Tuesday, May 25, 2010

மனுஷி

- ஏ.பி. ராமன்

சிங்கப்பூர் எழுத்தாளர் ஜெயந்தி சங்கரின் 'மனுஷி' சிறுகதைத் தொகுப்பு நூலைப்பற்றிய சிறு விமரிசனம் இது. இவர் சிங்கப்பூர் எழுத்தாளரா தமிழக எழுத்தாளரா என்பதை நிர்ணயிக்க வேண்டிய அவசியம் எதுவும் இல்லையென்றலும், சிங்கப்பூரில் குடியேறி 20 வருடங்களாக நிரந்தரமாக இங்கே வசித்துக் கொண்டிருக்கும் இவர் நம்மைப் பொறுத்தவரை சிங்கப்பூரர் தான். காரணம், சிங்கப்பூர் வாழ்க்கையை இந்த அளவுக்கு உவமித்து உணர்த்தும் தன்மையை மிகவும் நுட்பமான வார்த்தைகளால் கச்சிதமாகக் கையாண்டு வரும் இவரை உள்நாட்டு எழுத்தாளர்களின் முன் வரிசையில் தாராளமாக நிறுத்தலாம். முன்னர் வெளியான இவருடைய 'நாலேகால் டாலர்' மற்றும் 'பின் சீட்' தொகுப்புகளும் சிங்கப்பூர் உள்ளிட்ட தென்கிழக்காசிய்ட நாடுகளில் பெரிதும் பாராட்டப்பட்டதோடு இந்திய எழுத்துல ஜாம்பவான்களாலும் பேசப்பட்டன. பெரும்பாலான கதைகளில் சிங்கப்பூர் சூழலை அதிக அழுத்தத்துடன் விவரித்துள்ளார். அவை எழுதப்பட்ட நோக்கத்தையும் நிறைவேற்றி வைக்கின்றன. அந்த முயற்சிக்குத் தேவையான தைரியம் இந்நூலாசிரியருக்கு இருக்கவே செய்கிறது.

குறுகிய காலத்தில் 13 நூல்களை எழுதியுள்ளார். அவற்றில் சிறுகதைத் தொகுப்புகள் தவிர 'வாழ்ந்து பார்க்கலாம் வா', 'நெய்தல்' ஆகிய இரு நாவல்கள், 'முடிவிலும் ஒன்று தொடரலாம்' என்ற குறுநாவல் தொகுப்பு, 'ஏழாம் சுவை' என்ற கட்டுரைத் தொகுப்பு, சீனப்பெண்களின் வாழ்வையும் வரலாற்றையும் ஆய்வுப்பூர்வமாக எழுதியுள்ள 'பெருஞ்சுவருக்குப் பின்னே' என்ற நூல், சீனக்கவிதைகளின் மொழிபெயர்ப்பு+தொகுப்பு மற்றும் சில நூல்களும் இவருக்குப் புகழ் சேர்த்து வருகின்றன.

ஜெயந்தி சங்கரின் எழுத்துகளில் அனுபவத்தின் சாயல் அதிகம் தெரியும். எந்த உண்மையான எழுத்தாளனின் கற்பனைக்கும் அனுபவம் அவசியம் தேவையாகிறது. இலக்கிய எழுத்தாளனுக்கு அனுபவத்தின் அவசியம் புரியும். அனுபவத்திலும் அனுபவித்தலிலும் எத்தனையோ வகையுண்டு. ஒரு எழுத்தாளனுக்கு அனுபவமாகப் படுவது மற்றவனுக்கு சூன்யமாகப் படலாம். ஊர் உலகம் சுற்றும் எழுத்தாளனுக்கும் தன் சிருஷ்டிக்குத் தேவையான அனுபவத்தைப் பெற முடியாமற்போகலாம். ஆனால், அதை விடவும் அதிகமான ஆழமான, அதனினும் மாறுபட்ட ஒரு முழு அனுபவத்தை வீட்டுக்குள்ளேயே அடைந்து கிடக்கும் ஓர் எழுத்தாளன் பெற்று விடலாம். அனுபவம் அவரவர் கண்ணோட்டத்தைப் பொறுத்தது தான். உலகம் சுற்றும் தமிழ் எழுத்தாளர்களில் பலரும் கூட தாம் வாழ்ந்த இடங்களையும் அவ்விடங்களின் வாழ்க்கை முறைகளையும் தம் எழுத்தில் பிரதிபலிக்க மறந்ததில்லை.

மறைந்த எழுத்தாளார் சுஜாதா சுற்றாத நாடில்லை. ஆனாலும், ஸ்ரீரங்கத்தையும் திருச்சியையும் தொட்டு எழுதுவதில் அவர் கடைசிவரை ஒரு தனித் துடிப்பு காட்டினார். திருநெல்வேலி வட்டாரத்தை இழுத்து வருவதில் புதுமைப்பித்தன், வல்லிக்கண்ணன், ஸ்ரீவேணுகோபாலன் போன்றோர் போட்டி போட்டனர். தி. ஜானகிராமனுக்கு தஞ்சாவூர்ப்பகுதி தொக்கு மாதிரி. மலேசிய சிங்கப்பூரில் பல ஆண்டுகள் வாழ்ந்த கு. அழகிரிசாமி தமிழ்நாட்டு இடைசெவல் மண்ணை ஆங்காங்கே தூவ மறக்காதவர். அந்தக் கால எழுத்து மேதையான க.ந.சுப்ரமணியம் ஐரோப்பிய நாடுகளுக்குப் போகும் போதும் சாத்தனூரையும் சர்வமான்ய அக்கிரகாரத்தையும் குறிப்பிடுவதில் தனி ஆர்வம் காட்டினார்.

ஆனால், இதெல்லாம் அந்தக்கால விஷயமாகிவிட்டது. இப்போது பலரும் தங்கள் அனுபவ வாழ்க்கையிலிருந்து எதையும் பெறவோ பெற முயலவோ இல்லை என்பது தான் உண்மை. அதற்குக் காரணம், இன்றைய எழுத்தாளர்களின் பெரும்பாலான படைப்புகளில் இலக்கிய நோக்கம் குறைவு என்பது தான்.

சிறுகதைகளில் அனுபவங்களுக்கு இலக்கிய உருவம் கொடுப்பதும் சுலபமல்ல தான். காரணம், அனுபவத்தின் பரப்பளவைவிட அதன் ஆழம் தான் எந்த இலக்கியத்திற்கும் இன்றியமையாததாகிறது.

இவற்றை இங்கு குறிப்பிடுவதற்கான காரணம் ஜெயந்தி சங்கரின் சிறுகதைகளில் பிறந்த நாடும் வாழும் நாடும் பசுமையாக ஆத்மார்த்தமான சித்தரிப்பு காண்கிறது. மதுரை, ஒரிஸா, அஸ்ஸாம் இவற்றுடன் சிங்கப்பூரின் செங்காங், பீஷான், தேக்கா பகுதிகள் சிரமமின்றிச் சேர்கின்றன. மனித உறவுதான் அந்த இணைப்பிற்கு அங்கே மேம்பாலமாக அமைகிறது. இந்தியக் கண்ணோட்டத்திலும் சரி, சிங்கப்பூர் கண்ணோட்டத்திலும் சரி இவருடைய கதைகளில் இவரின் அனுபவ இழைகள் சுகமாகவே பின்னப்பட்டுள்ளன.

"சிறுகதை வடிவம், மிகநுட்பமான உறவுச்சிக்கல், நுண்ணிய நிகழ்வுகள், நேர்த்தி, மனவோட்டங்கள், கதை சொல்லல், அழகியல் போன்ற அனுபவம் சார்ந்தவற்றில் கவனம் செலுத்தி இயங்குவது தவிர்க்க முடியாததாகிறது", என்கிறார் நூலாசிரியர் தன் முன்னுரையில். நூற்றுக்கு நூறு உண்மை.

நுட்பமான உறவுச்சிக்கலை, நுண்ணிய நிகழ்வுகளாக கணவன் மனைவி இருவரின் மனவோட்டங்களாக 'மனுஷி' என்ற தலைப்பில் எழுதியிருக்கும் ஜெயந்தி சங்கரின் கதை சொல்லல் பாணி படிப்பவர்களின் உணர்வுகளுக்கு ஒரு தாலாட்டு! சொற்களை அவர் தராசு கொண்டு நிறுத்து நிறுத்துப் போடும் பாங்கு அருமை. மீனா நம் மனத்தோடு ஒன்றித்து விடுகிறாள். நம்மைப் பொருத்தவரை இது சிங்கப்பூர் கதை. ஆனால், ஜிம்பாப்வேயில் நிகழ்ந்தாலும் இதே பாத்திரங்களும் மனவோட்டங்களும் மிக நன்றாகவே பொருந்தும்.

'திரை' - இது முற்றிலும் சிங்கப்பூர் பின்னணி! பெண் குழந்தை வேண்டித் தவமிருக்கும் ஓர் இளந்தாயின் புலம்பல், குமுறல், ஆத்திரம், வெறுப்பு என்று ஒரு நவரச நாயகியாகச் சித்தரிக்கப்படும் தாயின் மனவுணர்வுகளை, பிரசவ மருத்துவமனைச் சூழலை, எதைப் பெற்றால் என்ன என சமாதானம் செய்யும் பெரியவர்களைச் சாடும் பெண் மனதை, பிரசவித்த பெண் படும் அன்றாட அவஸ்தைகளை அனுபவ நயத்துடன் சொல்கிறார். முதல் நாள் தாய்ப்பால் குடிக்காத குழந்தை மறுநாள் குடிக்க ஆரம்பித்ததும் அந்தத் தாய்க்கு மட்டுமல்ல நமக்கும் உள்ளம் பூரிக்கிறது. திரை - ஒரு நேரான நடை பாதை. தடையில்லாமல் தடுமாறாமல் அவரால் மட்டுமில்லாமல் வாசகனாலும் நடக்க முடிகிறது.

சுகாதார சிங்கப்பூரில் 'சார்ஸ்' அரக்கன் நிகழ்த்திய லீலைகளில் உயிரிழந்த சிந்துவையும் மகன் பிரவீணையும் சுற்றிச் சுழன்றோடும் கதை 'சுவடு'. குறைவான நிகழ்வுகளை நிறைவாகச் சொல்லியிருக்கிறார்.

'சொல்லாத சொல்', 2006ல் நடைபெற்ற பெண் எழுத்தாளர்களுக்கான சிறுகதைப் போட்டியில் முதல் தகுதி பெற்ற கதை.

'அவள்', 'சாயல்', 'பாலா' ஆகிய கதைகள் சிங்கப்பூர் தொடர்புகொண்டவை. 'பாலா'வில் சொன்னதைச் செய்யும் கையாளாக, எடுபிடியாகத் திரியும் அசட்டு பாலாவுக்கும் ஓர் அரிய அதிர்ஷ்டம் வருகிறது. சிங்கப்பூரிலிருந்து சொத்து சுகங்கள்! ஆனால், அந்த வெள்ளை உள்ளமோ அதைத் தூக்கியெறிந்து விட்டு வீட்டு வேலைகளை வழக்கம் போலத் தூக்கிச் சுமக்க ஓடுவது நெகிழ்வைத் தருகிறது.

'ஒரே கேள்வி', 'பொன்சாய்', 'நான்கிலக்கம்' ஆகிய கதைகள் முற்றிலும் சிங்கப்பூர் எண்ணையில் பொறித்துச் சுட்டெடுக்கப்பட்ட பலகாரங்கள்! சுவை சுமார் தான் என்றாலும், பள்ளிக்கூடக் கல்லூரி இளசுகளைச் சுற்றியோடும் நிகழ்ச்சிகளைக் கொண்டவை. 'நான்கிலக்கம்' கதையில் சீனப்பிரயோகம் சற்று மிகையாகத் திணிக்கப்பட்டிருப்பதைத் தவிர்த்திருக்கலாம் என்பது என் தனிப்பட்ட கருத்து. உள்ளூர் வாசகர்களுக்கு இந்த 'சப்ஜெட்' சற்று அலுத்துப் போனது. தமிழக வாசகர்கள் இதை 'டைஜெஸ்ட்' பண்ண சிரமப்படுவர். சிங்கப்பூரில் பேசும் தமிழ் மாறி வரும் இந்நாளில் 10 ஆண்டுகளுக்கு முன்னான பேச்சுத் தமிழை வலிந்து புகுத்துவது போல் அமையக் கூடாது என்பது என் கருத்து.

நன்றாக வளரும் ஓர் எழுத்தாளரை வளர்ந்த எழுத்தாளராக மாற்றும் அரிய வாய்ப்பு வாசகர்களுக்கும் கிடைத்திருக்கிறது. ஜெயந்தி சங்கரின் 'மனுஷி' மதி நிலையத்தின் வெளியீடு. இங்கு, இது தவிர மற்ற தொகுப்புகளான 'திரைகடலோடி', 'பின் சீட்' மற்றும் 'நாலேகால் டாலர்' கிடைக்கும்.

நன்றி: முல்லைச்சரம்

Thursday, May 06, 2010

'பின் சீட்'
- பாஸ்டன் பாலாஜி


கங்கா பிரவாகமும் தீபாவளி விருந்தும்


இணையத்தில் கிடைக்கப்பெற்ற அந்த வார கல்கியின் இரண்டொரு பக்கங்களை அச்சுப் பிரதி எடுத்து வந்திருந்தேன். தவறுதலாக தரையில் விழுந்திருந்தது. இரண்டாம் வகுப்பு படிக்கும் மகள் ஓடி வந்தாள். இலையுதிர் மரங்களில் இருந்து விழும் வண்ணம் மாறிய இதழ்களை கவனியாமல் அவசரமாக ஓடும் நதி போல் அவற்றை மிதித்துக் கொண்டே அன்றைய தினத்தில் நடந்தவற்றை சொல்லி முடிக்கும் வேகத்துடன் விவரித்துக் கொண்டிருந்தாள்.

அவளைக் கையமர்த்தி, 'எதன் மேல் நிற்கிறாய் தெரியுமா? சரஸ்வதி!' தொட்டு ஒத்திக் கொள்!' என்று கோபமும் அதிகாரமும் கலந்த அணைக்கட்டாய் அவளை நிறுத்தினேன்.

'பின் சீட்' தொகுப்பில் வரும் கதைகளும் இப்படித்தான்.

வாழ்க்கையில் புறக்கணிக்க எத்தனிக்கும் விழுமியங்களையும் மறக்க விரும்பும் கோட்பாடுகளையும் விட்டுவிட்ட கலாச்சாரக் குழப்பங்களையும் முரணாக வினாக்கள் ஆக்கும் தொகுப்பு.

மொத்தம் பதினாறு சிறுகதைகள். சிங்கை சஞ்சிகைகள் கல்கி மற்றும் இணைய இதழ்களில் வெளியானவற்றின் தொகுப்பாக மதி நிலையத் தொகுப்பாக வெளியாகியுள்ளது.

ஒவ்வொன்றிலும் பலவிதமான நாயகர்கள் தென்படுகிறார்கள். அம்மா கோந்துகள்; மக்கள் செல்வம் தங்களுடன் பசையாக இருக்க விரும்பும் பெற்றோர்கள்; பற்றற்ற மாந்தர்கள்; ஆசையை விட நினைப்பவர்கள்; விட்டதாக நினைப்பவர்கள். எல்லோரையும் உலாவ விட்டு அடர்த்தியான கதைகளில் மூழ்க வைக்கிறார் ஜெயந்தி சங்கர். நகைச்சுவை அரிதாகவே எட்டிப் பார்க்கிறது. வெரைட்டியான சிங்கப்பூரில் உரையாடல்களின் செழுமை மூலம் எட்டு திசைகளாக விரியும் சம்பவங்கள்.

நதி பெருக்கெடுத்து ஓடுகிறது. கரும்பு ரசம் போன்ற சுவைநீர், கடலில் திடீரென்று கலந்து உப்புத் தண்ணீர் ஆகிறது. 'அம்மா பேசினாள்' கிரியும் மகாமக நதியாக சாதிக்க நினைத்து ஓடிப் போய் களைக்கிறான். குடிக்கத் தகுதியற்ற நீரானாமோ என்று சோம்பித் துவளாமல், கயலும் கெண்டையும் எதிர்நீச்சலடிக்கும் சூழலை அமைத்துத் தர ஆசைப்படுகிறான்.

புத்தகத்தின் தலைப்புக் கதையான 'பின் சீட்' தமிழ் சினிமா போல் சூடான திரைக்கதையாக விரிகிறது. சிறு வயது மதிப்பீடு போராட்டங்களினால் ஏற்படும் நெருக்குதல்கள்; பெண்களைத் தவறாகப் புரிந்து கொள்ளுதல்; நாயகி தீபா, 'தம்பிக்கு எந்த ஊரு' ரஜினியாக மனமாற்றம் அடைதல்; நம்பர் ஒண்ணாக இருப்பதை விட உச்சங்களைத் தொடுபவர்களை உருவாக்கும் மனப்பக்குவத்தை எட்டுதல் போன்ற மேலாணமையும் மசாலாவும் கலந்த கதை.

- மேலை நாட்டுக் கலாச்சாரமான concierge services-ஐ அறிமுகப்படுத்தும் 'சேவை';
- மக்களை எடை போட்டு நிர்தாட்சண்யமாக்கும் நிறவெறியையும், செல்நெறி தேர்ந்ந்தெடுத்தல் குழப்பங்களையும் வெளிக்கொணரும் 'கண்ணாலே பேசிப் பேசி';
- காலத்திற்கேற்ப காலணிக்குள் நுழைந்து பொருத்திக் கொண்ட ஏபிசிடிக்களையும், பழைய செருப்புக்குள் தைத்து விடப்பார்ர்ப்பவர்களின் நடுக்கங்களையும் சமாதானப்படுத்தும் 'பார்வை'.

பல்வேறு களங்களில் பயணிக்கும் சிற்றருவிகள்.

ஓடத்தில் பேரருவியாக என்னை மிகவும் ஆர்ப்பரிக்க வைத்தவையாக 'ஜேட் வளையல்', எந்தையும் தாயும், அக்கா மற்றும் திரவியம் ஆகியவற்றை குறிப்பிடலாம்.

நிறம் பார்த்தோ வயசைப் பார்த்தோ அன்பு உருவாகாது. 'மிருகா' என்றழைக்கும் கிழவியின் பாசம்; ரங்கோலியாக வாழ்க்கையை ரசிக்கும் கிழவியின் பவள வளையல் குறியீடு; உற்றவருக்கு உடல்நலம் சரியில்லை என்னும்போது உள்ளார்ந்து எழும் மனக்கிலேசம்; கோடை கால நூறு பாகை வெப்பம் எல்லோரையும் சுட்டெரிக்கும். சத்தியமான சூரியனின் கதிர் போல் அனைவருக்குள்ளும் தகிக்க வைக்கும் மனிதத்தை வெளிக்கொணரும் கவிதையான கதை 'ஜேட் வளையல்'.

பெண் எழுத்தாளரின் மெல்லிய குரல் வெளிப்படும் ஆக்கமாக 'அக்கா' . வீடற்ற முதியவர்களின் நிலை குறித்து உணர்த்தும் 'திரவியம்'. வீடிருந்தும் வாசலிருந்தும் அனாதரவாகி அன்னியப்படும் மாடி வீடுகளைத் தொடும் 'எந்தையும் தாயும்'. ஒவ்வொன்றும் முத்திரைக் கதைகள்.

அக்கா மற்றும் திரவியம் சிறப்பாக எடுத்தாளப்பட்டிருந்தாலும், பளிச்சென்ற முடிவுகளும், அவை உணர்த்தும் தீர்ப்புகளும் சற்றே நெருடலாகவே உள்ளன. உரத்துப் பேசாமல் உணர்ச்சிகளை மட்டும் பேச விட்டிருந்தால் மேலும் மெருகேறியிருக்கும்.

இதே பாணியில் 'அப்பாவின் மனைவி' நாவலுக்குரிய செறிவுடனும் கதாபாத்திரங்களும் கொண்டிருக்கிறது. 'தலைச்சன்' அப்பாவின் மனமாற்றங்களும் சடாரென்று நிகழ்ந்து நம்ப இயலாதவொன்றாக ஆக்குகிறது. ஆசிரியர் இதே பின்புலத்துடன் விரிவாக பிறிதொரு புனைவு வடிவத்தில் இவற்றைக் விரிவாகக் கையாண்டால் நிறைவாக இருந்திருக்கும்.

ஜெயந்தி சங்கரின் பல கதைகளில் போதனையும் ஊடே இடம்பெற்றிருக்கிறது. குறிப்பாக 'உன் காலணிக்குள் நான்' பள்ளிக்கூட Moral Science பாடம் போல் தென்பட்டது. குடிகாரனின் லீலைகளை விவரிக்கும் 'நான் அவனில்லை'யும் மகப்பேறின் மகத்துவத்தை முன்வைக்கும் 'மழலைசொல் கேளாதவ'ரும் திறம்படக் கையாண்டிருந்தால், தற்போதைய நிலையில் வாசகனுக்கு குற்றவுணர்வு கலந்த அயர்ச்சிக்கு பதிலாக, சரியான தாக்கங்களைக் கொடுத்திருக்கும்.

இந்தத் தொகுப்பில் நான் முன்னமே வாசித்திருந்தது 'கடைசிக் கடிதம்' மட்டுமே. மீண்டும் வாசிக்க ஆரம்பிக்கும் முன்னே மனத்தில் தங்கிப் போன நினைவுகளை மீட்டெடுத்து, மீள்வாசிப்பில் மறக்கவியலாத நாவலின் பன்முகப் பரிமாணங்களை வாசகனுக்குள் பாய்ச்சும் தன்மையுடன் விரிந்தது.

பிரச்சினைகளைக் கண்டு ஓட வேண்டுமா? தன்னால் தீர்வு காண முடியாத அச்சத்தால், பிறரின் முடிவுக்கே விட்டுச் செல்வது சிறந்ததா? பேசாப்பொருளை எப்படி அறிமுகம் செய்வது? வாழ்க்கையில் எடுத்த முடிவுகள் சரிதானா? தவறு என்றால் எப்போது மாற்றிக் கொள்ளலாம்? மன்னிப்பு எதற்கு தேவை? யாருக்கு பாவம்? யார் பாவம்?

ஒவ்வொரு கதையிலும் வினாக்களும் கதாவாசகனின் அனுபவங்களுக்கு ஏற்ற அர்த்தங்களும் புலப்பட்டாலும், அவை யாவும் மிக சிறப்பாக 'கடைசிக் கடித'த்தில் வெளியாகியுள்ளது.

மஞ்சள் ரிப்பன், ஸ்பாஸிர்ரிஸ் போன்ற வினோத பதங்களை சிங்கப்பூரை எழுத்தில் மட்டுமே தரிசித்தவர்களுக்காக இன்னும் விரிவாக எடுத்துரைத்து லாவகமாக கதையில் விவரித்து, தெரியாத விஷயங்களை அறிமுகம் செய்வித்திருக்கலாம். கதைகளில் பெரும்பாலானோர் குற்றமற்ற உத்தமராக இருப்பதை போல் வார்த்தைகளில் வரும் பிழைகளைக் களைந்தெடுத்தால் வாசிப்பு ஈர்ப்பு அதிகரிக்கும்.

பாரத கண்டத்தை விட்டுப் போனாலும் தீபாவளி கொண்டாடுவது தொடர்கிறது.

பத்தாவது படிக்கும் வரை ஆயிரம் வாலா-வா அல்லது அணுக்கத்தில் ஆட்டம் பாம் போடுவதா என்னும் போட்டா போட்டி. கொஞ்சம் கெத்து வந்த வயதில் ரேமண்ட்ஸே வாங்கித் தைக்க அப்பா தயார் என்றாலும் கேப் காக்கியோ, ஏபர்கோம்பி •பிட்ச் பொன்னெழுத்துப் பொறிக்கப்பட்ட ஆடையோ தாங்கி உலா வரும் ஒளிக்கதிர் போட்டி. தலை தீபாவளிக்கு மிடுக்கு; ஊர் விட்டு ஊர் வந்திருந்த போது கொண்டாடிய ராம் லீலா மேளா; அமெரிக்காவோ ஆப்பிரிக்காவோ, அயல்நாட்டில் இருக்கும் பத்து தெற்காசிய குடும்பங்களைக் கஷ்டப்பட்டு ஒன்றுகூட்டி திருவிழா கொண்டாட்டம்.

பெற்றோரை விட்டு, சொந்த ஊரை விட்டு தள்ளி இருந்தாலும், தடாலடியாக பண்டிகை தினத்தன்று 'உள்ளேன் அய்யா' போட்டு, சாப்பிடத்தெரியாத தலைவாழை இலையில் அஜீரணம் தரும் எண்ணெய் சமாச்சாரம் தொட்டு திரட்டிப்பால் இரண்டாம் முறை வாங்கி, பூண்டு ரசத்தை கொஞ்சம் தரையில் இருந்து எடுத்து இலைக்குள் தள்ளி, தயிர் சாதத்துக்குப் பிறகு இராஜாவாக பிறக்கும் ஆசையில் பாயசம் சாப்பிட சிரம்பப்பட்டாலும் வயிறு முட்ட வைக்கிறது பின் சீட் தொகுப்பு.

சுற்றாரும் வம்பும் இனிப்பும் தீபாவளி லேகியமும் கலந்து பூர்விகத்தை திரும்பிப் பார்க்க சொல்லும் விருந்து.


பின் சீட் (2006)

பக்கங்கள் 153/ விலை: ரூ 66

வெளியீடு:

மதி நிலையம்
2/3 4வது தெரு,
கோபாலபுரம்
சென்னை - 600086