Thursday, June 16, 2011

கவனம் பெறும் மனப்பிரிகை - நூல் விமரிசனம்




- ஆர்.வெங்கடேஷ்


சிங்கப்பூர் எழுத்தாளர் ஜெயந்தி சங்கரின் சமீபத்திய நாவல் மனப்பிரிகை. பல சிறுகதைத் தொகுதிகளையும் கட்டுரைத் தொகுதிகளையும் எழுதியுள்ள ஜெயந்தியின் இந்த நாவல் மீண்டும் சிங்கப்பூர் வாழ்வை மையமாகக் கொண்டு எழுதப்பட்டுள்ளது. தேர்ந்த எழுத்து நடையை உடைய ஜெயந்திக்கு, இந்த நாவல் முக்கியமான ஒன்றாக இருக்கும்.
நவீன வாழ்க்கைமுறையில் பல மாற்றங்கள் தொடர்ந்து நடந்துவருகின்றன. உறவுகள், மதிப்பீடுகள், நம்பிக்கைகள் என்று அனைத்திலும் இந்த மாற்றங்கள் தொடர்கின்றன. ஒவ்வொரு காலகட்டத்திலும் அந்த மாற்றங்கள் ஏற்கப்படாமல், தவறாக பொருள் ஏற்படவும் வாய்ப்புண்டு. ஆனால், ஒன்று பத்தாகி, பத்து நூறாகி, நூறு ஆயிரமாகி, மாற்றங்களைப் பலரும் ஏற்கும்போது, அதுவே அடுத்த கட்ட வளர்ச்சியாக ஏற்கப்படுகிறது.
குறிப்பாக நமது திருமண முறையில் மாற்றங்கள் ஏற்படுவதைப் பலரும் விரும்புவதில்லை. கணவன் மனைவி என்ற பிணைப்பு எப்போதும் கேள்விக்குட்படுவதில்லை. இதுதான் நமது சமூகத்தின் அடிப்படை அலகு என்பதால் அதனோடு புனிதம் என்ற அம்சமும் கூடுதலாக இணைந்திருக்கிறது.


ஆனால், நவீன் வாழ்க்கை முறை, இதையும் கேள்விக்குட்படுத்தி இருக்கிறது. திருமணம் என்ற பந்தத்திற்குப் பின்னர்தான் சேர்ந்து வாழவேண்டுமா? அதற்கு முன்னர், மனம் விரும்பும் ஒருவரோடு இணைந்து வாழ்வதில் என்ன தவறு? வாழ்க்கையை ஒருவரோடு பகிர்ந்துகொள்ளும் முன்னர், தேர்தெடுத்திருக்கும் காதலர் எல்லாவகையிலும் ஏற்றவர்தானா என்று பார்க்கவேண்டாமா? அதற்காக ஒரு வருடமோ ஆறு மாதமோ சேர்ந்து வாழ்ந்து பார்த்தால் என்ன?


இந்த மாற்றதை ஏற்பவரும் உண்டு, மறுப்பவரும் உண்டு. கலாசாரச் சீரழிவு என்று குதிப்போரும் உண்டு. தீர்ப்புக் கூறுவது இலக்கியத்தின் வேலை இல்லை. ஜெயந்தி இந்த நாவலில் அதைச் செய்யவில்லை. மாறாக, அப்படி வாழ விரும்பும் ஒரு ஜோடியின் வாழ்வை எடுத்து நாவலாக்கி இருக்கிறார். குறிப்பாக, இந்த முயற்சியைத் தமிழ்நாட்டில் செய்துபார்க்க முடியுமா என்று தெரியவில்லை. ஆனால், பல்லின சமூகமான சிங்கப்பூர் சமூகத்தில், அங்கே வாழும் தமிழர் மத்தியில் இந்தப் பழக்கம் இளைஞர்களிடையே தோன்றியிருப்பதை இந்த நாவல் எழுதிச் செல்லுகிறது.


கரு என்ற அளவில், மனப்பிரிகையின் கரு மிக வித்தியாசமான ஒன்று. அதை எப்படி ஜெயந்தி நாவலாக்கி இருக்கிறார்?


நாவலை மூன்று பகுதிகளாகப் பிரித்துக்கொண்டு, முதல் பகுதியில் சேர்ந்து வாழ முனைவது வரை கதை செல்கிறது. இரண்டாம் பகுதியில் சேர்ந்துவாழும் அனுபவமும் மூன்றாம் பகுதியில் இருவரும் பிரிந்துவிடும் பகுதியும் வருகிறது.


1. நாவலின் முதல் மற்றும் மூன்றாம் பகுதிகள் நாவலுக்கு எந்த வலுவையும் சேர்க்கவில்லை. அவற்றை நீக்கிவிடலாம். இரண்டாம் பகுதி மட்டுமே மொத்த நாவலையும் தனக்குள் கொண்டிருக்கிறது.


2. நாவல் முழுமையும் புறவயமாகவே நடைபெறுகிறது. இந்த நாவலின் கரு, முழுமையும் அகவயமானது. மற்றவர்கள் எப்படி இந்த உறவைப் பார்க்கிறார்கள் என்பதும் அதற்கு அவர்களுடைய சலனங்கள் என்னவென்றும் தொடர்ந்து பல சம்பவங்கள் மூலம் கட்டிச் செல்கிறார் ஜெயந்தி. அப்பா, அம்மா, தங்கை போன்ற பாத்திரங்கள் இப்படித்தான் கதைக்குள் வருகிறார்கள். ஆனால், கோட்டுச் சித்திரமாகவே நின்றுபோகிறார்கள். அத்தை பாத்திரம் மட்டும் சிறப்புடன் உருவாகி இருக்கிறது.


3. திருமண உறவில் அடிப்படைப் பகுதி, உடலுறவு. குறிப்பாக, இருவருக்கும் உள்ள நம்பிக்கை. திருமணம் என்ற உறவின் மூலம் கிடைக்கும் நம்பிக்கை அது. பெண், தன்னை மலரென இதழ்விரிக்கும் அற்புதம், நம்பிக்கையில் இருந்து வருவது. கணவன் என்ற உறவின் மீது உள்ள நம்பிக்கையில் இருந்து அது வருகிறது. தனக்கானவர் என்ற உறுதியில் இருந்து பிறக்கும் நம்பிக்கை அது. இந்த நம்பிக்கைதான், வாழ்நாள் முழுக்க நீடித்திருக்கப் போவது. இந்த நாவல், இந்த விஷயத்தைத் தயங்கித் தயங்கித் தொடுகிறது. மனரீதியான, உடல்ரீதியான ஒருமை இரண்டும் சேர்ந்து அமைந்தால்தான், திருமண வாழ்வு நிறைவளிக்கும். இதுபோல் சேர்ந்து வாழ்ந்துப் பார்த்து முடிவு செய்யலாம் என்று நினைக்கும் ஜோடிகளிடையே எந்த விதமான அடிப்படையின் மேல், நம்பிக்கையின் மேல், இந்தப் பாலுறவு கட்டப்படுகிறது? இந்த நாவல் இதைத் தொடத் தயங்குகிறது. அல்லது ஆசிரியர் தயங்குகிறார்.


4. சிங்கப்பூர் நவீனத் தமிழ் சமூக வாழ்க்கை முறைகள், நம்பிக்கைகள், நடவடிக்கைகள் இந்த நாவலில் சிறப்பாக வெளியாகி இருக்கின்றன. சிங்கைத் தமிழ் சமூகம், மரபுக்கும் அதிநவீனத்துக்கு இடையில் நின்றுகொண்டிருக்கிறது. இரண்டின் அம்சங்களும் அதற்குள் கலந்திருக்கிறது. தன்னை முற்றாக நவீனத்துக்குள் திணித்துக்கொள்ளவும் இல்லை, மரபை கைவிடவும் இல்லை. டிரான்சிஷன் மனநிலை, நாவலெங்கும் நன்றாக வந்திருக்கிறது.


5. கடைசியில் இருவரும் சேர்ந்துவாழாமல் போவதும், பிரிவதற்கான காரணமும் இன்னும் வலுவாக இருந்திருக்கலாம்.


6. ஜெயந்தி வளர்த்துக்கொள்ள வேண்டிய அம்சங்களில் ஒன்று, தனித்துவமான மொழி. இந்த நாவலில் பல இடங்கள், ரொம்பவும் வறண்டு இருக்கின்றன.


வித்தியாசமான கரு, சிங்கை நவீனத் தமிழ் மனநிலை - இரண்டையும் ஜெயந்தி சிறப்பாக இந்த நாலில் கொண்டு வந்திருக்கிறார். அதற்காகவே ஜெயந்தியின் மனப்பிரிகை கவனம் பெறும் நாவலாக இருக்கிறது.


நாவல்

ஜெயந்தி சங்கர்

சந்தியா பதிப்பகம்
Address: New No 77,
53rd Street 9th Ave,
Ashok Nagar,
Chennai – 600 083
Tel/Fax: 91-44-24896979
Email: sandhyapublications@gmail.com

No comments: