Thursday, June 16, 2011

விளிம்பை நோக்கிய நகர்வு - முன்னுரை- அ.முத்துலிங்கம்


தமிழ்நாட்டில் ஒரு காலத்தில் கைகசி என்று ஒருவித கணக்கர் சாதியினர் இருந்தனர். இந்தச் சாதியில் மருமகள் மாமியாருடன் பேசமுடியாது. சமிக்ஞையில் மட்டுமே பேசலாம். நிச்சயமாக அந்தக் குடும்பங்களில் மாமியார் மருமகள் சண்டைகள் மூண்டிருக்க முடியாது. ஆனால், நாளடைவில் இந்த சமிக்ஞை மொழி அழிந்து விட்டது. இதை பாதுகாத்திருந்தால் காது கேளாதவர்களுக்கு உபயோகப்படும் ஒரு சமிக்ஞை மொழியாக இதை வளர்த்தெடுத்திருக்கலாம்.

சில வருடங்களுக்கு முன்னர் 'பெருஞ்சுவருக்கு பின்னே' என்ற தலைப்பில் ஒரு நூலைப்படிக்க நேர்ந்தது. இதை எழுதியவர் சிங்கப்பூரில் வாழும் எழுத்தாளர் ஜெயந்தி சங்கர். அவர் அந்த நூலிலே சீனப்பெண்கள் மத்தியிலே புழங்கிவந்த நுஷு மொழிபற்றிக் கூறுகிறார். ஆண்கள் அறியாத இந்த மொழியை சீனப் பெண்கள் தங்களுக்கிடையில் ரகஸ்யமாக வளர்த்து பாதுகாத்து வந்திருக்கிறார்கள். ஆதிக்கமும் அடக்குமுறையும் நிறைந்த ஆண்கள் சமூகத்திலிருந்து ஒதுங்கி பெண்கள் தங்களுக்குள் தங்கள் துன்பங்களையும் ஏக்கங்களையும் தாபங்களையும் பரிமாறிக் கொள்ளும் ஒரு மொழியாக இது பல நூற்றாண்டுகள் வாழ்ந்தது. உலகின் ஒரே பெண்மொழியான நுஷு இன்று அழிந்த மொழிகளின் பட்டியலில் சேர்ந்து விட்டது என்ற தகவலை ஜெயந்தி சங்கர் தந்திருந்தார்.

இது எனக்கு வியப்பாக இருந்தது. யார் இந்த ஜெயந்தி சங்கர் என்று தேடத் தொடங்கினேன். இந்தியாவிலிருந்து புலம்பெயர்ந்து சிங்கப்பூரில் வாழும் இவர் கடந்த பத்து வருடங்களுக்கும் மேலாக தமிழில் எழுதி வருகிறார். இதுவரை 5 சிறுகதை தொகுப்புகள், 1 குறுநாவல் தொகுப்பு, 4 நாவல்கள், 5 கட்டுரை தொகுப்புகள், மூன்று மொழிபெயர்ப்புகள் (சீன மொழியிலிருந்து ஆங்கிலம் வழி தமிழுக்கு) சிறுவர் இலக்கியம் என்று நிறையவே எழுதியிருக்கிறார் என்பதை அறிந்த போது மலைப்பு ஏற்பட்டது. தமிழ் இலக்கியத்தை நுட்பமாக அறிந்து வைத்திருப்பது போல கர்நாடக சங்கீதத்தையும் கற்றிருக்கிறார். இந்த தொகுப்பில் உள்ள இரண்டு சிறுகதைகளில் இசை பற்றிய இவருடைய நுணுக்கமான ரசனை வெளிப்பட்டிருக்கிறது.

இன்று உலகத்தின் கவனத்தை கவரும் வகையில் புலம்பெயர்ந்த எழுத்தாளர்கள் பல நாடுகளில் எழுதி வருகிறார்கள். இவர்களில் சொந்த நாட்டு மொழியில் எழுதுபவர்களிலும் பார்க்க ஆங்கிலத்தில் எழுதுபவர்களே அதிகம். இந்தியாவிலிருந்து புலம்பெயர்ந்து அமெரிக்காவில் குடியுரிமை பெற்று எழுதி பேரும் புகழும் பல பரிசுகளும் பெற்றவர் ஜும்பா லஹிரி. சீனாவில் இருந்து புலம்பெயர்ந்து எழுதி வருபவர் இளம்பெண் யீயுன் லீ. தமிழ் நாட்டில் இருந்து புலம்பெயர்ந்து கனடாவில் எழுதி வருபவர் அமீன் மேர்சண்ட். நைஜீரிய எழுத்தாளரான உவெம் அக்பானுடைய முதல் புத்தகம் திடீரென்று புகழ் பெற்று தற்போது உலகம் முழுவதும் லட்சக்கணக்காக விற்றுக் கொண்டிருக்கிறது.

இவர்கள் எல்லோருடைய நூல்களும் எக்கச்சக்கமான விற்பனையை எட்டுவதற்கும், உலகளாவிய புகழ் அடைவதற்கும் காரணம் அந்த நூல்கள் ஆங்கிலத்தில் எழுதப்பட்டதால் மட்டும் அல்ல. இந்த நூல்களை எழுதிய ஆசிரியர்கள் தாம் புலம்பெயர்ந்து வாழும் நாட்டுச் சூழலை தம் நாட்டு கண்களால் பார்த்து எழுதுகிறார்கள். தம் நாட்டு சம்பவங்களை புலம் பெயர்ந்த கண்களினால் விவரிக்கிறார்கள். அதில் தெரியும் புதுமை வாசகர்களை ஈர்க்கிறது. அவர்கள் படைக்கும் இலக்கியத்துக்கு ஒரு புதிய பரிமாணத்தையும் தருகிறது.

இந்த வகையில் தமிழில் சிறுகதை தொகுப்பாக வெளிவரும் ஜெயந்தி சங்கரின் 'தூரத்தே தெரியும் வான் விளிம்பு' நூலை சொல்லலாம். இதிலே பத்து சிறுகதைகள் உள்ளன, அதில் 4 சிறுகதைகள் இந்தியப் பின்னணியிலும், 6 சிறுகதைகள் சிங்கப்பூர் பின்னணியிலும் எழுதப்பட்டுள்ளன. சிங்கப்பூர் கதைகள் ஏன் சுவாரஸ்யமாக இருக்கின்றன என்று பார்த்தால் அவை இந்தியக் கண்களால் பார்த்து சொல்லப்பட்டிருக்கின்றன. அதே போல இந்திய பின்புலக் கதைகளை ஆசிரியர் சிங்கப்பூர் கண்களினால் பார்த்து விவரிக்கிறார். அவை புதுமையாகவும் ரசிக்கும் தன்மையுடனும் இருக்கின்றன.

சமீபத்தில் ஆங்கிலத்தில் எழுதிவரும் இரண்டு புலம் பெயர்ந்த எழுத்தாளர்களை ரொறொன்ரோவில் சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. இவர்கள் பகிர்ந்து கொண்ட சில விசயங்கள் கவனத்தில் எடுத்துக் கொள்ளப்பட வேண்டியவை. அவை ஆச்சரியத்தையும் தந்தன. அவர்களுடைய நாவல் அல்லது சிறுகதைகளில் வரும் பெயர்களைத் தெரிவு செய்வதில் உள்ள சிக்கல். பெயர்களைத் தெரிவு செய்யும் போது அவை உலகத்துக்கு பொதுவானதாக, உச்சரிப்புக்கு இலகுவான பெயர்களாக இருக்க வேண்டும் என்பது. தாங்கள் தெரிவுசெய்த கதைமாந்தர்களின் பெயர்களை பதிப்பகம் பல தடவை நிராகரித்ததாக அந்த ஆசிரியர்கள் சொன்னார்கள். உதாரணமாக 'சின்லீயு' என்று பெயர் வைத்தால் அது வாசகருக்கு ஆணா பெண்ணா என்பதுகூட தெரிந்திருக்க முடியாது, அதை நினைவில் வைக்க வேண்டும் என்றார்கள்.

அடுத்தது அந்த நாட்டு மொழிச் சொற்களை கதைகளில் கையாள்வது. இது நல்ல உத்தி. ஓர் அந்நிய நாட்டுக் கலாச்சாரத்தையும் வாழ்வுப் பிம்பத்தையும் இலகுவில் கதைக்குள் கொண்டு வந்துவிடலாம். ஆனால் அது கறிவேப்பிலை போல கதைக்கு சுவை கூட்டுவதாக இருக்கவேண்டுமே ஒழிய கதையின் வளர்ச்சிக்கு தடையாக இருக்கக்கூடாது. கதையின் ஒட்டத்தில் அந்த வார்த்தை புரியும்படியாக இருந்தால் இன்னும் நல்லது. அடிக்குறிப்புகள் வாசிப்பு வேகத்தையும் சுவாரஸ்யத்தையும் கெடுத்து விடும். பல நாவல்கள் சிறுகதைகள் என்று எழுதி அனுபவம் பெற்ற இந்த எழுத்தாளர்கள் சொல்வதில் பெரும் உண்மை இருக்கிறது என்று எனக்குப் பட்டது. ஜெயந்தி சங்கரின் சிறுகதை தொகுப்பில் அடிக்கடி சீன வார்த்தைகள் வந்து விழுந்து வாசகரை திக்குமுக்காட வைக்கவில்லை. பொருள் புரியும் விதத்தில் அவை பொருத்தமான வகையில் பயன்படுத்தப் பட்டிருக்கின்றன. பாத்திரங்களின் பெயர் தெரிவுகளிலும் போதிய அக்கறை தெரிந்தது.

இந்த தொகுப்பில் எனக்கு பிடித்தது இரண்டு விசயங்கள். ஆசிரியர் ஒரு பெண்ணாக இருந்த போதும் பெரும்பாலான அவருடைய கதைகள் ஓர் ஆணின் பார்வையில் எழுதப்பட்டிருக்கின்றன. இதற்கு நிறையக் கற்பனையும் துணிச்சலும் தேவை. இந்தச் சோதனையில் ஜெயந்தி சங்கர் வெற்றி பெற்றிருக்கிறார் என்றே சொல்ல வேண்டும். இரண்டாவதாக, அநேகமாக பெண்கள் எழுதும் கதைகளில் முன்தீர்மானங்கள் இருக்கும். கார்ஸியா மார்க்வெஸ் என்ற எழுத்தாளர் இதை calculated literature என்று சொல்வார். என்னத்தை எழுத வேண்டும் என்று எழுத்தாளர் விரும்புகிறாரோ அதை எழுதாமல் இதை எழுத வேண்டும் என்று தீர்மானித்து திட்டமிட்டு எழுதுவது. ஜெயந்தி சங்கரின் சிறப்பு அவருடைய சிறுகதைகள் முன்தீர்மானங்கள் இன்றி தன்னிச்சயாக, இயற்கை உந்துதலில் எழுந்தவை என்பது தான். அவருடைய புனைவுகளைப படிக்கும் போது இது தெளிவாகிறது.

இந்த தொகுப்பிலுள்ள முதலாவது கதை 'தேநீரகம்'. ஒரு சீனக் கிழவர் சொல்வது போல கதை அமைக்கப்பட்டிருக்கிறது. அவர் சிறுவனாக இருந்த போது தினமும் ஒரு ரிக்சாக்காரக் கிழவன் வந்து அவனை பள்ளிக்கூடத்துக்கு அழைத்துச் சென்றதை நினைக்கிறான். அப்பொழுது கம்யூனிஸ்டுகள் ஆங்கிலேய ஆட்சிக்கு எதிராக கலகம் விளைவித்த காலம். ஒருநாள் கம்யூனிஸ்டுகளை ஆட்சியினர் சுற்றி வளைத்து பிடித்து விடுகின்றனர். அன்று ரிக்சாக்காரக் கிழவன் வரவில்லை. சிதிலடைந்த ஒரு சிறிய கட்டிடம் தான் பகலில் பள்ளிக்கூடமாகவும் இரவில் தேநீரகமாகவும் இயங்கியது. அன்று பள்ளிக்கூடம் மூடியதுடன் தேநீரகமும் மறைந்துவிட்டது. கதையில் ரிக்சாக்காரக் கிழவருக்கு என்ன ஆகிறது என்று தெரிய வரும் போது மனதில் மெல்லிய நெகிழ்வு ஏற்படுகிறது. உலகெங்கும் பரந்திருக்கும் அநீதியும் அதிகார வெறியும் ஒரு கணம் நம் கண்முன்னே தெறிக்கிறது. ஒருவித ஆடம்பரமோ வார்த்தை அலங்காரமோ இன்றி எளிமையாக நேரடியாகச் சொல்லப்பட்ட கதை.

இந்த தொகுப்பில் பல சிறுகதைகள் சிங்கப்பூர் பள்ளிக்கூட, கல்லூரி பின்னணியில் சொல்லப்பட்டிருப்பதை காணலாம். 'மெலிஸாவின் தேர்வுகள்' எனக்குப் பிடித்த இன்னொரு கதை. ரகு என்ற தமிழ் இளைஞன் சொல்வது போல அமைக்கப்பட்டிருக்கும் இந்தக் கதை சிங்கப்பூர் சமுதாயத்தில் இளம் தலைமுறையினரின் வாழ்க்கை முறையை சித்தரிக்கிறது. மெலிஸா என்ற பெண் அடிக்கடி காதலர்களை மாற்றுகிறாள். ரகு என்ற பையன் மெலிஸாவுக்கும் அவள் காதலிக்கும் சீனப் பையனுக்குமிடையில் ஏற்படும் பிணக்கை தீர்த்து வைக்க முயல்கிறான். மெலிஸா ஒரு காதலனை விட்டுவிட்டு இன்னொரு காதலனுக்கு மாறுவதில் காட்டும் ஆர்வம் அவனை ஆச்சரியப்பட வைக்கிறது. ஒருநாள் மெலிஸாவிடமிருந்து குறுஞ்செய்தி ஒன்று ரகுவுக்கு வருவதுடன் கதை முடிகிறது. அதிர்ச்சியையும் மெல்லிய சிரிப்பையும் துக்கத்தையும் ஒருங்கே கொடுக்கும் முடிவு.

'எழுபது ரூபாய்' சிறுகதை இந்தியாவில் நடப்பது. அங்கே நடக்கும் சம்பவங்களை சிங்கப்பூர் கண்களினால் பார்ப்பது தான் சிறப்பு. சிங்கப்பூரில் இருந்து விடுமுறைக்காக இந்தியா வந்திருக்கும் நந்தினி என்ற பெண்ணின் கண்களினூடாக கதை நகர்கிறது. ஆட்டோ ஓட்டுநர் ஒருவரிடம் ஏற்பட்ட எழுபது ரூபாய் கடனை தீர்க்க முடியாமல் அவஸ்தைப்படுகிறார் நந்தினி. கதாசிரியரின் 'தன்னையறியாமல் லேசாகக் குனிந்து சாலையில் கடந்து போகும் ஆட்டோ ஓட்டுநர்களின் முகத்தையெல்லாம் பார்ப்பவளானாள்' என்ற வசனத்துடன் கதை முடிகிறது. எப்படி யோசித்தாலும் இந்தச் சிறுகதையை இதனிலும் சிறப்பான ஒரு முடிவுக்கு கொண்டு வந்திருக்க முடியாது என்று தான் தோன்றுகிறது.

தொகுப்பிலே எனக்கு ஆகப் பிடித்தது என்று சொன்னால் அது 'தூரத்தே தெரியும் வான் விளிம்பு' என்ற சிறுகதைதான். ஒரு பதினாறு வயதுப் பையன் சொல்வது போல கதை நகர்கிறது. அந்த வயதுப் பையனுக்கு சிங்கப்பூர் போன்ற ஒரு முன்னேறிய நாட்டில் ஏற்படக் கூடிய பிரச்சினைகள், தோல்விகள், அழுத்தங்கள் ஆகியவை அவனில் ஏற்படுத்தும் மாற்றங்களை தமிழ் சிறுகதைக்கு புதுமையான ஓர் உத்தியில் ஆசிரியர் சொல்கிறார். கதை மெதுவாக பிடிகொடுக்காமல் விரிந்து எதிர்பாராத முடிவை அடைகிறது. இப்படியெல்லாம் நடக்குமா என்று வாசகர் கேள்வி கேட்க முடியாதபடிக்கு ஒரு நம்பகத்தன்மையுடன் கதை புனையப்பட்டிருப்பது தான் அதன் வெற்றி.

ஜெயந்தி சங்கரின் கதைகளில் தொடர்ந்து ஒரு சரடுபோல ஓடிக் கொண்டிருப்பது மனிதநேயமும், காருண்யமும், அன்பும் தான். ஓர் ஆசிரியர் தன் பண்பை படைப்பிலிருந்து முற்றிலும் தவிர்க்க முடியாது. எவ்வளவு மறைத்தாலும் ஏதோ ஒரு விதத்தில் கதாசிரியரின் குணாதிசயம் அவர் படைக்கும் கதை மூலமே வெளியே தெரிந்துவிடும். ஒரு முறை தீபாவளி சமயத்தில் சென்னையில் குப்பையோடு குப்பையாகக் கிடந்த வெடிக்காத வெடி ஒன்றை மாடு ஒன்று புல்லுடன் சேர்த்து கடித்தபோது அது வெடித்துவிட்டது. மாட்டின் வாயும் முகமும் சிதைந்துவிட்ட செய்தியை தொலைபேசியில் ஒரு நண்பர் சொல்ல அதைக் கேட்டு ஜெயந்தி சங்கர் அழுதிருக்கிறார். அவருடைய அந்த மென்மையான மனம் இந்த தொகுப்பிலுள்ள ஒவ்வொரு சிறுகதையிலும் வெளிப்பட்டிருப்பதைக் காணலாம்.

இந்தச் சிறுகதை தொகுப்பில் உள்ள அதிகப்படியான சிறுகதைகளுக்கு பொதுவான ஒரு தன்மை இருக்கிறது. இந்தப் பொதுத்தன்மை 'தூரத்தே தெரியும் வான் விளிம்பு' சிறுகதையில் நிறைந்து கிடக்கிறது. இதன் காரணத்தால் தானோ என்னவோ இந்தச் சிறுகதையின் தலைப்புத்தான் தொகுப்பின் தலைப்பாகவும் மிகப் பொருத்தமாகத் தெரிவு செய்யப்பட்டிருக்கிறது. வில்லியம் ஃபாக்னர் என்ற எழுத்தாளர் சொல்வார், 'ஓர் எழுத்தாளர் தான் எழுதுவதோடு ஒரு காலமும் திருப்தியடைவதில்லை. அவர் படைப்பது எப்பொழுதுமே அவர் மனதில் நினைத்திருந்ததை எட்டுவது கிடையாது. சக எழுத்தாளர்களின் எழுத்தை ஒருவர் வென்றால் போதாது. அவரையே அவர் வெல்லவேண்டும்.'

ஜெயந்தி சங்கர் தொடமுடியாத தூரத்தே தெரியும் வான் விளிம்பை நோக்கி தன் படைப்புகளை நகர்த்தியபடியே இருக்கிறார். இந்தப் பயணத்தில் இன்னும் நிறைய அவர் படைக்க வேண்டும். என் வாழ்த்துக்கள்.


அ.முத்துலிங்கம்
13 அக்டோபர் 2009
ரொறொன்ரோசிறுகதைத் தொகுப்பு

ஜெயந்தி சங்கர்

சந்தியா பதிப்பகம்
Address: New No 77,
53rd Street 9th Ave,
Ashok Nagar,
Chennai – 600 083
Tel/Fax: 91-44-24896979
Email: sandhyapublications@gmail.com

1 comment:

துளசி கோபால் said...

இனிய வாழ்த்து(க்)கள் ஜெ.

ரொம்பவே மகிழ்ச்சியா இருக்கு!