Tuesday, April 06, 2010

ஏழாம் சுவை

நூலைப் பற்றி........


- புலவர் செ. இராமலிங்கன்


புதுச்சேரி - மின்னிதழ்






எழுத்தாளர் திருமதி ஜெயந்தி சங்கர் எழுதிய, “ஏழாம் சுவை” என்னுங் கட்டுரைத் தொகுப்பில் “ஆவிகள் புசிக்குமா?” தொடங்கி “ஏழாம் சுவை” ஈறாகப் பதினொன்று கட்டுரைகள் இடம்பெற்றுள்ளன. கட்டுரைகள் அனைத்திலும் சிங்கப்பூரை அடுத்தடுத்துள்ள மலேசியா, ஜப்பான் போன்ற தீவு நாடுகளில் பயின்று வரும் பண்டைய நிகழ்வுகள், விழாக்கள் பற்றிய செய்திகளை ஒப்பாய்வுடன், நல்ல எளிய தமிழ்நடையில் ஆசிரியர்க்கே உரிய பாணியில் வரலாற்றைக் கோடிட்டுக் காட்டுவதாக அமைத்திருக்கிறார்.



“ஆவிகள் புசிக்குமா?” என்னுங் கட்டுரையின் முன்னுரையாக சீன நாட்டுச் சிறுகதையொன்றை புத்த மதத்தில் வழங்கி வருவதை கூறுகையில், “ சீன புராணப் பாத்திரமான மூலான் தன் அம்மாவை மேலுலகத்திற்கு காணச்சென்றான். அம்மூதாட்டி உயிரோடிருக்கையில், மிகவும் சுயநலவாதியாகவும், தீயவளாகவும் இருந்ததால், மேலுலகில் முட்படுக்கை மீது கிடப்பதைப் பார்க்க நேரிடுகிறது. ஆவியுருவிலிருந்த அவள் மிக்கப் பசியோடு துன்பப்படுவதைக் கண்டு அவளுக்கு உணவூட்ட முயலுகையில், ஒவ்வொரு முறையும் உணவுக் கவளம் வெறும் நீறாகப் போகின்றது. இதனால் வருந்திய மூலான், பூமிக்குத் திரும்பித் தன்னுடைய புத்த ஆசானிடம் அம்மாவைக் காக்கும் வழியினை கேட்கையில், அவர் அவனை உணவு, பானங்கள் முதலானவற்றைத் தயாரித்து முன்னோர்களின் ஆவிகளுக்குப் படையலிட வேண்டுமெனக் கூறுகிறார். பின்னர் பௌத்த பிக்குகளும் பிக்குனிகளும் கூடி மந்திரங்கள் ஓதிய பிறகே அத்தாயின் பசி போகிறது. இதன் பிறகு புத்த பிக்குகளுக்கு முன்னோர் நினைவாக உணவளிக்கும் வழக்கம் வந்தது....”, என்கின்ற சீனர்களின் மரபு வழிக் கதையின் வாயிலாக, ஆவிகள் புசிக்கும் என்பதை கட்டுரையில் விளக்கியிருக்கிறார்.



நாளடைவில் சீனர்கள் இவ்விழாவினை ஒரு மாதம் கொண்டாடி வரத் தொடங்கி இருக்கின்றனர். இந்த ஒரு மாத காலத்தில், ஆவிகள் தங்கள் சுற்றத்தினர் அருகில் பாம்பு, வண்டு, பறவை, புலி, ஓநாய், நரி முதலான எந்த வடிவத்திலும் வரும் என்பதாலும்; அவை மனிதர்கள் உடலில் புகுந்து மன உளைச்சலை, மனநோயினை ஏற்படுத்தும் என்பதாலும், மறக்காமல் ஆண்டுதோறும் உணவளித்து அன்பு செலுத்துவோரின் குடும்பத்திற்கு செல்வம் கொழிக்கச் செய்து சிறப்புகளை உண்டாக்கும் என்பதாலும், மேலும் சீனர்கள் இக்கால கட்டத்தில் பய உணர்வுடன் நடந்து கொள்வர் என்பதை இக்கட்டுரை வாயிலாக அறிய முடிகிறது.



மண்ணுலகில் வாழ்ந்த காலத்தில் விரும்பிப் பயன்படுத்திய பொருட்களையும், விரும்பியும் கிட்டாத பொருட்களையும், பெரிய அளவில் பொம்மைகள் போல் செய்து, தீயிட்டுக் கொளுத்தி ஆவிகளுக்குப் படைப்பது, சீனர்கள் வாழும் அனைத்து நாடுகளிலும், வழக்காக இருந்து வருவதை, இதற்காக பல அங்காடிகளும், தொழிலாளர்களும் ஈடுபட்டிருப்பதை கட்டுரையாளர் படம் பிடித்துக் காட்டுகிறார். இன்றைய அறிவியல் உலகில் வாழும் மக்களின் எண்ணங்களையும், கருத்துகளையும் பகுத்தறிவுடன் கூறியச் சீனத் தத்துவ அறிஞர் கன்பூசியசின் சீடர் ஒருவர் ஆவிகளுக்கு எப்படித் தொண்டு செய்ய வேண்டும் எனக் கேட்டதற்கு, “மனிதனுக்குத் தொண்டு செய்யாத போதில் ஆவிகளுக்கு எப்படித் தொண்டாற்றுவாய்? வாழ்வையறியாத போதில், சாவை எப்படியறிவாய்?” என்ற கன்பூசியசின் வினாவுடன் கட்டுரையை முடித்திருக்கும் உத்தி, கட்டுரையாசிரியரின் மனித நேய உணர்வை வெளிப்படுத்துகிறது.



இத்தகைய ஆவிகள் பற்றிய கட்டுக்கதைகள் எல்லா நாடுகளிலும் உள்ளன. வளர்ந்த நாடுகள்கூட அறிவியல் நுட்பங்களைக் கையாண்டு நம்பமுடியாத பகுத்தறிவுக்கு ஒவ்வாத கதையமைப்புகளைக் கொண்ட பல திரைப்படங்களை வெளியிடுகின்றன என்பது இங்கே குறிப்பிடத்தக்கது. மறைந்த நம் முன்னோர்களை நினைவுகூர்ந்து, அவர்கள் காட்டிய நல்வழியில், அவர்கள் விட்டுச்சென்ற குடும்பப் பணிகளையும், பொதுத் தொண்டுகளையும் கடமையெனக் கருதி, நாம் செயலாற்ற வேண்டும் என்பதற்காகவே, இத்தகைய கட்டுக் கதைகளை பழங்காலத்தில் புனைந்துள்ளனர் என்பதை “ஆவிகள் புசிக்குமா” கட்டுரை நமக்கு உணர்த்துகிறது.



ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம், என்பதற்கேற்ப, மற்ற பத்துக் கட்டுரைகளும் மிக நன்றாகவே அமைந்துள்ளன. அவற்றையும் படித்து இன்புறுதல் சுவைஞர்களின் கடமையாகும்.



ஏழாம் சுவை (கட்டுரைகள்)

வெளியீடு

உயிர்மை பதிப்பகம்,
எண்:11/29, சுப்பிரமணியம் தெரு,
அபிராமபுரம், சென்னை-600018,
தமிழ்நாடு, இந்தியா.
தொலைபேசி எண்: 091 - 044 - 24993448.
மின்மடல்: uyirmmai@yahoo.co.in

No comments: