல், வேறு யாரால் சொல்லமடியும்? சிங்கப்பூரின் சுகம் பற்றி அவ்வூருக்குச் சுற்றுலா போய் வரும் யாரும் எழுதலாம். அதன்சோகம் பற்றி ஜெயந்தி போன்ற படைப்பாளிகளால் மட்டுமே எழுத முடியும். அங்கெல்லாம் பாராட்டுவதற்கென்று எதுவுமே இல்லையா? என்றும் சிலர் கேட்கக் கூடும். 'புறம்' பாராட்டவும் அல்லது 'புறம்' பேசவும் நாட்டிலே நிறையபேர் இருக்கிறார்கள். அவர்கள் 'ஜாய்•புல் சிங்கப்பூர், கலர்•புல் ' என்று பாடிக்கொண்டிருப்பார்கள். ஆனால், 'அகம்' பார்க்க இங்கே எத்தனைபேர் இருக்கிறார்கள் ? அந்த 'அகம்' பார்க்கிற பணியைத்தான் ஜெயந்தி சங்கர் தன் படைப்புகளின் வாயிலாகச் செய்துகொண்டிருக்கிறார். அழுகிக் கொண்டிருப்பதை அடையாளம் காட்டுவதுதான் ஒரு மருத்துவரின் கடமையே தவிர, நன்றாக இயங்கும் உறுப்புகளைப் பாராட்டிக்கொண்டிருப்பது அவன் வேலையாக இருக்க முடியாது. அப்படி இருக்கவும் கூடாது. ஜெயந்தி சங்கர் ஒரு மருத்துவராகவே தன் கடமையை மிகத் துல்லியமாகச் செய்து வருகிறார்.

விபத்து போல ஒரு நல்ல சிறுகதையை, அல்லது ஓரிரு நல்ல சிறுகதைகளை எழுதிவிட்டு அதன் வாயிலாகக் கிடைக்கும் வரவேற்பில் தொடர்ந்து மோசமான பத்து கதைகளை எழுதித்தள்ளுகிற அல்லது ஒரு கதையில் தான் எடுத்த நற்பெயரைப் பத்து கதைக எழுதிக் கெடுத்துக் கொள்கிற நிலையில் ஜெயந்தி இல்லை. அவர் பத்து சிறுகதை எழுதினார் என்றால், அதில் எட்டு கதைகள் இலக்கிய இதயங்கங்களில் என்றென்றும் உலா வரும் தன்மை பெற்றுத் திகழ்கின்றன. நாகரீகத்தின், செல்வவளத்தின், சட்டத்தின், பாதுகாப்பில் நிகழ்த்தப்படும் மனித நேயமற்ற நுட்பமான வன்முறைக்கு எதிரான அறச்சீற்றமாகவே அவரது படைப்புகள் கருக்கொண்டு உருக்கொள்கின்றன. தமிழ் இலக்கியச் சூழலில் இது மிகவும் அரிதான வரவேற்கத் தகுந்த நிலை.


தமிழின் மிகச்சிறந்த படைப்பாளிகளின் வரிசையில் ஜெயந்தி சங்கர் இடம் பெற்றிருக்கிறார் என்பதை ஒரு வாசகனாக நான் வெளிப்படையாகச் சொல்கிறேன். அவ்வாறு சொல்வதில் பெருமிதமடைகிறேன். "எனக்குத் தூக்கம் வரல்லேன்னா புத்தகம் எடுத்துப் படிப்பேன். உடனே தூக்கம் வந்துவிடும்", என்று சில பாவிகள் சொல்லக்கேட்டிருக்கிறேன். "மாபாவி ! ஆகக்கூடி உன்னைத் தூங்க வைக்கிற கருவியா புத்தகம்?", என்றும் அவர்களிடம் கேட்டிருக்கிறேன். படிப்பவனைத் தூங்க வைப்பது அந்நூலைப் படைத்தவனின் குற்றம் என்றுகூட ஒருவன் என் மீது எகிறிப் பாய்ந்தான். எழுத்தின் இலக்கணம் விழிக்க வைப்பதன்றி உறங்க வைப்பதல்ல ! படைத்தவன் உறங்கலாம். அது படைப்பாக இருக்கும்பட்சத்தில் அதைப் படித்தவர்கள் உறங்க மாட்டார்கள்.

"நாலேகால் டாலர்" கதையை எழுதிய இரவில் ஜெயந்தி நன்றாகவே தூங்கியிருக்கக்கூடும். அதைப்படித்த இரவில் என்னால் தூங்க முடியவில்லை.


நல்வாழ்த்துக்களுடன்
ஜெயபாஸ்கரன்
september 2005

நாலேகால் டாலர் - நூல் முன்னுரை- மாலன்

பரிவில் எழுந்த படைப்புக்கள்


எழுத்தாளர்கள், கவிஞர்கள் இவர்களை எல்லாம் படைப்பாளிகள் என்று உலகம் கொண்டாடுவதுண்டு. அவர்களுக்கே கூட அந்தப் பெருமிதம் உண்டு. 'படைப்பதனால் என் பேர் இறைவன்' என்று கண்ணதாசன் பாடினார். ஆனால் என்னைப் பொறுத்தவரை எழுதுகிறவரின் பெருமை அவரது படைப்பாற்றலில் இல்லை. ஒன்றைப் பிறப்பிப்பதில் பெருமை ஏதும் இல்லை. அது ஒரு இயற்கையான, அல்லது லெளகீக அல்லது physical act. ஏதோ ஒன்றாகப் பிறக்கிறோமே, அதுதான் மகிழ்ச்சிக்குரியது. அதுவும் கணந்தோறும் பிறக்க முடிந்தால் நாம்தான் கடவுள். நன்றிந்தக் கணம் நான் புதிதாய்ப் பிறந்தேன், நலிவிலாதோன், நான் கடவுள் என்று மகாகவி (பாரதி) நமக்குத் தெளிவாகச் சொல்லி வைத்திருக்கிறான்.


பறவைகளுக்கு இரண்டு பிறப்பு உண்டு, முட்டையாக பூமியில் விழுவது ஒன்று. முட்டையை மோதி உடைத்துக் கொண்டு குஞ்சாக வெளி வருவது மற்றொன்று என்று சொல்வார்கள். ஆனால் கதாசிரியர்களுக்கு எண்ணற்ற பிறப்புக்கள். ஒவ்வொரு கதையிலும் அவர்கள் தங்கள் பாத்திரங்களாகப் பிறக்கிறார்கள். அந்தப் பாத்திரங்கள் எதிர் கொள்ளும் சூழ்நிலைகள் தங்கள் மனவுலகில் எதிர் கொள்ள வேண்டும், அந்தச் சூழ்நிலைகளில் அவர்கள் எப்படி நடந்து கொள்ளுவார்களோ அதைப் போல தங்கள் மனவுலகில் நடந்து கொள்ள வேண்டும், அவர்களைப் போல சிந்திக்க வேண்டும். ஒரு கதையையும் - ஒரு நல்ல கதையையும், ஒரு நல்ல கதையையும் - ஒரு சிறந்த கதையையும் வேறுபடுத்துவது, இந்தப் 'பிறப்பில்' கதாசிரியர் எந்த அளவிற்குத் தன்னை ஈடுபடுத்திக் கொள்கிறார் என்பதைப் பொறுத்து அமைகிறது. முற்றிலுமாக தனது பாத்திரங்களாக மாறி விடுகிறவர்களது கதைகள் சிறந்த கதைகளாக அமைகின்றன.


இப்படித் தன்னை இழப்பதற்கு, இழந்து வேறு ஒன்றாக ஆவதற்கு ஒரு மனம் வேண்டும். தன்னைத் தாண்டிப் பிறரை நேசிக்கிற மனம். அது நேச்ம் கூட அல்ல. அதற்குப் பெயர் பரிவு. வடமொழியில் தயை என்று ஒரு சொல்கிறார்களே அது.
ஜெயந்தி சங்கருக்கு இப்படி ஒரு தயை ததும்பும் மனம் வாய்த்திருக்கிறது. அதுதான் அவரை எழுதச் செய்கிறது. மிகையாகச் சொல்லவில்லை. அவரது ஈரம் கதையைப் படித்துப் பாருங்கள். அல்லது நுடம் கதையைப் படித்துப் பாருங்கள், அல்லது இந்தத் தொகுப்பில் உள்ள கதைகளில் கை போன போக்கில் சில கதைகளைத் தேர்ந்து படித்துப் பாருங்கள் நான் சொல்வது சரி என்று புரியும்.


சிங்கப்பூரைப் பற்றி எத்தனையோ கவர்ச்சிகரமான சித்திரங்கள் தீட்டப்பட்டிருக்கின்றன. பெரும்பாலான தமிழர்களுக்கு, குறிப்பாகத் தமிழ்நாட்டுத் தமிழர்களுக்கு, அது ஒரு கனவு பூமி. 70களில் வந்த தமிழ்த் திரைப்படங்கள் அதை ஒரு சொர்க்கலோகமாகக் காண்பித்தன. இப்போதும் கூட சில வணிக மேம்பாட்டுக்கான போட்டிகளில் முதல் பரிசு சிங்கப்பூருக்கு ஒரு சுற்றுலாவாக இருக்கும். (இரண்டாம் பரிசு தங்க நாணயம்) சற்று வளப்பமான மேல்தட்டு வட்டாரங்களில், ' என்ன இன்னுமா நீங்கள் சிங்கப்பூர் பார்த்ததில்லை?' எனக் கண்களில் கேள்வி/கேலி மிதக்கும். பல இளைஞர்களுக்கு, குறிப்பாகக் கிராமப்புற இளைஞர்களுக்கு, சிங்கப்பூரில் போய் வேலை செய்து கை நிறைய சம்பாதித்துக் குடுமபத்தை செளகரியமாக வைத்துக் கொள்ள வேண்டும் என்பது ஜீவ லட்சியம்.


அந்த நம்பிக்கையோடு, ஆண்டுதோறும் பலர், இந்தியாவிலிருந்தும், இலங்கையிலிருந்தும், பிலிப்பைன்சிலிருந்தும், சிங்கப்பூர் வருகிறார்கள். சுற்றுலாப் பயணிகளைப் பற்றி எழுதுகிற அளவிற்கு தமிழ் ஊடகங்கள் இவர்களைப் பற்றி எழுதுவது இல்லை. அந்த ஊடகங்கள் தீட்டிய சித்திரங்களை மாத்திரமே படித்துவிட்டு சிங்கப்பூர் வருகிறவர்கள், ஒரு ஞாயிற்றுக்கிழமை மாலை சிராங்கூன் வீதிக்குச் சென்று பார்த்தால் அதிர்ந்து போவார்கள். ஜெயந்தி இந்த மனிதர்களைப் பற்றி எழுதுகிறார். இந்த மனிதர்களாக மாறி எழுதுகிறார்.அவர் அனுப்பிய ஈரம் கதையை திசைகளில் பிரசுரத்திற்கு பரிசீலனை செய்யப் படிக்க முனைந்த போது விக்கித்துப் போனேன். வாழ்விற்கு ப்படி ஒரு முகமிருக்கிறதா? என்ற சிந்தனை நாள் முழுக்க மனதில் ஓரமாக இழையோடிக் கொண்டிருந்தது.


இந்தக் கதையின் சிறப்பு அந்தக் கதையை அவர் குரலை உயர்த்தாமல், சினந்து சீறாம்ல், சாபம் கொடுக்காமல், சலித்துப் புலம்பாமல் சொல்லியிருப்பது. அது கதைக்கு ஒரு கூர்மையைக் கொடுக்கிறது. கதை முடிந்து உங்கள் மனச் செவியில் ஒரு விம்மல் கேட்கும். அதுதான் ஜெயந்தியினுடையது. பிஜித் தோட்டத்துப் பெண்களுக்காக விம்முகிற மகாகவியின் விம்மலைப் போன்ற விம்மல் அது.
நுட்பமாகக் கதை சொல்கிற அவரது ஆற்ற்லை அந்தக் கதையைப் படிப்பதற்கு முன்பே நான் அறிந்திருந்தேன். 2002ம் ஆண்டு சிங்கப்பூர் பல்கலைக்கழகம் ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சி ஒன்றில் உலகம் முழுதும் எழுதப்படும் தமிழ்ப் படைப்புகள் நேற்றும் இன்றும் நடக்கிற வழித்தடங்களை வரைந்துகாட்ட முற்ப்பட்டேன். அதற்காக உலகின் பல பகுதிகளில் எழுதப்பட்ட படைப்புக்களை ஒரு சேர வாசிக்கிற அனுபவம் எனக்குக் கிடைத்தது. ஒரு வாசகன் என்ற முறையில் அது எனக்குக் கிடைத்தப் பெரும் பேறு. ஒரு பேரானந்தம்.


சிங்கைத் தமிழ் இலக்கிய முன்னோடிகள், அவர்களது படைப்புக்கள் பற்றி எனக்குக் கடுகளவு அறிந்திருந்தேன். சமகாலப் படைப்பாளிகள், அதிலும் இளைய த்லைமுறையினர் என்ன எழுதுகிறார்கள் என அறிந்து கொள்ள் ஆர்வமாக இருந்தேன். நண்பர் ஆண்டியப்பன் சில நூல்கள் அனுப்பி வைத்திருந்தார். நூல்களாகத் தொகுக்கப்படாத, நூலாகக் கொண்டுவரும் அளவிற்கு எழுதிக் குவித்திராத எழுத்துக்களைப் படிக்க எண்ணிய போது, நண்பர் பிச்சினிக்காடு இளங்கோ அனுப்பியிருந்த சிங்கைச் சுடர் இதழ்கள் கிடைத்தன. அதில்தான் எனக்கு ஜெயந்தியினுடைய நுடம் படிக்கக் கிடைத்தது. அந்தக் கதை மேற்கொண்டிருந்த உளவிய்ல் அணுகுமுறை சிந்தையை ஈர்த்தது.


ஜெயந்தி சங்கரின் கதைகள் எல்லாவற்றிலும் இந்த சிந்தனையைத் தூண்டும் அம்சத்தைப் பார்க்கலாம். வெறும் கதை சொல்கிற சுவாரஸ்யத்திற்காக அவர் எழுதுவதில்லை. கதையில் இருக்க வேண்டும் என்று சொல்லப்படுகிற கலை நுட்பங்களைக் காப்பாற்றுவதற்காக அவர் எழுதுவதில்லை. வெகுஜனப் பத்திரிகைகள் ஆதரிக்கிற கதையம்சம், சிற்றிதழ்கள் வலியுறுத்துகிற கலைநுட்பம் இவற்றைத் தாண்டிய கதைகள் இவை. அதற்காக இவை இந்த அம்சங்களில் கவனம் செலுத்தாத அல்லது அக்கறை காட்டாத கதைகள் என்பது அர்த்தம் அல்ல. அவற்றின் முக்கியத்துவத்தைப் புரிந்து கொண்டு, அவற்றையும் திறமையாகக் கையாண்டு, ஆனால் அவற்றையும் தாண்டிக் கதைகளை எடுத்துச் செல்கிறார் ஜெயந்தி.
புலம் பெயர்ந்து வாழ்கிற தமிழர்கள் பலர் தங்களது மொழி அடையாளத்தைக் காப்பாற்றிக் கொள்ளும் பொருட்டும், தங்களுக்கென ஒரு அடையாளத்தை உருவாக்கிக் கொள்ளும் பொருட்டும் இலக்கியத்தில் ஆர்வம் காட்டுகிறார்கள். அதில் தவறொன்றும் இல்லை. அது வரவேற்கப்பட வேண்டியதும்கூட. ஆனால் அவை பெரும்பாலானோரது விஷயத்தில் ஆரம்ப வசீகரங்களாக முடிந்து போகின்றன.வயது ஏற ஏற வாழ்வு வேறு இலக்குகளைத் தேடுகிறது. அதன் காரணமாக அவர்கள் சாதனைகள் ஏதும் செய்யாது மறைந்து போகின்றனர்.


ஆனால் ஜெயந்தி சாதிப்பார். ஏனெனில் அவர் அடையாளம் த்ருவதற்கோ, அடையாளம் பெறுவதற்கோ எழுதுவதில்லை. அவர் சிந்தனையைப் பகிர்ந்து கொள்ளவும், சிந்தனையைத் தூண்டவும் எழுதுகிறார். ஆற்றில் மிதந்து செல்லும் மலரல்ல அவர். நதியின் மடியில் கால் பதித்து நிற்கும் கற்பாறை அவர்.
சிங்கைத் தமிழ் எழுத்துகளின் மீது உலகின் கவனத்தை ஈர்க்கக்கூடியவர்களில் ஒருவராக ஜெயந்தி சங்கர் திகழ்வார். அவருக்கு என் மனம் நிறைந்த வாழ்த்துக்கள்.


18-09-05

நாலேகால் டாலர் - வாழ்த்துரை - ரெ.கார்த்திகேசு

தமிழ்ச் சிறுகதைகள் இன்று உலகத்தின் பல இடங்களிலிருந்து எழுதப்படுகின்றன. தமிழ்ப் புத்திலக்கியம் தனது தமிழ்நாட்டுப் புராதனப் பின்புலன்களிலிருந்து விடுபட்டு, உலகப் பின்புலன்களைக் காட்ட ஆரம்பித்துள்ளது. இது தமிழ்ப் புத்திலக்கியம் உலக மயமாவதன் தொடக்கத் தருணம் என்று கூறலாம்.


புலம் பெயர்ந்த இலங்கை எழுத்தாளர்கள் இந்த விரிவாக்கத்தைத் தொடக்கி வைத்தார்கள். முத்துலிங்கம் போன்ற இலங்கைவாசிகள் எப்படித் தாங்கள் உலகவாசிகள் னார்கள் என்ற கதைகளை அழகாக வடித்து வைத்தார்கள். சுஜாதா தன் இந்திய இருப்பிடத்தை விட்டுப் புலம் பெயராமல், அமெரிக்காவுக்குப் பெயர்ந்தவர்களை எட்டி எட்டிப் பார்த்து விட்டுப் பின்புலத்தைக் கொஞ்சமாக மாற்றினார். புலம் பெயர்ந்து வாழ்ந்து, அமெரிக்க அனுபவங்களை முற்றாக உள்வாங்கி காஞ்சனா தாமோதரன் எழுதி வருகிறார். நா. கண்ணன் ஜெர்மனியில் வாழ்ந்து அந்த வாழ்க்கையின் அனுபவங்களைச் சிறுகதைகளில் பிழிந்து வைக்கிறார். அண்மையில் இரா.முருகன் கணினி மென்பொருள் துறை இந்திய இளைஞர்களிடையே ஏற்படுத்தியுள்ள மாபெரும் மாற்றங்களை வைத்து அவர்கள் இங்கிலாந்துக்கும் தாய்லந்துக்கும் அமரிக்காவுக்கும் அலையும் வாழ்க்கையை அழகான கலைப் படைப்பாக்கித் தந்துள்ளார்.


இப்போது ஜெயந்தி சங்கர்.


மலேசியாவிலும் சிங்கப்பூரிலும் உள்ள தமிழ் எழுத்தாளர்களாகிய நாங்கள் எங்கள் சுகமான மூலைகளுக்குள் இருந்தவாறு எங்களுக்குக் கைவந்ததை எழுதி வந்தோம். இதைப் பொதுவான தமிழ் உலகம் அவ்வளவாகப் பொருட்படுத்தவில்லை என்றாலும் எங்களுக்குள் நாங்கள் பாராட்டிச் சீராட்டி வைத்துக் கொள்வதில் குறைவில்லை. 130 ண்டுகளுக்கு முன்னால் எங்கள் முதல் தலைமுறைக் குடியேற்றக்காரர்கள் தொடக்கி வைத்த ஒரு பாரம்பரியத்தை இப்போது நாட்டின் குடிமக்களாகிய நாங்கள் தொடர்ந்து வருகின்றோம் என்ற பெருமை எங்களுக்கு இருந்தது.


ஆனால் சிங்கப்பூர் தனது பொருளாதாரத்தைக் காப்பாற்றவும் முன்னேற்றவும் தமிழ் நாட்டிலிருந்து ஒரு "இரண்டாம் குடியேற்றக்காரர்கள்" அலையை ரம்பித்து வைத்து தமிழ்நாட்டிலிருந்து ட்களைக் கொண்டுவந்ததும், அதில் ஒரு சிறுபகுதியினர் நல்ல தமிழ்ப் படைப்பாளர்களாக இருந்ததும், அவர்கள் சிங்கப்பூர் அடையாளத்துடன் எழுத ஆரம்பித்ததும் அங்குள்ள தமிழ் எழுத்தாளர்களின் நித்திரையைக் கொஞ்சம் கெடுத்திருக்கிறது. இந்த இரண்டாம் குடியேற்றக்காரர்கள் வெகுவிரைவில் அவர்கள் நாட்டுக்கு அளிக்கும் பங்குக்கு ஏற்ப நிரந்தரவாசமும் குடியுரிமையும் அளிக்கப்படுவது, அவர்களுக்கும் அசல் சிங்கப்பூர் எழுத்தாளர்களுக்கும் உள்ள வேறுபாடுகளையும் அழித்துவிட்டிருக்கிறது.


இதை மலேசியாவில் இருந்து நாங்கள் கவலையுடன் பார்த்துக் கொண்டிருக்கிறோம். ஏனென்றால் மலேசியாவின் குடியிறக்கக் கொள்கைகளும், அதன் தீவிரப் பொருளாதாரத் தேவைக்கேற்பத் தளர்வாகி வருகின்றன. நடப்பு அனைத்துலக அரசியலில் பாரம்பரியமாக தொழிலாளர்களை அளித்து வந்த நாடுகள் பின் வாங்குவதால் தொழிலாளர்களைச் சுதந்திர உலகச் சந்தையிலிருந்து தருவிக்கலாம் என அரசாங்கம் அறிவித்துள்ளது. ஆகவே தமிழ்நாட்டிலிருந்தும் அதிகத் தொழிலாளர்கள் இங்கு வரத் தொடங்கினால் அதில் நிச்சயம் நல்ல படைப்பாளர்கள் இருப்பார்கள். (ஏற்கனவே இருக்கிறார்கள்.) ஆகவே சிங்கப்பூருக்கு ஏற்பட்டதே எங்களுக்கும் ஏற்படும். "மலேசியத் தமிழ் எழுத்தாளர்கள்" என்ற எங்கள் அடையாளத்தின் நிர்ணயங்களை நாங்கள் மிகவும் விரிவு படுத்த வேண்டியிருக்கும். ஏற்கனவே அந்த அடையாளத்தை மலாய் மொழியில் எழுதும் தமிழ் எழுத்தாளர்களோடு நாங்கள் பகிர்ந்து கொள்ள வேண்டிய நிலைமை வந்திருக்கிறது.


இப்படிச் சில தயக்க உணர்வுகளோடுதான் ஜெயந்தியின் படைப்புக்களை நான் படிக்க ஆரம்பித்தேன். னால் படித்து முடித்தபோது ஜெயந்தி போன்றோரின் வரவு இந்த சிங்கப்பூர், மலேசியத் தமிழ் இலக்கியத்துக்கு மிகப் பெரிய ஆதாயமே தவிர அபாயம் இல்லை என்பது தெளிவாகிற்று.


சிங்கப்பூர் இனி எழப்போகும் புதிய தமிழ்ப் படைப்பிலக்கியத்துக்கு ஒரு சோதனைக் களம் என்று சொல்லலாம். தமிழ் படைப்பிலக்கியத்தின் ஜென்மபூமி கிராமமாக இருந்து வந்தது. தி.ஜா. போன்றவர்கள் அதனை அற்புதமாகப் பயன் படுத்தினார்கள். புதுமைப் பித்தன், கல்கி, ஜெயகாந்தன் (வகைக் கலப்புக்காக இந்த வரிசை) கியோர் சென்னை, மதுரை போன்ற நகர வாழ்க்கை பற்றி எழுதினாலும் அவை தமிழ்நாட்டு கிராமவாசம் மாறாத நகர்களேயாகும்.


ஆனால் உலகப் பொருளாதாரத்தில் கிராமத்தின் இடம் குறைந்து வருகிறது. இந்தியாவிலும் கூட விரைவில் நகரங்களில் வாழுவோர் எண்ணிக்கை கிராமங்களில் வாழுவோர் எண்ணிக்கையைத் தாண்டும்.


ஜெயந்தி வாழுகின்ற சிங்கப்பூரில் கிராமங்கள் கிடையாது. "ஏழைகள்" என்ற ஒரு வகுப்பினர் கிடையாது. இந்த இரண்டு விஷயங்களும் சேர்ந்து அங்கு தமிழ்ப் படைப்பிலக்கியத்தின் பின்புலப் பாரம்பரியத்தைப் புரட்டிப் போட்டுவிட்டன.
ஜெயந்தி இந்தப் புதிய சவால்களை மிகச் சாதுர்யமாக எதிர் கொண்டுள்ளார். அவரின் எழுத்துக்களில் நகர நெருக்கடிகளும் மன அழுத்தங்களும் செல்வச் செழிப்புக்கிடையில் வாழ்க்கை வக்கிரமாகிவிடுவதும் மிக யதார்த்தமாக வந்துள்ளன. இனி குவால லும்பூரிலும் சென்னையிலும் டெல்லியிலும் லண்டனிலும் தமிழர் வாழ்க்கையைப் பிரதிபலிக்கும் எழுத்துக்கள் எப்படியிருக்கும் என்பதை இவரது கதைகளை வைத்தே யூகித்துவிடலாம் போலிருக்கிறது.


இவர் கதைகளைத் தொகுத்துள்ள வரிசை முறையில் அமைந்துள்ள முதல் இரண்டு கதைகளும் முதன்மை இடம் பெறுவது பொருத்தம். "நாலேகால் டாலர்" கதையில் பேரங்காடியில் ஒரு வாழ்த்து அட்டைக்கு பணம் செலுத்த மறந்து விட்ட கதைத் தலைவி அடைகின்ற அவமானமும் மன வேதனையும், "ஈரம்" கதையில் திடீரென நின்றுவிட்ட மின்தூக்கியில் பயத்தால் மூத்திரம் பெய்துவிட்ட தமிழ்நாட்டு வீட்டுப் பணிப் பெண்ணுக்கு ஏற்படும் அதே அனுபவங்களும் நகர வாழ்க்கையில் மட்டுமே நடக்கக் கூடியன. இந்த அப்பாவிப் பெண்கள் இழைத்துவிட்ட இந்தத் தவறுகளை இப்படிப் பெரிது படுத்த ஈரம் வற்றிவிட்ட நகர ஒழுங்கு முறை அமைப்புமுறையில்தான் முடியும்.


இனி தொடர்ந்து வருகின்ற கதைகளிலும் நகரம், நமக்குப் பழகிவிட்ட வாழ்க்கை முறைகளை, உறவுகளை எப்படியில்லாம் விகாரப் படுத்திவிட்டது என்பதைத்தான் அவ்வந்த வாழ்க்கை முறைகளின் யதார்த்தம் குலையாமல் ஜெயந்தி சொல்லுகிறார்.
"பந்தயக் குதிரை" கதையில் சிங்கப்பூரில் படிக்கும் குழந்தைகளின் மன நெருக்கடிகளும், அவற்றுக்கிடையில் தமிழ் படிக்கப் படும் வேதனைகளும் கூறப்படுகின்றன. இது செய்தி; யதார்த்தம். ஆனால் அந்த யதார்த்தத்தை நுண்ணிய கற்பனையோடு நயமாக அளிக்க முடிந்திருப்பதுதான் ஜெயந்தியின் வெற்றி.
பள்ளியில் பரிட்சை நடக்கும் நேரம். போகிற வழியில் விபத்தில் அகப்பட்டுக் கொண்ட புறாவை இந்த மாணவன் பார்க்கிறான். தேர்வு பொருளாதார வாழ்க்கையின் கட்டாயத் தேவை. ஆனால் புறாவின் நிலைமை மனிதநேயத்தோடு சேர்ந்து மனதை அலைக்கழிக்கிறது. இதனை ஒரு ஓட்டப் பந்தய வேகத்தில் அவர் சொல்லுகிறார்:
"தேர்வா, புறாவா? குதிரை. தேர்வு தான், தேர்வு தான், மனம் அலறியது. ஆனால் பாவம், அதற்கென்னவானதோ? அந்தச் சிறிய பறவை உயிர் பிழைத்ததா தெரியவில்லையே. 'புறாவா தேர்வா?' - உறுமியது குதிரை. தேர்வு தான், தேர்வு தான். 'சரி பின் என்ன யோசனை, சீக்கிரம் வீட்டுக் கதவைத் திறந்து படிக்க ஆரம்பியேன். இல்லையென்றால், பத்தயத்தில் தோல்விதான் உனக்கு,..ஆமாம், நினைவிருக்கட்டும்,..ம் ,..ஓடு, ம்'. மதிப்பெண்கள் ஓடு, ம், புள்ளிகள்,..ஓட்டம், ஓட்டம், ஓட்டம், முடிவற்ற ஓட்டம்..."


"நுடம்" கதையில் ஒரு குழந்தையின் மன அழுத்தமும் அதற்குத் தாயின் கவனிப்புத் தேவையாவதையும் அம்மாவை நொண்டியாக வரையும் குழந்தை மூலமான மனோதத்துவக் கதையாக ஆக்கியுள்ளார். "திரிசங்கு" கதையில் அப்பாவும் அம்மாவும் பிரிந்து வெவ்வேறு திருமணம் செய்து கொண்ட கதையின் சிக்கலான பின்னல்கள் ஒரு சிறுபிள்ளையின் வெகுளிப் பார்வையிலிருந்து அளிக்கப்படுகின்றன.
நகரச் சூழ்நிலையிலும், அங்கு வாழ்க்கை நடத்த வேண்டிய பொருளாதாரப் போட்டி மனப்பான்மையிலும் மன ஈரம் வற்றிப்போகும் நிலைமையைத்தான் ஜெயந்தியின் பெரும்பாலான கதைகள் சொல்லுகின்றன. பொருளாதாரக் குதிரை அடிபட்டு விழும் மனிதநேயப் புறாவை மிதித்துக் கொண்டு ஓடுகிறது.


ஆனால் ஜெயந்தி தரும் செய்தி இவற்றின் அடிநாதமாக இந்தச் சூழ்நிலையிலும் மனிதநேயம் வற்றிப் போய்விடக் கூடாது என்பதுதான். பொருளாதாரத்தின் இயந்திரப் பற்களிடையே மனதின் மென்மை சிக்குண்டு விடக்கூடாது என்னும் எச்சரிக்கைகள் தெளிவாக இருக்கின்றன.


ஜெயந்தியின் கதை சொல்லும் முறை மிகச் சரளமானது. சம்பவப் பின்னல்கள் கதையோட்டத்தின் தேவைக்கேற்ப சுருக்கமாகவும் நுணுக்கமாகவும் அமைகின்றன. அவருடைய கதைகள் திறமான நெசவுகள். படிக்கப் படிக்கப் பட்டுப் போல் மனதில் வழுக்கி ஓடுகின்றன.


தமிழ்ச் சிறுகதைகள் நகர மயம் ஆகுதலும் உலக மயம் ஆகுதலும் நிகழும்போது அழுத்தமாகச் சொல்லப்பட வேண்டிய செய்திகள் எவை என்பதற்கு ஜெயந்தியின் கதைகள் முன்னுதாரணங்களாக அமைந்திருக்கின்றன.


வாழ்த்துக்கள்.

30 July 2005

நாலேகால் டாலர் - கருத்துரை - அருணா ஸ்ரீநிவாசன்

வாழ்க்கையில் நாம் தினசரி சந்திக்கும் பல தருணங்களை மிகத் தத்ரூபமாக விவரித்து எழுதப்பட்ட கதைகள் இவை.

ஜெயந்தி சங்கரின் கதைகளில் எனக்கு மிகவும் பிடித்த ஒரு விஷயம் அவரது இயல்பான நடையும், ஒவ்வொரு கதையிலும் அவர் கோடிட்டுக் காட்டும் மனித சுபாவங்களும், மனிதத்தின் மேன்மையும்.

செய்தித்தாள் ஒன்றில், வியாபார நோக்கோடு வெளியிடப்பட்டு ஒரு சிறுவனின் வாழ்க்கையில் விளையாடிய ஒரு செய்தியாகட்டும், ( நிஜமற்ற நிழல்) விவாகரத்து செய்து தன்னையும் குழந்தைகளையும் கைவிட்டக் கணவனுக்குத் தன் வளர்ந்த மகன் சிறுநீரகம் கொடுக்க முனைவதைப் பார்த்து தவிக்கும் தாயுள்ளத்தில் புதைந்திருக்கும் அடிப்படை மனிதம் கடைசியில் வெல்வதாகட்டும் ( தெளிவு), எல்லாக் கதைகளிலும் மென்மையாக இந்த உணர்வு இழையோடுகிறது.

குழந்தைப்பேறு ஆகி, தையல் போட்ட இடத்தில் வலி, ப்ரசவ வலியைவிட அதிகமாக இருப்பதாகப் பல பெண்கள் உணர்வார்கள். " அமிலத்தை ஊற்றியதைப்போலக் கடும் எரிச்சல். இது தினமும் இரண்டு வேளை. அந்த நர்ஸ் கையில் தேவையான உபகரணங்களுடன் ஒவ்வொரு அறையாக வருவது தெரியும் போதே சுதாவிற்கு எங்காவது ஓடி விடலாமா என்றிருக்கும். படுக்கையை விட்டு எழவே சிரமம். இதில் எழுந்து ஓடவாவது." தையல் கதையில் உள்ள இந்த வரிகள் போல் விவரிக்கும் சூழ்நிலை சீரியஸாக இருந்தாலும் மெல்லிதாக இயல்பாக ஓடிக்கொண்டு இருக்கும் நகைச்சுவை முறுவலைக் கொண்டுவருகிறது. அதேபோல் மனசை நெகிழ்விக்கும் விவரிப்புகள். இந்தக் கதையில் வரும் பெண்ணின் பிரசவ அனுபவம் படிக்கும் எந்தத் தாய்க்கும் தன் அனுபங்களை நிச்சயம் நினைக்காமல் இருக்க முடியாது. வரிக்கு வரி தத்ரூபமாக உணர்ந்து எழுதியுள்ளார்.

நாலேகால் கால் டாலர் கதையில் அந்தப் பெண் இருக்கும் சூழ்நிலையில் யாருமே இடிந்து, கலங்கிப்போவார்கள். ஆனாலும் ஜெயில் அதிகாரிகள் தன் நகைகளைக் கழட்டித் தரச் சொல்லும்போது, கழலாத தன் மூக்குத்தி பற்றி அவளுக்கு அந்தச் சூழ்நிலையிலும் சிரிப்புதான் வருகிறது. "தோட்டைக் கழற்றியதுமே மூக்குத்தியையும் கழற்றிவிட நினைத்து மூன்று முறை முயன்றதில் மூக்குக் குடைமிளகாயாகச் சிவந்ததே தவிர மூக்குத்தியின் மறை அசைந்தே கொடுக்கவில்லை. ப்ளஸ் டூவில் குத்தியபோது டாக்டரே திருகியதுதான், பிறகு பதினாறு வருடத்தில் விதவிதமாக மூக்குத்தியணியும் சிநேகிதிகளைப் பொறாமையோடு பார்த்து என்னுடையதைக் கழற்ற முயன்று ஒவ்வொருமுறையும் தோற்றே வந்திருந்தேன். இந்தக் கதையையெல்லாம் சொன்னால் அந்தச்சீனனுக்குப் புரியுமா? நானும் சந்தர்ப்பத்தைப் பயன் படுத்தி முழுமையாக முயன்றேன். ஹ¥ஹ¤ம்,.. முடியவேயில்லை." இப்படி ஆங்காங்கே இக்கட்டிலும், சிறப்பான நேர்மறையான எண்ண ஓட்டங்களை அள்ளித் தெளித்தபடி கதையோட்டம் நகருவது, கதை சொல்லும் பாணியில் ஒரு ஆரோக்கியமான அணுகுமுறை.

இதே கதையில் கடைசியில் சொல்லப்படும் "பலவீனமாயிருந்த என் மறதியே என் பலமானது." என்பதும், MC என்ற கதையில் இந்த இரண்டு எழுத்துக்கள் பிரதிபலிக்கும் அர்த்தம் பொதிந்த ( Male Chauvinist & Medical Certificate ) வார்த்தைகள் போன்றவை ஜெயந்திக்கு வார்த்தைப் பிரயோகத்த்தில் உள்ள ஆழத்தை உணர்த்துகிறது.

"..- பகலெல்லாம் வேலைக்கான ஆயத்தங்களில் கழியும். இரவு மற்றவர்கள் தூங்கப்போனதும் தான் இவர் தன் வேலையையே ஆரம்பிப்பார். ப்ளாஸ்டர் •ப்பாரிஸில் தொடங்கி, பேப்பர் மேஷில் தொடர்ந்து, சிமெண்ட் வரை பலதரப்பட்ட வஸ்துக்களைக் குழைத்துப் பொம்மைகள் செய்வார். வடிவம் வந்ததும், வர்ணங்கள் பூசுவார். திசங்கர் ஓரளவு சங்கரரைப்போலவே இருப்பார். சற்று பருத்தோ இளைத்தோ இருந்தாலும் சுமாராய் ஆதிசங்கரர் என ஒப்புக் கொள்ளும்படியே இருக்கும் பொம்மை. சில சமயம் தூக்கத்தைக் கெடுத்துக் கொண்டு தன் பெண்ணிற்கோ அல்லது நாட்டுப்பெண்ணிற்கோ அவர்களுக்கு அது தேவையா அல்லது பிடிக்குமா என்பதை லட்சியம் செய்யாது வரலக்ஷ்மிவிரதத்திற்கு மண்டபம் செய்வார்..." அப்பா என்ற கதையில் வரும் இந்தக் குணச்சித்திரம் வெகு அருமை.

ஈரம் என்ற கதையில், " இரண்டு நாட்களிலேயே பெரியவனிடமிருந்து போன் வந்தது. மகிழ்ச்சியோடு 'வந்துடும்மா', என்று சொல்வானென்று எதிர்பார்த்துப் போனைக் கையில் வாங்கினேன். எடுத்ததுமே, "ஏம்மா, இப்ப என்ன ஆயிடுச்சுன்னு திடீர்னு கிளம்பி இங்க வரேங்கற?", என்றதும் வாயடைத்து நின்றேன்" என்ற வரிகளில், சிங்கப்பூரில் வீட்டு வேலை செய்யப்போன தன் அம்மா ஒரு இக்கட்டில் மாட்டிக்கொண்டு இந்தியா திரும்ப ஆசை தெரிவிக்கும்போது, மகன்கள் தன்னை ஆசையுடன் "வா" என்பார்கள் என்று எதிர்பார்த்த தாயின் ஏமாற்றத்தில் வாழ்க்கையின் நிதர்சனம் பளிச்சிடுகிறது.

ஒவ்வொரு கதையையும் படிக்கும்போது சிங்கப்பூரில் வாழும் புலன் பெயர்ந்த தமிழ்க்குடிமக்களின் வாழ்க்கை முறையும், ஒரு நடுத்தர சமூகத்தின் எதிர்பார்ப்புகள், ஆசைகள், வாழ்க்க முறை, சவால்கள் என்று ஒரு கலைடாஸ்கோப்பில் பார்ப்பதுபோல் பல கோணங்கள் தெரிகின்றன. ஒரு பைனாகுலர் வழியாக அல்லது மைக்ரோஸ்கோப் வழியாக நாம் ஒரு நடுத்தர வாழ்க்கையின் ஒவ்வொரு அம்சங்களையும் கூர்ந்து கவனிக்கிறார்போல், அல்லது அவர்கள் வாழ்க்கையில் நாம் மௌனமாக ஒரு அங்கம் வகிப்பதுபோல் ஒரு உணர்வு - எல்லாக் கதைகளிலுமே. ஒரு சிறந்தப் படைப்பின் முக்கிய அம்சம் இதுதான். ஜெயந்தியின் கதைகளில் இதை என்னால் அடையாளம் கண்டுகொள்ள முடிகிறது.

22-07-05

நாலேகால் டாலர் - ஒரு பார்வை - ஜே. எம். சாலி

ஒரு பார்வை



மண் வாசனையில் பிடிப்பு அதிகம் உண்டு. பிறந்து வளர்ந்த நாட்டுப் புற மண்ணும் வாழும் மண்ணும் உணர்வில் கலந்தவை. முதல் பொருள், கருப்பொருள், உரிபொருள் என்று ஆசிரியர் சொல்லிக் கொடுத்தவை அப்போது உரைக்கவில்லை. வளர வளரத் தான் உள், வெளிப் பார்வைகளை அவை விரிவுபடுத்தின. மண் வாசனைக்குள் அவை அடக்கம்.

பார்வை விஷயமும் அப்படித்தான். உணர்வுகளைப் படம் பிடிக்கவும், வார்த்தைச் சித்திரம் வடிக்கவும் வித்தியாசமான பார்வை வீச்சு வேண்டும். இரண்டு பார்வையும் சற்று விரிவாக இருந்தால் படைப்பாலியாகிவிடலாம்.

எழுத்தாளர் ஜெயந்தி சங்கரின் சிறுகதைகளைப் படித்த போது இந்த உணர்வுகளே முகம் காட்டின.

கற்பனை இல்லாமல் கதை, கவிதைகளைப்படைக்க முடியாது என்ற வாத, விவாதங்கள் காலம் கடந்தவை. பார்ப்பதை, உணர்வதை எழுத்தால் பதிவு செய்தாலே அது படைப்பாகிவிடும். ஆக, யதார்த்தத்தின் மறுபக்கமே இலக்கியம். உள், வெளிப்பாவைகள் அல்லது உணர்வுகளின் பரிமாணமே இலக்கியத்தின் இலக்கணம். அப்படி நீங்கள் பார்க்கும் மனிதரெல்லாம் பாத்திரங்களே. மண் வாசனையை மறந்துவிடக் கூடாது. களம், தளம், பின்னணி என்பதெல்லாம் அதன் மறுபெயர்தான்.

வாசகன் பத்திரிக்கையாளன் அல்லது நடுவர் எனும் பலமுனைப் பார்வையுடன் கதை கவிதைகளைப் படிக்கும் பழக்கம் நீண்ட காலமாக உண்டு. நாற்பது ஆண்டுக்கு முந்திய சிங்கப்பூர் மக்களையும் மண் வாசனையையும், வளர்ந்த நாடான இன்றைய குடியரசின் தலைமுறை, வளங்களையும் அறிந்தவன் என்பதால் சிங்கப்பூர் பின்னணியில் எழுதப்படும் சிறுகதைகளை அக்கறையுடன் படிப்பது வழக்கம்.
ஜெயந்தி சங்கர் சிங்கப்பூர் பின்னணியில் அவ்வப்போது உள்ளூர் இதழ்களில் எழுதிய சிறுகதைகளைப் படித்து வந்திருக்கிறேன். இணைய இதழ்களிலும் அவருடைய சிறுகதைகள் இடம் பெற்று வருகின்றன.

சாங்கி விமான நிலையம், புக்கித் பாத்தோக், அங் மோ கியோ, குட்டி இந்தியா, டான் டோக் செங் மருத்துவமனை,.. போன்ற பல இடங்களைக் கதைக் களமாக்கி இருக்கிறார், ஜெயந்தி சங்கர். பல இன சமூகப் பாத்திரங்களையும் உலவவிட்டிருக்கிறார்.

மற்றொன்று கதை வடிவம். சிறுகதையின் நீளம், அளவு பற்றிய சர்ச்சை அதிகரித்துள்ள கால கட்டம் இது. இது வெகுஜன பத்திரிக்கை, சிற்றிதழ், இலக்கிய இதழ் என்ற விவாதங்களும் வெகுவாக தலையெடுத்துள்ளன. உலகளாவிய இணைய இதழ்களின் எண்ணிக்கையும் உயர்ந்து வருகிறது. இரண்டு மணிநேரம் படிக்கக்கூடிய அளவில் கூட சிறுகதை இருக்கலாம். என்று ஐம்பதாண்டுகளுக்கு முன் கூறப்பட்டதை அறிவேன். இரண்டொரு பக்கங்களில் சிறுகதை இருந்தால் போதும் என்ற நிலை இன்று உருவெடுத்திருக்கிறது.

இந்த சர்ச்சைகளுக்கு அவருடைய சிறுகதைகள் விடையளிக்கின்றன.
இத்தகைய போக்குக்களுக்கு ஈடுகொடுத்து எழுதி வருகிறார் ஜெயந்தி சங்கர்.
தக்கவர்கள் இத்தொகுப்புக்கு ஆய்வுரை, முன்னுரை வழங்கியுள்ளனர். எனவே, நீளமான கருத்துரை எழுத நான் முற்படவில்லை. தமது படைப்புகளைத் தொகுத்து நூலாகக் கொணரும் அவருடைய முயற்சியை வரவேற்று வாழ்த்துகளைப் பகிர்ந்து கொள்கிறேன்.


அன்புடன்,
ஜே. எம். சாலி
சிங்கப்பூர்
02-08-05

நாலேகால் டாலர் - நூல் அறிமுகம் - புஷ்பா தங்கதுரை

வாங்கிப் படியுங்கள்



சிங்கப்பூரின் •புனான் செண்டரில் ஆறாவது மாடியில் 'சேலஞ்சர்' கம்ப்யூட்டர் நிறுவனம். ஒவ்வொரு முறை போகும்போதும் சேபஞ்சரில் நிறைய மணி நேரம் செலவழிப்பேன். கால்கள் கெஞ்சும். ஒரு சமயம், ஒரு பகுதியை விட்டு இன்னொரு பகுதி போகிறேன் என்று நினைத்து வாசலைக் கடந்தபோது அபாய மணியடித்து உடனே திரும்பினேன். கவுண்டரிலிருந்த சீனப் பெண்மணி என்னை ஒரு மாதிரியாகப் பார்த்தாள். எதுவும் சொல்லவில்லை. நான் வாங்கிக் கொண்ட சாமான்களுக்குப் பணம் கொடுக்காமல் போகிறேன் என்று அந்த அபாய மணியடிக்கிறது.




இப்போதும் நான் சேலஞ்சர் போகும்போதெல்லாம், என்னைப் போல் யாராவது ஒருவர் வெளியில் போவதும், அபாயம் அலறுவதும், மன்னிப்புடன் அவர் உள்ளே திரும்புவதும், பலமுறை பார்த்திருக்கிறேன்.



இது ஒரு ரக அனுபவம். இது போன்ற பல ரக அனுபவங்களை சிங்கப்பூரில் வாழ்ந்து வரும் ஜெயந்தி சங்கர் வாயிலாகப் படிக்கும் போது அருமையான சுவை ஏற்படுகிறது. புதுமை அனுபவமே ஒரு புதுமையான கதையாக மாறும். ஜெயந்தி சங்கர் அவரது புதுமையான அனுபவங்களை அழகாக உள்ளைத்தைத் தொடும்படி கதைகளாக வடித்துள்ளார். தாமே விலகி நின்று தம்மையே மூன்றாம் நபராக ஒரு ரசனையோடு பார்த்து எழுதுவது நல்ல கலை. அதுவும் ஒளிவு மறைவின்றி அப்படியே தத்ரூபமாக வர்ணிப்பது படிப்பவர் மனங்களை ஈர்த்து விடும். இந்த நீதியில் 'நாலேகால் டாலர்' நெகடிவ் சிங்கப்பூருக்கு ஓர் எடுத்துக் காட்டு. பதைபதைப்புடன் படிக்கிறோம்.



அதைப்போலவே 'ஈரம்' என்ற கதை ! ஈரத்தில் லிப்டில் நிகழ்ந்த நிகழ்ச்சி அவருக்கே முழுவதுமாகத் தெரியாமல் இருக்க, அதனால் ஏற்படும் கடின சோதனைகள் மற்றொரு நெகடிவ் சிங்கப்பூர். சம்பவங்களைச் சுற்றி எழுந்துள்ள கதைகளைத் தவிர, 'தையல்', 'நுடம்', 'திரிசங்கு', 'அப்பா' போன்ற குடும்பரீதியான கதைகள் சிங்கப்பூர் பின்னணியில் ஆசிரியையின் மனப்பின்னல்களுடன் வரும் அழுத்தமான சித்திரங்கள். 'எம்.ஸீ தருகிறேன்' என்று சீன டாக்டர் கிண்டலாகச் சொல்ல அதையும் கேட்கிற அந்தக் குடும்பப் பெண்ணுக்கு அது எத்தனை துன்ப உணர்வைக் கொடுக்கிறது, 'எம்.ஸீ' கதையில்.



'மிருகன்' என்ற கதையில் சட்டம்'ஒழுங்கு உள்ள அந்த நாட்டிலும் அப்படி நடக்கிறதே என்று நம்மை நினைக்க வைக்கிறது.
முதலில் தனித் தனிக் கதைகளாகப் படிக்கப் போக, பிறகு கதைகளின் சுவையிலும் அமைப்பிலும் நடையிலும் கவரப்பட்டு எல்லாக்கதைகளையும் படித்து முடித்தேன்.



'பசி ஆறுதல்', 'காடி', 'ஏர்கான்' என்ற சிங்கப்பூர் வார்த்தைகள் மனதில் ஒருவகை உவகை கொடுக்கின்றன. நம் வீட்டு சன்னலிலிருந்து அண்டை வீட்டில் நடப்பதையெல்லாம் அனுதாபத்துடன் கவனிப்பது போல் அவ்வளவு தத்ரூபமாக அமைந்துள்ளன. இதில் வரும் குடும்பக் கதைகள் எளிய சொற்கள், மிகத் துல்லியமாகக் காட்சிகளை வர்ணிக்க ஜெயந்தி சங்கரின் pscheல் புகுந்து வெளிவருவது போல் ஓர் நூதன அனுபவம் கொடுக்கிறது. இந்தக் கதைத் தொகுதி 'ஓர் உணர்வுக் களஞ்சியம்'


நன்றி: இலக்கியப்பீடம் /செப்டம்பர் 2006



ஆசிரியர்: ஜெயந்தி சங்கர்
வெளியீடு: மதி நிலையம்
சென்னை- 600 017
விலை- ரூ.76
பக்கங்கள் -173