Thursday, June 16, 2011

மாறி வரும் சமூகத்தைப் பற்றிய நாவல் - நூல் அறிமுகம்

- நிர்மலா

புத்தகத்தை கையில் எடுத்து தலைப்பை வாசிக்கும் எவருக்கும் கதைக்களம் என்ன என்று யூகிப்பது சுலபமல்ல. எளிய வார்த்தையில் இதை ஒரு சமூக நாவல் என்று சொன்னாலும், இது சமூகத்தில் புதிதாக தோன்றி பரவிக் கொண்டிருக்கும் ஒரு கனமான விஷயத்தை லேசாகச் சொல்லிப் போகும் ஒரு நாவல். இதுவரை பேசப்படாத திருமணத்திற்கு முன் 'சேர்ந்து வாழ்தல்' என்ற சர்ச்சைக்குள்ளாகும் விஷயத்தை நாசுக்காக சொல்ல வந்ததற்காக ஆசிரியரை பாராட்டலாம். கதைக்களனை சிங்கப்பூராகக் கொண்டதில் அவருடைய புத்திசாலித்தனம் தெரிகிறது. தமிழ் நாட்டில் வாழும் தமிழ் சமூகம் இது இங்கே நடப்பதில்லை என்று சமாதானம் செய்து கொள்ளலாம், சுலபமாக.


யதார்த்தமான கதாபாத்திரங்கள், அவற்றின் பேச்சு மொழி வாசகரை உள்ளே இழுத்து அந்த கதையமைப்பில் ஒருவராக, ஒரு அமைதியான பார்வையாளராக்குவதில் வெற்றி பெறுகிறது. சேர்ந்து வாழும் கட்டத்திற்கு வாசகரை கொண்டு செல்ல எடுத்துக் கொள்ளும் நீளத்தில் அந்த விஷயம் முகத்தில் அறையாமல் ஓரளவிற்கு ஏற்றுக் கொள்ள வைக்கிறது. எல்லா கதாப்பாத்திரங்களும் 'சேர்ந்து வாழ்தலின்' சாதக பாதகங்களை அலசுகின்றன. இளைய தலைமிறையின் கருத்துகளும், பெரியவர்களின் கலாச்சார கவலைகளையும் சார்பில்லாமல் முன் வைக்கப்பட்டிருக்கிறது. எதிர்ப்புகளும் அதை எதிர்கொள்தலும் கூட.


குடும்பங்கள் என்று சொல்லும் போது சிங்கப்பூர் வாழ் கோபியோ, சந்தியாவோ நாம் அன்றாடம் காணும் இளம் வயதினரில் பெரிய மாற்றமில்லாதவர்கள். இரண்டு குடும்பத்திலும் திருமணம் தொடர்பான அனுபவங்கள், கசப்புகள், கனவுகள் எல்லாமாக அவர்களை இப்படி ஒரு ஏற்பாட்டிற்கு வருவதாக கொண்டு செல்வது நேர்த்தி. அவர்கள் மூலமாக தன்னை வெளிப்படுத்திக் கொள்ளும் சிங்கப்பூர் வாழ்க்கை, அவர்கள் பண்டிகைகள், பழக்கங்கள், உணவுமுறைகள், சீனர்களோடு கலந்து வாழும் இந்திய மக்கள்... இவற்றால் கதையோடு ஒன்றச் செய்ய ஆசிரியர் முனைந்தாலும் சற்றே உணரும் அந்நியமும் தவிர்க்க இயலாதது.


'பின்னால் வரக் கூடிய சின்னச் சின்ன சவால்களை முன்கூட்டியே அறிய அவனுக்குள் எழுந்த அடங்காத ஆர்வம் அவனுக்கே மிகவும் சுவாரஸியமாக இருந்தது. நிறையப் பேசிட ஆர்வம் கொண்டான். நம்பிக்கை வளர அந்த உரையாடல்களும், உரத்த சிந்தனைகளும் உதவுமென்று நம்பினான். எதிர்மறை அனுபவங்களென யார் வாயிலிருந்து வந்தாலும் உள்வாங்க அவனில் இருந்த கவனமும் ஆர்வமும் விடவில்லை. அவற்றைத் தனக்குள் பதிந்து கொள்வது உதவும் என்றே அவன் யோசிக்கவில்லை.'


இவ்வாறாக தொடங்கும் அவர்களின் சேர்ந்து வாழ்தல் எதிர்கொள்ளும் சவால்களும் அது அவர்களை எடுக்கச் செய்யும் முடிவுமாக.


அப்பாவின் சாவை அமைதியாக எதிர்கொள்ளும் சந்தியாவின் அம்மா கதாபாத்திரம் நிறைய உறுதியும் ஆழமுமானது. அவருக்கும் ராதா அத்தைக்கும் உள்ள நெருக்கம் அலாதியானது. அந்தக் கதாபாத்திரம் தன்னை இன்னும் கொஞ்சம் வெளிப்படுத்திக் கொண்டிருக்கலாம்.


சிங்கப்பூரின் வாழ்க்கை முறை, திருமணத்திற்கு முன்னும் பின்னும் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள், இடங்களின் பெயர்கள், சீன கதாப்பாத்திரங்கள் தமிழ் வாசகரை கொஞ்சம் தள்ளியே வைக்கிறது. எல்லா கதாப்பாத்திரங்களும் பெரும்பாலும் நல்லவர்களாயும், அல்லாதவைகளும் நியாயப்படுத்தக் கூடிய அளவில் இருப்பது இயல்பில்லாதது. ஒரு சமூக நிகழ்வை பதிவு செய்யும் ஒரு நாவலின் எல்லா கதாப்பாத்திரங்களும் வெள்ளை, வெளிர் சாம்பல் நிறங்களிலுமாய், கறுப்பென்னும் நிறமே இல்லாதது... கதாசிரியர் சிருஷ்டித்த கனவு சமூகமாக இருப்பது ஒரு குறை. நிரடும் அச்சுப்பிழைகளை கவனித்திருக்கலாம்.


குழப்பத்தில் ஆழும் கதாபாத்திரங்களின் கனவுகளாய் இடையிடையே விரியும் விசித்திர பக்கங்கள் சுவாரசியம். கடைசி பக்கங்களில் கடிதங்களில் தன்னை முடித்துக் கொள்ளும் நாவல்... மொத்தக் கதாப்பாத்திரங்களையும் மறுபடியும் நினைவுக்கு கொண்டு வந்து அலையலையாக மனதில் தங்கிவிடுகின்றது, புத்தகம் சமர்ப்பிக்கப்பட்ட அழகான உறவுகளோடு சேர்த்து.நாவல்

ஜெயந்தி சங்கர்

சந்தியா பதிப்பகம்
Address: New No 77,
53rd Street 9th Ave,
Ashok Nagar,
Chennai – 600 083
Tel/Fax: 91-44-24896979
Email: sandhyapublications@gmail.com

No comments: