Sunday, March 31, 2013

ஜெயந்தி சங்கரின் ‘திரிந்தலையும் திணைகள்’




                                         --    சுப்ரபாரதிமணியன்


தமிழ்ச் சமூகத்தை வேர்களோடு பிடுங்கி வேறெங்கும் தனியே நட்டு விட முடியாது. வாழ்வியலும் உறவுகளும் தமிழமும், புலம்பெயர் இடமும் என்று அலைக்கழிந்து கொண்டே தான் இருக்கும். இந்த அலைக்கழிப்பை தமிழ் சமூகத்திற்கானதாகக் கொண்டு எப்போதும் இயங்கி வருபவர் ஜெயந்தி சங்கர் அவர்கள். சிங்கப்பூர் வாழ் தமிழர்களின் (ஓரளவு மேல் தட்டு வர்க்கம், மத்திய வர்க்கம்) சமகால வாழ்வை கூர்ந்து பார்த்து எண்ணற்ற சிறுகதைகள், நாவல்கள் மூலம் தொடர்ந்து பதிவு செய்து சிங்கப்பூர் இலக்கியத்தில் தமிழர் வாழ்க்கைப் பதிவுகளை முக்கியத்துவம் உள்ளதாக்கி இருக்கிறார் என்பது அயலக இலக்கியச் சாதனையில் ஒன்றாகவும் சொல்லலாம். அவரின் சமீபத்திய திரிந்தலையும் திணைகள்நாவலில் இந்திய சமூகமும், சிங்கப்பூர் சமூகமும் என்று மாதிரிப் பாத்திரங்களைக் கொண்டு இருநாட்டிலும் வாழும்  சாதாரண சமூகங்களின்  படிமங்களைக் காட்டியிருக்கிறார். இந்நாவல் சாதாரண மத்தியதரத்து மக்களின் சின்னச் சின்ன கனவுகளையும், அதை எட்ட முயலும் முயற்சிகளையும் கொஞ்சம் சிதைவுகளையும் காட்டுகிறது.
   
சுப்பையா, சரவணனின் வீடு பற்றிய கனவுகள், இரண்டாம் திருமணமாவது நல்லபடி அமைய வேண்டுமென்ற ரேணுவின் கனவுகள், சரவணன்-பத்மாவின் சாதாரண லகிய வாழ்க்கைக் கனவுகளைப் பற்றி நாவல் பேசுகிறது. குழந்தைகளின் உலகம் பற்றி அவரின் சிந்தனை தொடர்ந்து அவரின் படிப்புகளில் பிரதிபலித்துக் கொண்டே இருக்கிறது. அர்ச்சனாவின் இயல்பான உலகமும், நவீனின் உளவியல் ரீதியான முரண்பட்ட உலகமும்  எதிர்மறை அனுபவங்கள்  கொண்டவை. சரவணன்-பத்மா,  ரவி-ரேணுவின் உலகங்களும் மறு பதிப்பானவை.  சகமாணவன் ஸுஹாவ்வின் குறும்புகள் நிறைந்த உலகமும், ரவியின் மனப்பிறழ்வு நடவடிக்கைகளால் அவனது மகன் நவீனின் எதிர் விளைவுகளும் நுணுக்கமாகச் சொல்லப் பட்டிருக்கின்றன. குழந்தைகளின் உலகம்  போலவே முதியவர்களின் உலகத்தையும் நுட்பமாகக் காட்டுகிறார். பருத்த உடம்புடைய அமாட்டின் நடத்தைகள், லீ லிங்கின் மரணம் அதுவும் கொலையில், சுப்பையாவின் சக்கர நாற்காலி வாழ்க்கை என்பதாய் விரிந்து கொண்டே போகிறது. இந்த வயதானவர்களின் உலகமும் இளைய தலைமுறையினருடன் ஓடிக் கொண்டே தான் இருக்கிறது. அவர்களுக்குக் கோவிலுக்கு/வாக்கிங் போ, பழனி திருவண்ணாமலை என்று புனித யாத்திரை போகப் பிடித்திருக்கிறது. ஒரு வகையில் இந்த வித்தியாச உலகத்தைக் காட்ட இவை உப்யோகப்படுத்தப்பட்டுள்ளன.

சிங்கப்பூர் நகரின் வளர்ச்சியூடே இவர்களின் வாழ்க்கையும் ஓடிக் கொண்டிருக்கிறது. முருகன் கோவில் கட்டப்படுதல், விரிவாக்கத்தில் சிதைபடுகிற இடங்கள், வெள்ளையர் காலம், செம்பவாங்கில் சாலை வளர்ச்சி என்று தொடர்கிறது. லந்தை மரம் பாலசுப்ரமணியர் பின்னர் புனிதமரம் பாலசுப்ரமணியன் என்று பெயர் மாறுவது, வெள்ளைக்காரனின் பெருந்தன்மை ஆகியவை காட்டப்படுகிறது.

காலம் மெல்லிய நதியாய் நாவல் முழுவது ஒடிக் கொண்டிருகிறது. இந்திரா காந்தி சுடப்பட்ட பள்ளிக் காலம், யிஷுன் ஸ்ரீ மகா மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம், முருகனைத் அகற்றிவிட்டு தண்டவாளம் போடும் செம்பவாங் ம்ஆர்டி காலம், தூனே மேரா தில் லேலியா படத்திரையிடல் காலம் என்று நுணுக்கக் குறிப்புகளால் நாவலின் காலம் கதையில் கால் பதியாத மனிதனின் ஓட்டம் போல ஓடிக் கொண்டே ருக்கிறது. க்குறிப்புகள் நாவலைக் காலம் சார்ந்து நகர்த்திக் கொண்டே இருப்பது முக்கிய அம்சம்.
.          
ரவியின் நடத்தையில் இருக்கும் மனப்பிறழ்வு அம்சங்கள் குடும்பத்தை திடுக்கிடச் செய்கின்றன. அதற்கான காரணங்கள் சரியாக முன் வைக்கப்பட்டிருகிறது. இந்தியாவிலும் சிங்கப்பூரிலும் என்று மாறி மாறி தமிழ்க் குடுமபங்களின் வாழ்க்கை பத்மா, ரேணுகா குடும்பங்கள் மட்டுமின்றி கவிதா, ரேவதி, தர்ஷினி, மீனா குடும்பங்களின் வாழ்க்கை முறையாலும் நீள்கிறது. எல்லா மனிதனும் அணைத்துக் கொள்ள நீளும் இடங்களிலெல்லாம் அகப்படுபவர்களைச் சேர்த்துக் கொள்வது போல் இந்த கதாபாத்திரங்கள் வந்து சேர்கின்றன. இந்திய வாழ்க்கை, சென்னை என்று மட்டுமில்லாமல் பூனா, மும்பை, தில்லி என்று காட்டப்படிருகிறது. இந்தியச் சமூகத்தின் பல்வேறு கலாச்சார நிலைகளையும், மொழி சார்ந்த நிகழ்வுகளையும் முறையாக எடுத்தியம்ப இவ்விரிவாக்கம் உதவுகிறது. ஆனால், அரசியல் ரீதியான முனைப்புகளோ நிகழ்வுச் சிதறல்களோ இல்லாமல் இருப்பது தமிழ் சமூகம் அரசியலை புறந்தள்ளி விட்டு வாழ்வைக் கட்டமைப்பது வருத்தமே தருகிறது.

      இதில் வரும் சீன மனிதர்களும் வாழ்க்கையும் நாவலாசிரியரின் சீனப் படைப்புகளின் மீதான அக்கறையும் சீன மொழிபெயர்ப்புப் பணிகளையும் நினைவூட்டுகிறது. சீனப்புத்தாண்டு கொண்டாட்டங்கள், சீனக்கோவில்கள், சீனர்களின் குணநலன்கள் என்று  சில முக்கியப் பதிவுகளையும் இந்நாவலில் கட்டமைக்கிறார். அவரது கடைசி இரண்டு நாவல்களான மனப்பிரிகை, குவியம்  சரியாகக் கவனிக்கப்பட்டிருக்க வேண்டியவை.  சிங்கப்பூர் தமிழர்களின் வாழ்க்கையை அவ்வளவு கூர்மையாக அவதானித்து நேர்கோட்டுப்பாணி தவிர்த்த வடிவத்தில் வெளிப்படுத்தியிருந்தார். 

 ‘வாழும் புத்தர்  என்ற  இவரது சமீபத்திய  மொழிபெயர்ப்புக் கதை இவ்வாறு முடிகிறது - “நிச்சயமாக இவ்வுலகில் தெய்வங்கள் இருக்க முடியாது. ஆனால் முட்டாள்த் தனத்தினால் எதன் மீதாகிலும்  முக்கிய நம்பிக்கை வைக்கவும்  மனிதன் தெய்வங்களை உருவாக்குகிறான். சக மனிதர்கள்  அவனை வணங்கும் போது தானும் தெய்வம்தான் என்றே  எண்ணத் தலைபடுகிறான்.  தெய்வமாக நடந்து கொள்ளவும்  ஆரம்பிக்கலாம். மனிதர்களும் முன்பை விட அதிகமாக அவனை நம்பவும் பைத்தியமாக வழிபடவும்  ஆரம்பிக்கலாம். மக்களுக்குக் தெரியாது அவர்கள் ஏமாற்றப்பட்டிருப்பது. சொல்லப் போனால் தெய்வமாக்கப்பட்டிருக்கும் மனிதனுமே ஏமாற்றப்பட்டிருக்கிறான். ஆனால், காலம் செல்ல அம்மனிதன் வேறு வழியில்லாமல் தெய்வத்தைப் போலவே நடக்க முயற்சிக்க வேண்டியதிருக்கிறது. இது மக்களை மேலும் முட்டாளாக்கும் வேலை. இதே போன்று ஏமாற்று வேலைகளில் பல்லாண்டுகள் கழிந்து போயின.  அவ்வருடங்கள்  அபத்தங்கள்  நிறைந்தவை. அபத்த வருடங்கள் எல்லாம் போனது போனதுதான். அதே மக்களால் தான் வரலாறும் எழுதப்படும் என்பதுதான் மிகவும் வேடிக்கை.

அபத்த உலகம் தான். அபத்த நிகழ்வுகள்தான். இந்த அபத்தத் தன்மை நவீன மிகுவேக வாழ்க்கையில் விரவி விட்டது. “போக்குவரத்து வசதிகள் மேம்பட்ட வாழ்வில் நிலப்பரப்புகளின் எல்லைகள் கலந்து மங்கி மறந்து விட்டதில் ஒவ்வொரு தனி மனிதனும் தனியொரு  திணையாகித் திரிவதை உணர்ந்து’, அதை இலக்கியப் படிமாக்கியிருக்கிறார் ஜெயந்தி சங்கர். மனப்பிரிகை, குவியம் போன்ற  முந்தைய நாவல்களில் கட்டமைக்கப்பட்ட நேர்கோட்டு வடிவச் சிதைவு,  பாகங்களின் நிரப்புதலில் டைரிக்குறிப்புகள், குறுஞ்செய்திக் குறிப்புகள், கடிதங்கள் பாணி இதிலில்லை.    நேர்கோட்டுப் பாணி கதைகூறலில் இந்திய சமூகம், சிங்கப்பூர் தமிழ்ச் சமூகத்தின் ஒரு பகுதி வாழ்க்கை நிகழ்வுகள் மூலம் சுவையாகக் கட்டமைக்கப் பட்டிருக்கிறது நாவல். 

பக்கங்கள்: 246
விலை: ரூ 175
ஆசிரியர்: ஜெயந்தி சங்கர்

வெளியீடு: சந்தியா பதிப்பகம்
புதிய எண். 77, 53வது தெரு,
9வது அவென்யூ, அஷோக் நகர்
சென்னை - 600 083, இந்தியா.
தொலைபேசி எண்: 044-24896979

நன்றி:
தீராநதி - மார்ச் 2013
அம்ருதா - மார்ச் 2013