Monday, March 29, 2010

நாலேகால் டாலர் - கருத்துரை - அருணா ஸ்ரீநிவாசன்

வாழ்க்கையில் நாம் தினசரி சந்திக்கும் பல தருணங்களை மிகத் தத்ரூபமாக விவரித்து எழுதப்பட்ட கதைகள் இவை.

ஜெயந்தி சங்கரின் கதைகளில் எனக்கு மிகவும் பிடித்த ஒரு விஷயம் அவரது இயல்பான நடையும், ஒவ்வொரு கதையிலும் அவர் கோடிட்டுக் காட்டும் மனித சுபாவங்களும், மனிதத்தின் மேன்மையும்.

செய்தித்தாள் ஒன்றில், வியாபார நோக்கோடு வெளியிடப்பட்டு ஒரு சிறுவனின் வாழ்க்கையில் விளையாடிய ஒரு செய்தியாகட்டும், ( நிஜமற்ற நிழல்) விவாகரத்து செய்து தன்னையும் குழந்தைகளையும் கைவிட்டக் கணவனுக்குத் தன் வளர்ந்த மகன் சிறுநீரகம் கொடுக்க முனைவதைப் பார்த்து தவிக்கும் தாயுள்ளத்தில் புதைந்திருக்கும் அடிப்படை மனிதம் கடைசியில் வெல்வதாகட்டும் ( தெளிவு), எல்லாக் கதைகளிலும் மென்மையாக இந்த உணர்வு இழையோடுகிறது.

குழந்தைப்பேறு ஆகி, தையல் போட்ட இடத்தில் வலி, ப்ரசவ வலியைவிட அதிகமாக இருப்பதாகப் பல பெண்கள் உணர்வார்கள். " அமிலத்தை ஊற்றியதைப்போலக் கடும் எரிச்சல். இது தினமும் இரண்டு வேளை. அந்த நர்ஸ் கையில் தேவையான உபகரணங்களுடன் ஒவ்வொரு அறையாக வருவது தெரியும் போதே சுதாவிற்கு எங்காவது ஓடி விடலாமா என்றிருக்கும். படுக்கையை விட்டு எழவே சிரமம். இதில் எழுந்து ஓடவாவது." தையல் கதையில் உள்ள இந்த வரிகள் போல் விவரிக்கும் சூழ்நிலை சீரியஸாக இருந்தாலும் மெல்லிதாக இயல்பாக ஓடிக்கொண்டு இருக்கும் நகைச்சுவை முறுவலைக் கொண்டுவருகிறது. அதேபோல் மனசை நெகிழ்விக்கும் விவரிப்புகள். இந்தக் கதையில் வரும் பெண்ணின் பிரசவ அனுபவம் படிக்கும் எந்தத் தாய்க்கும் தன் அனுபங்களை நிச்சயம் நினைக்காமல் இருக்க முடியாது. வரிக்கு வரி தத்ரூபமாக உணர்ந்து எழுதியுள்ளார்.

நாலேகால் கால் டாலர் கதையில் அந்தப் பெண் இருக்கும் சூழ்நிலையில் யாருமே இடிந்து, கலங்கிப்போவார்கள். ஆனாலும் ஜெயில் அதிகாரிகள் தன் நகைகளைக் கழட்டித் தரச் சொல்லும்போது, கழலாத தன் மூக்குத்தி பற்றி அவளுக்கு அந்தச் சூழ்நிலையிலும் சிரிப்புதான் வருகிறது. "தோட்டைக் கழற்றியதுமே மூக்குத்தியையும் கழற்றிவிட நினைத்து மூன்று முறை முயன்றதில் மூக்குக் குடைமிளகாயாகச் சிவந்ததே தவிர மூக்குத்தியின் மறை அசைந்தே கொடுக்கவில்லை. ப்ளஸ் டூவில் குத்தியபோது டாக்டரே திருகியதுதான், பிறகு பதினாறு வருடத்தில் விதவிதமாக மூக்குத்தியணியும் சிநேகிதிகளைப் பொறாமையோடு பார்த்து என்னுடையதைக் கழற்ற முயன்று ஒவ்வொருமுறையும் தோற்றே வந்திருந்தேன். இந்தக் கதையையெல்லாம் சொன்னால் அந்தச்சீனனுக்குப் புரியுமா? நானும் சந்தர்ப்பத்தைப் பயன் படுத்தி முழுமையாக முயன்றேன். ஹ¥ஹ¤ம்,.. முடியவேயில்லை." இப்படி ஆங்காங்கே இக்கட்டிலும், சிறப்பான நேர்மறையான எண்ண ஓட்டங்களை அள்ளித் தெளித்தபடி கதையோட்டம் நகருவது, கதை சொல்லும் பாணியில் ஒரு ஆரோக்கியமான அணுகுமுறை.

இதே கதையில் கடைசியில் சொல்லப்படும் "பலவீனமாயிருந்த என் மறதியே என் பலமானது." என்பதும், MC என்ற கதையில் இந்த இரண்டு எழுத்துக்கள் பிரதிபலிக்கும் அர்த்தம் பொதிந்த ( Male Chauvinist & Medical Certificate ) வார்த்தைகள் போன்றவை ஜெயந்திக்கு வார்த்தைப் பிரயோகத்த்தில் உள்ள ஆழத்தை உணர்த்துகிறது.

"..- பகலெல்லாம் வேலைக்கான ஆயத்தங்களில் கழியும். இரவு மற்றவர்கள் தூங்கப்போனதும் தான் இவர் தன் வேலையையே ஆரம்பிப்பார். ப்ளாஸ்டர் •ப்பாரிஸில் தொடங்கி, பேப்பர் மேஷில் தொடர்ந்து, சிமெண்ட் வரை பலதரப்பட்ட வஸ்துக்களைக் குழைத்துப் பொம்மைகள் செய்வார். வடிவம் வந்ததும், வர்ணங்கள் பூசுவார். திசங்கர் ஓரளவு சங்கரரைப்போலவே இருப்பார். சற்று பருத்தோ இளைத்தோ இருந்தாலும் சுமாராய் ஆதிசங்கரர் என ஒப்புக் கொள்ளும்படியே இருக்கும் பொம்மை. சில சமயம் தூக்கத்தைக் கெடுத்துக் கொண்டு தன் பெண்ணிற்கோ அல்லது நாட்டுப்பெண்ணிற்கோ அவர்களுக்கு அது தேவையா அல்லது பிடிக்குமா என்பதை லட்சியம் செய்யாது வரலக்ஷ்மிவிரதத்திற்கு மண்டபம் செய்வார்..." அப்பா என்ற கதையில் வரும் இந்தக் குணச்சித்திரம் வெகு அருமை.

ஈரம் என்ற கதையில், " இரண்டு நாட்களிலேயே பெரியவனிடமிருந்து போன் வந்தது. மகிழ்ச்சியோடு 'வந்துடும்மா', என்று சொல்வானென்று எதிர்பார்த்துப் போனைக் கையில் வாங்கினேன். எடுத்ததுமே, "ஏம்மா, இப்ப என்ன ஆயிடுச்சுன்னு திடீர்னு கிளம்பி இங்க வரேங்கற?", என்றதும் வாயடைத்து நின்றேன்" என்ற வரிகளில், சிங்கப்பூரில் வீட்டு வேலை செய்யப்போன தன் அம்மா ஒரு இக்கட்டில் மாட்டிக்கொண்டு இந்தியா திரும்ப ஆசை தெரிவிக்கும்போது, மகன்கள் தன்னை ஆசையுடன் "வா" என்பார்கள் என்று எதிர்பார்த்த தாயின் ஏமாற்றத்தில் வாழ்க்கையின் நிதர்சனம் பளிச்சிடுகிறது.

ஒவ்வொரு கதையையும் படிக்கும்போது சிங்கப்பூரில் வாழும் புலன் பெயர்ந்த தமிழ்க்குடிமக்களின் வாழ்க்கை முறையும், ஒரு நடுத்தர சமூகத்தின் எதிர்பார்ப்புகள், ஆசைகள், வாழ்க்க முறை, சவால்கள் என்று ஒரு கலைடாஸ்கோப்பில் பார்ப்பதுபோல் பல கோணங்கள் தெரிகின்றன. ஒரு பைனாகுலர் வழியாக அல்லது மைக்ரோஸ்கோப் வழியாக நாம் ஒரு நடுத்தர வாழ்க்கையின் ஒவ்வொரு அம்சங்களையும் கூர்ந்து கவனிக்கிறார்போல், அல்லது அவர்கள் வாழ்க்கையில் நாம் மௌனமாக ஒரு அங்கம் வகிப்பதுபோல் ஒரு உணர்வு - எல்லாக் கதைகளிலுமே. ஒரு சிறந்தப் படைப்பின் முக்கிய அம்சம் இதுதான். ஜெயந்தியின் கதைகளில் இதை என்னால் அடையாளம் கண்டுகொள்ள முடிகிறது.

22-07-05

No comments: